அர்த்தமென்ன இருக்கிறது?
ரா. ராஜசேகர்
அண்மையில் ஒருநாள் சென்னை நகரின் அந்த முக்கிய அரசு மருத்துவமனையின் அருகேயுள்ள பாலத்தின் கீழே ஒரு முதியவர் அநாதையாக படுத்துக் கிடந்தார். உடலில் உயிர் இருப்பதன் அறிகுறியாக அவரது கண்கள் மட்டும் அவ்வப்போது திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தன. அவரைச் சுற்றிலும் தேநீர் கப்புகள், இட்லி பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சில்லறை நாணயங்கள் இரைந்து கிடந்தன. ஆனால் அங்கிருந்த யாருக்கும் அருகில் நெருங்கி அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
அப்போது இளைஞர் ஒருவர் அங்கு வந்தார். முதியவரின் அருகில் அமர்ந்தார். முதியவரின் தலையைத் தாங்கிப் பிடித்து, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவரது வாயருகே கொண்டு சென்று தண்ணீரைக் குடிக்க வைத்தார். சற்று நேரத்தில் பக்கத்திலிருந்த ஒரு கடைக்குச் சென்று சிற்றுண்டி வாங்கி வந்து அவருக்கு ஊட்டினார்.
இதை அவ்வழியே சென்றவர்கள் அதிசயமாகப் பார்த்துச் சென்றனர். உதவ வந்த இளைஞருக்கு மனதுக்குள் கடும் கோபம். இவர்களெல்லாம் என்ன மனிதர்கள்? நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, கொஞ்சம் சில்லறைகளை விட்டெறிவதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணுகிறார்களா? மனிதாபிமானம் என்பதே இங்கு இல்லையா?
அந்த முதியவர் விழுந்து கிடக்கும் இந்த இடத்துக்கு எதிரேதான் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு உள்ளது. எத்தனையோ போலீஸ் வாகனங்கள் இவ்வழியே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றன. அவர்கள் யாருக்குமே இந்த முதியவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லையே?
என்ன சமுதாயம் இது? கேடு கெட்ட சமுதாயம்! முதியவருக்கு உதவி செய்த இளைஞர் இப்படியெல்லாம் எண்ணி மனம் குமுறினார். இருப்பினும் முதியவரைக் காப்பாற்றும் முயற்சியைத் தொடர்ந்தார். அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்தார். “கொஞ்சம் கை கொடுத்து உதவுப்பா… இவரை எதிரே இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்’ என்றார். அந்த ஆட்டோ டிரைவரோ கேலியாக சிரித்தார். “சார்! இந்தப் பெரியவரை அந்த ஆஸ்பத்திரியில் இருந்துதான் இங்கே கொண்டு வந்து போட்டுட்டுப் போயிருக்காங்க…’
இளைஞருக்கு அதிர்ச்சி. “யார் அப்படி செய்தது?’, “இந்த முதியவருடைய சொந்தக்காரங்கதான் சார்… ஆஸ்பத்திரியில் இருந்து இவரை “டிஸ்சார்ஜ்’ செய்ததும், வீட்டுக்கு கூட்டிட்டுப் போகாம இங்கே விட்டுட்டு போய்ட்டாங்க..’
“ஏன்?’
“இவரை வச்சு பராமரிக்க முடியாதுன்னு இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டாங்க… முதியவர் பேர்ல பென்ஷன் கின்ஷன் ஏதும் கிடையாது போல…’ இளைஞருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. செல்போனை எடுத்து யார் யாருக்கோ பேசினார். பெரும்பாலானவை சமூக சேவை நிறுவனங்கள். எங்கிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. கடைசியில் தனக்குத் தெரிந்த பத்திரிகை நிருபர் ஒருவருக்கு போன் செய்தார். சற்று நேரத்தில் அந்த நிருபர் ஒரு புகைப்படக்காரருடன் விரைந்து வந்தார்.
அன்று மாலைப் பத்திரிகையில் முதியவரைப் பற்றி செய்தி புகைப்படத்துடன் வெளிவந்தது. மறுநாள் அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரின் உதவியுடன் ஒரு சமூக சேவை நிறுவனத்தில் அந்த முதியவர் சேர்க்கப்பட்டார். உயிர்போகும் நிலையில் உள்ள ஒரு முதியவருக்கு உதவ இத்தனை நீண்ட பிரயத்தனங்கள் தேவைதானா? இங்கே என்ன நடக்கிறது? பொதுமக்களை விடுங்கள். போலீஸாரும் பொதுச் சேவை அமைப்புகளும் தாமாக முன்வந்து இதுபோன்றசேவையில் ஈடுபட வேண்டாமா? பத்திரிகையில் செய்தியாக வெளிவந்த பிறகுதான் சேவையில் இறங்குவார்கள் என்றால், அதன் பின்னணியில் விளம்பர நோக்கம்தானே இருக்கிறது? உண்மையான சமூக அக்கறை இல்லையே, ஏன்?
சென்னையில் மட்டும் ஏறக்குறைய 140 சமூக சேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இத்தனை இருந்தும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபாதைகளிலும் பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களின் வெளிப்புறத்திலும் பெரும்பாலும் பாலங்களுக்கு அடியிலும் இன்னும் பல இடங்களிலும் ஆதரவின்றி நடைப்பிணமாகக் கிடக்கும் ஜீவன்களை நாம் அன்றாடம் காணத்தானே செய்கிறோம்.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாநகரங்களிலும் இதே நிலைமைதான். சரி, இந்த சமூக சேவை நிறுவனங்களெல்லாம் என்னதான் செய்கின்றன? இவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான நன்கொடைகள் கிடைக்கத்தானே செய்கின்றன. அதில் குறிப்பிட்ட சதவீதத்தையாவது உண்மையிலேயே ஆதரவற்றவர்களுக்காக செலவிடுகிறார்களா? இதையெல்லாம் கண்காணிப்பது யார்?
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதியார். அருட்பிரகாச வள்ளலாரோ “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார். இத்தகைய மகான்கள் வாழ்ந்த நம் தமிழகத்தில், சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு முதியவரைக் கவனிக்க யார் நெஞ்சிலும் ஈரம் ஏற்படவில்லை எனும்போது கோடிக்கணக்கில் சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதாக நாம் மார்தட்டிக்கொள்வதில் அர்த்தமென்ன இருக்கிறது?
நன்றி: தினமணி (31 03 2014)