கப்பலுக்கு போன மச்சான்…
கண் நிறைந்த ஆசை மச்சான் எப்பதான் வருவீங்க எதிர்பார்கிறேன்.
நான் இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்
கணவன்:
கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்சா அல்லா விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல நினைத்தது எல்லாம் தருவேன்.
மனைவி:
அக்கரைக்கு போனதுமே அக்கறையும் போயுடுச்சோ?
அன்று சொன்ன வார்தைகளின் அர்தங்களும் மாறிடுச்சோ?
சக்கரை மேல் கோபம் கொண்டு கட்டெரும்பும் ஓடிருச்சோ?
சங்கதி தெரியலையே! மன்னன் மனம் வாடிருச்சோ?
கணவன்:
அன்னமே அடிக் கரும்பே ஆவல் என்னை மீறுதடி
எண்ணை கிணறு போல எண்ணம் எல்லாம் ஊறுதடி.
உன்னை அங்கு விட்டு வந்து உள்மனசு வாடுதடி.
உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கு வாழுதடி.
மனைவி:
துபாயுக்கு பயணம் போயி வருசம் ஆறாச்சு
துள்ளி வரும் காவிரி போல் கண்ணு ரெண்டும் ஆறாச்சு
ஏக்கத்திலே நான் இங்கே தூங்கி ரொம்ப நாளாச்சு
தாயகம் வந்துடுங்க தக்க துணை நானாச்சு!!
கணவன்:
பாலைவனம் எல்லாமே சோலை வனம் ஆகுதடி
பாயரது நீராக மச்சானின் வேர்வையடி!
பாடுபட்டு சேர்கிறது பைங்கிளியே எதுக்கடி?
பாவை உனக்கு அல்லாமே பாரிலே யாருக்கடி?
மனைவி:
துல்ஹஜ் மாதத்திலே கடிதம் ஒண்ணு போட்டிங்க
நலமா சுகமானு பாசம் வச்சு கேட்டிங்க!
இங்கே எனக்கு என்னை குறை!
இருக்கிறேன் நாயகனே இன்னும் நான் சாகவில்லை!!!
கணவன்:
ஈச்சமர தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாதத்திலே தீர்ந்து விடும் ஒபந்தமே!!
ஆக்க பொருத்தவளே ஆறப் பொறு ரத்தினமே!
கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்ஷா அல்லாஹ்.. விரைவில் வருவேன்; உன் இஸ்டம் போல
நினைத்தது எல்லாம் தருவேன்.