காவிக்கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம்!
செழியன்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுவதாகவும், மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது என்றும் கூறுகிறார் “இந்தியாவின் கறுப்புப் பொருளாதாரம்” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார்.
ரெட்டி சகோதரர்கள் இவ்வாறு உருவாகும் கருப்புப் பணம் டாடா, அம்பானி, அதானி முதலான முதலாளிகளால் தமக்கு சாதகமான நேரத்தில் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது; தேவைப்படும் போது இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு நியூயார்க், லண்டன், சுவிட்சர்லாந்து அல்லது மொரிசியசில் உள்ள கணக்குகளுக்கிடையே நகர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
200 2-க்கும் 2011-ம் ஆண்டுக்கும் இடையே ரூ 21 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்றும் 2011-ல் மட்டும் ரூ 5 லட்சம் கோடி வெளியில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் வாஷிங்டனைச் சேர்ந்த ரிசர்ச் அண்ட் அட்வகசி அமைப்பு கூறுகிறது.
பெயர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களுடன் வர்த்தக, வணிக உறவுகளை வைத்திருப்பதாக கணக்கு காட்டுவது, வரியில்லா சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஈவுத் தொகை, உரிமத் தொகை அளிப்பது, அவற்றின் மூலம் முதலீடு செய்வது மற்றும் வர்த்தம் சார்ந்த கருப்பை வெள்ளையாக்கும் முறைகள் (உதாரணம் : ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை இன்னொரு நாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் கிளைக்கே பத்து ரூபாய்க்கு விற்றதாகக் கணக்கெழுதுவது) மூலம் பணம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்கிறது குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிடி என்ற நிறுவனம்.
கடந்த 10 ஆண்டுகளில் பங்குச் சந்தைகளில் பங்கு விலைகளும், அன்னியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பும், ஆன்லைன் வர்த்தகத்தில் உணவுப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென்று மேல் நிலையை அடைவது, அடுத்த கட்டத்தில் ஒரேயடியாக அடிமட்டத்துக்கு பாய்வது என்று மாறி மாறி நடப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையதில்லை.
2008 ஜனவரி மாதம் 20,827 ஆக இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண் 2009 மார்ச் மாதம் 8,325-க்கு வீழ்ந்து 2010 நவம்பர் மாதம் 21,000 தொட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 2011 டிசம்பர் மாதம் 15,454 அளவில் இருந்து கடந்த வாரம் 22,500-ஐ தாண்டியிருக்கிறது. நாட்டை பேரழிவுகள் தாக்கும் போது கூட பங்குகளின் விலை அதிகரிப்பு நடக்கிறது. உதாரணமாக, 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 10 நாடுகளை தாக்கிய சுனாமியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
அடுத்த 72 மணி நேரத்துக்குள் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் வரலாறு காணாத உயரத்தைத் தொட்டது. இந்திய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் பிரம்மாண்டம் தெளிவான பிறகு ஜனவரி 3-ம் தேதி அதிக பட்ச உயரத்தைத் தொட்டது. மும்பை பங்குச் சந்தை மட்டுமின்றி, சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெரிய பங்குச் சந்தைகள் செயல்படும் 5 நாடுகளிலும் சுனாமியை தொடர்ந்து வந்த நாட்களில் பங்குச் சந்தைகள் வளர்ச்சியைக் காட்டின என்கிறார் பத்திரிகையாளர் பி சாய்நாத். இப்படி நாடே எழவு வீடாக இருந்த போது பங்குச் சந்தை மட்டும் எகிறிப் பாய்ந்த பின்னணி என்ன?
சென்ற ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே 1 டாலருக்கு கொடுக்க வேண்டிய இந்திய ரூபாயிலான விலை ரூ 53.80-லிருந்து ரூ 69.50 ஆக அதிகரித்தது. ஜூலை 2008-ல் ரூ 46.2 ஆக இருந்த பரிமாற்ற வீதம் 2009 பிப்ரவரி மாதம் ரூ 39.66-க்கு வீழ்ச்சியடைந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 69 வரை அதிகரித்திருப்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
கேஜ்ரிவால் பிரதமரானாலும், நம்மை சிறுகச் சிறுக அரித்துக் கொண்டிருக்கும் டாடாக்களையும், அம்பானிகளையும், அதானிகளையும் தொடப் போவதில்லை
இத்தகைய பணப் பாய்ச்சல்களும், முதலீடுகளும் நம்மைச் சுற்றி பொருளாதார சுனாமிகளை நடத்துகின்றன. வைகுண்டராஜன் மூலமாக தென் தமிழக கடற்கரை பகுதிகளை கொள்ளை அடிப்பதற்கும், பி ஆர் பழனிச்சாமி மூலமாக கிரானைட் மலைகளை மொட்டை அடிப்பதற்கும், ரெட்டி சகோதரர்கள் மூலமாக பெல்லாரியின் இரும்புத் தாதுவை அள்ளிச் செல்வதற்கும், இன்னும் நூற்றுக்கணக்கான வழிகளில் செத்துப் போன ஆறுகள், வறண்ட கிணறுகள், மழிக்கப்பட்ட மலைகள், அம்மணமாக்கப்பட்ட காடுகள், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் என நம் நாட்டைச் சுரண்டுவதற்கும் இந்த நிதி மூலதன பாய்ச்சல் வழி வகுத்துக் கொடுக்கிறது.
மோடி அல்லது கேஜ்ரிவால் போன்ற எந்த கேடி பிரதமரானாலும், நம்மை சிறுகச் சிறுக அரித்துக் கொண்டிருக்கும் டாடாக்களையும், அம்பானிகளையும், அதானிகளையும் தொடப் போவதில்லை; அமெரிக்காவின் டெலாவருடனும், இங்கிலாந்தின் லண்டன் மாநகருடனும் தொடர்பை துண்டித்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளிகளின் இலட்சக் கணக்கான வங்கிக் கணக்குகளை முடக்கப் போவதில்லை. மொரிசியஸ் நாட்டிலிருந்து வரியில்லாத அன்னிய முதலீடாக வரும் சட்டபூர்வ மோசடியையும் நிறுத்தப் போவதில்லை.
மாறாக, நாம் போடும் ஓட்டுக்களை தமக்கு கிடைத்த மக்கள் ஆணையாக காட்டிக் கொண்டு, தாம் செய்பவற்றுக்கு அங்கீகாரமாக வைத்துக் கொண்டு அமைக்கப்படப் போகும் எந்த ஒரு அரசாங்கமும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளின் பணப் புழக்கத்தை சட்டரீதியாக நியாயப்படுத்த, வசதி செய்து கொடுக்க புதுப் புது வழிகளை உருவாக்குவதைத்தான் செய்யப் போகின்றன.
அதனால்தான் பாஜக தேர்தல் அறிக்கை மோடிக்கு பிடித்த விதத்தில் தயாரிக்கப்படவில்லை என்று இதுவரை வெளியாகவில்லை.
அதாவது முதலாளிகளுக்கு சோப்பு போடும் அறிவிப்புகள் அந்த அறிக்கையில் போதிய அளவு இல்லை என்பதே மோடியின் குறை.
இந்த இலட்சணத்தில் காங்கிரசு மட்டுமல்ல, பாஜகவும் பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் ஏவல் அடியாட்கள்தான்.
எனவே, இந்தத் தேர்தலில் இவர்களுக்கு நாம் போடும் ஓட்டு நமக்கும், நமது நாட்டுக்கும் நாமே போட்டுக் கொள்ளும் சுருக்குக் கயிறு என்பதில் இன்னமும் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?
– வினவு
முழு கட்டுரைக்கு : For read full story please CLICK below
http://www.vinavu.com/2014/04/04/capital-tsunami-devastates-indian-economy/