பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு உடல் தெரியும் அளவிற்கு அணியும் ஆடையே காரணம்: பிரேசில் சர்வேயில் தகவல்!
பிரேசில் நாட்டில் நடந்த கருத்து கணிப்பு ஒன்றில் பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது உடல் தெரியமளவிற்கு அணியப்படும் ஆடையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பொருளாதார ஆராய்ச்சிக்கான அரசு அமைப்பு சர்வே ஒன்று நடத்தியது. கடந்த 2013ம் ஆண்டு மே மற்றும் ஜூனிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் 3,810 பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலும் பெண்கள். உடல் தெரியும் வகையில் ஆடை அணிவது கற்பழிப்பிற்கு வழிவகுக்கிறது என்று 65 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் தெரிந்திருந்தால் கற்பழிப்பு சம்பவங்கள் குறையும் என்று 58.5 சதவீதத்தினர் கூறியுள்ளனர். இந்த சர்வே முடிவு அந்நாட்டில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களது புகைப்படங்களை எடுத்து அதனை ஆன்லைனில் அனுப்பியுள்ளனர்.
சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களில் குறைந்த ஆடை அல்லது ஆடைகளின்றி, நான் கற்பழிக்கப்படுவதற்கு தகுதியானவளல்ல என்ற வாசகங்களை தாங்கியபடி நிற்கின்றனர். பேஸ்புக் வழியே கற்பழிப்புக்கு எதிரான ஆன்லைன் எதிர்ப்பு போராட்டத்தை பத்திரிக்கையாளரான நானா குயிரோஸ் நடத்தியுள்ளார்.
இதற்கு பல வழிகளில் இருந்தும் அவருக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து அவர் கூறுகையில், ஆச்சரியப்பட தக்க விசயம் என்னவெனில், விழாக்களில் ஆடைகளின்றி நடப்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பிரசார போராட்டத்திற்கு ஆண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகத்தில் கற்பழிப்புக்கு எதிரான வாசகங்களான கற்பழிப்பிற்கு எந்த பெண்ணும் தகுதியானவர் அல்ல என்பதை தெரிவிக்கும் வாசகங்களுடன் தங்களது புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கருத்து கணிப்பு குறித்து பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் கூறும்போது, வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள அரசாங்கம் மற்றும் சமூகம் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை ஆய்வு முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிரேசில் சமுதாயம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.