ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்!
“திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள்.
முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.
யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.
பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துப் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.
அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் கூடத்தில் தானே நடக்கும். நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும்.
திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.
பாசத்தால் பெற்றோரை கட்டி அழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.
“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.
“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.
ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட மாமி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.
பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.
“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.
“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும்.
‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.
பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.
பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.
இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை!
-Xaviar