தாய்க்கு ஒரு கவளம் சோறு!
பாத்திமா நளீரா
என்
ஒடுங்கிப் போன
நிழலுக்குள்ளே – நான்
முடங்கிக் கொள்கிறேன்.
மகனே…
உன்னைப் பிரசவித்த
வேதனையை விட
நீ
உதைக்கின்ற வார்த்தைகளால்
உயிரில் உதிரம்
கொட்டினாலும் – ஓர்
உவகைதான்
என்ன அழகாக
பேசுகிறாய்.
என்
கண்களின் ஒளியில்
எழுந்து நின்ற
நீயா… என்னை
“தடுமாறும் குருடி”
என்கிறாய்
சிரிப்புத்தான் வருகிறது
உன்
வாளைப் போன்ற
வார்த்தைகள் – நீ
சிறு வயதில்
வடித்த எச்சிலுக்கு
சமனடா.
என் சிரிப்பில்
சிறகு முளைத்து
சிகரம் கண்ட
நீ
முதுமையின்
முடிவுரையில் இருக்கும்
எனக்கு..
“அம்மா” என்ற
வார்த்தையை
யாசகம் போடுவாயா?
இமைமூடாது – உன்
இருப்பை
பாதுகாத்த – எனக்கு
இறப்பை வேண்டி
நேர்ச்சை வைக்காதே!
நீ
மதலையடா..
மரணத்தின் ரேகைகள்
என்னுள்
மண்டியிட்டது
உனக்குப் புரியாது.
விலைவாசி பட்டியலில்
விலை இல்லா – இந்த
தாய்க்கு – ஒரு
கவளம் சோற்றுக்கு
கணக்கெடுப்புச் செய்கிறாயா?
விதியிடம் – உன்
கையால்
விஷத்தைக் கொடுக்காதே
ஏனென்றால்
சுவர்க்கத்தில்
நான்தான் – உனக்கு
என் சோற்றை
ஊட்டி விடுவேன்!
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 09-03-2013