நொறுங்குகிறது இந்தியச் சமூகம்
பழ. கருப்பையா
பசி, காமம் என இரண்டும் இயற்கையானவை. உடலோடு ஒட்டியவை. இந்த இரண்டு தேவைகளும் நிறைவு செய்யப்பட்டே ஆக வேண்டும்.
முதல் தேவை பிறந்து விழுந்தவுடன் தோன்றிச் செத்து மடிவதற்குச் சிறிது முன் வரை நீடிக்கிறது. இரண்டாம் தேவை பன்னிரண்டு வயதில் தோன்றி எழுபது வரையிலும் நீடிக்கிறது. “பட்டது பார் மனம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடறியீரே’ என்பான் மெய்யியல் வல்ல திருமூலன்.
இவற்றிற்கு அப்பால் எந்த உயிர்க்கும் எந்தத் தேவையுமில்லை. இவை இரண்டுக்காகவும்தான் இவற்றிற்கிடையே போட்டியும், மோதலும் ஏற்படுகின்றன. சாடிப் பிழைத்தலும், ஓடிப் பிழைத்தலும் என்று அனைத்தும் நிகழ்கின்றன.
பசியும், காமமும் அடங்கி விட்ட நிலையில், புலியின் பக்கத்தில் புள்ளிமான் படுத்திருந்தால், “உனக்கென்ன அவ்வளவு ஏற்றம்? பயமே இல்லாமல் போய் விட்டதா? காலை வேறு நீட்டிக் கொண்டு படுத்திருக்கிறாயா’ என்று மானுக்குப் பாடம் கற்பிக்க புலி பாய்வதில்லை. புலிக்கு அடுத்த வேளை பசி எடுக்கும்வரை பக்கத்தில் படுத்திருக்கும் மானுக்கு எந்தப் பயமும் தேவையில்லை.
ஆனால் எந்த ஒரு நன்மைக்காகவும் இல்லாமல், சப்பான் எப்படிப் பணிய மறுக்கலாம் என்னும் அற்ப எண்ணத்தின் அடிப்படையில் இரோசிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசிய இழிதகையோன் அமெரிக்க ட்ரூமனும், காரணமல்லாத காரணத்தின் மீது பகைமை உணர்வைப் பெருக்கி யூத இனத்தையே ஏறத்தாழ அழித்து விட்ட மனநோயாளி இட்லரும், தமிழனுக்கென்ன தனி நிலம் என்று அடங்காமல் வெறி கொண்டு அந்த நாட்டையே சவக்குழியாக்கி விட்ட கசாப்புக்கடைக்காரன் ராசபக்சேயும் ஆறறிவு பெற்ற மனித இனத்தில் மட்டுமே காணப்படக் கூடியவர்கள். ஐந்தறிவு மட்டுமே உடைய விலங்கினங்கள் தம் சொந்த இனத்தை அழிப்பதே இல்லை. மாற்று இனங்களை இரையின் தேவைக்கு மீறி அழிப்பதில்லை.
ஒவ்வொரு மனிதக் கூட்டமும் தன் தன் உறுப்பினர்களிடம் ஒரே மாதிரியான நடத்தையை உருவாக்க, எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் கற்பிப்பதில் குறியாக இருக்கிறது. சமூகம் தன்னுடைய உறுப்பினனை உருவாக்கும் மாபெரும் பொறுப்பைப் பல்வேறாகப் பிரித்து பல அமைப்புகளிடம் கொடுக்கிறது.
குடும்பம், பள்ளிக்கூடம், சட்டம், இறையச்சம் இவையனைத்தும் முழு வெற்றியடையும் போதுதான், பொறுப்புள்ள சமூக மனிதன் உருவாக முடியும்.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தங்களின் பிள்ளைகளுக்குப் பெரும் பணத்தை விலையாகக் கொட்டிக் கொடுத்துக் குறிப்பிட்ட சில பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் தவியாய் தவித்து தண்ணீர் குடிப்பதற்குக் காரணம், தங்களுடைய பிள்ளைகளை இந்த நிறுவனங்கள் வேதவியாசர்களாகவும் வள்ளுவர்களாகவும், சி.வி. ராமன்களாகவும், ஐன்சுடீன்களாகவும், சிக்மண்ட் பிராய்டுகளாகவும், இமானுவேல் காண்ட்களாகவும் ஆக்க வல்ல அறிவுக் கோயில்கள் என்னும் எண்ணத்தினால் அல்ல; பெருத்த சம்பளம் வாங்குகின்ற நிலையை உருவாக்க வல்லவை அவை என்பதற்காகத்தான்.
பணத்தை நோக்கமாகக் கொள்வதில் பிழை ஒன்றுமில்லை. “அது எஃகு போற் கூர்மையானது அதைத் தேடு’ என ஆணைத் தொனியில் அறிவுறுத்துவான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்.
ஆனால் கல்வியின் நிலைத்த பயன் அறிவு, அறிவின் பயன் நெறிப்படுத்தல். கூடுதல் பயன்தான் பணமே தவிர, அடிப்படைப் பயன் அது இல்லை. நிகழ்காலக் கல்வி மனிதனை நெறிப்படுத்தும் அடிப்படையான போக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டது. மனித உருவாக்கத்தில் அதன் பங்கு கேள்விக்குறியாகி விட்டது. ஆகவே சமூகத்தின் கல்விக் கால் இன்று ஊனப்பட்டு விட்டது.
சட்டம் என்பது தண்டம், தண்டம் என்பது ஒழுக்க நெறியினின்றும், வழக்கு நெறியினின்றும் வழுக்கியவர்களை, அந்த நெறியில் நிறுத்தற் பொருட்டு, குற்றத்தை ஆராய்ந்து, அதற்குத் தகத் தண்டனை வழங்கல் என்பான் பரிமேலழகன்.
சட்டம் என்பது, “உதைத்தாலொழிய ஒழுங்குக்கு வர மாட்டான்’ என்னும் நிலையிலுள்ள எண்ணிக்கையில் குறைந்த அறிவினரை மட்டுமே ஒழுங்கு படுத்தப் பயன்படுவது.
குற்றத்தை ஆய்வு செய்யும் காவல்துறை, அதை நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் அரசுத் தரப்பு வழக்குரைஞர், தீர்ப்புச் சொல்லும் நீதிபதி என மூன்றடுக்கினை உடையது சட்டம்.
இதில் எந்தக்கண்ணி வலுவற்றதாக இருந்தாலும், அதை உடைத்து விட்டு, அதன் வழியே குற்றவாளி வெளியேறி விடுவான். மூன்று கண்ணிகளும் ஒரே நேரத்தில் வலுவுடையதாக இருப்பது அருமைப்பாடுடைய ஒன்று. இவற்றில் முதல் இரண்டு கண்ணிகள் எளிதாக அணுகத்தக்கவை.
குற்றத்தால் பாதிக்கப்பட்டவன் பசையோடு செல்லாவிட்டால், குற்றம் பதிவாகாது. குற்றம் செய்பவனும் பசையோடு செல்வதால், பாவம் காவல் துறையின் பாடு தருமசங்கடம்தான். இருவருமே பசையோடு வருவதால், கூடுதல் பசையின் அடிப்படையில் குற்றத்தை ஆய்வு செய்ய வேண்டியதிருக்கிறது போலும்.
சட்டத்தின் வீழ்ச்சி கூலிப்படையைப் பெருக்கும். கூலிப் படையின் தன்மை கூலி கொடுக்கின்றவனுக்காகச் செயல்படுவது. இதுதான் காவல்துறையின் நியாயமும் என்றால், அணிந்திருக்கிற சீருடையில் தவிர வேறு என்ன வேறுபாடு? ஆக இந்தக் காலும் ஊனப்பட்ட கால்தான்.
ஒரு மனிதன் முழுமையாக உருவாக்கப்படுவதில், குடும்பமும் இறையச்சமுமே எஞ்சிய எல்லாப் பணிகளையும் ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றன.
பிள்ளை பிறந்து விழுந்து, தாயின் அரவணைப்பில் பாதுகாப்பை உணர்ந்து, தாயே உணவாக இருப்பதால், நெருக்கத்தில் தாயின் மார்பையும், நிமிர்ந்து பார்க்கும் போது தாயின் முகத்தையுமே அறிந்து வளரும் பிள்ளை, முதலில் கழுத்து நின்று, அப்புறம் குப்புறப் படுத்து, பின்னர் உட்காரப் பழகி, முதன்முதலாக அது நிற்கும் போது, ஏதோ ஒலிம்பிக் போட்டியில் வென்ற சாதனை போல் உணரப்பட்டு, பின்னர் தகப்பனின் விரலைப் பிடித்துக் கொண்டு நடை பழகி, அடுத்துப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, இப்படி இருபது ஆண்டுகள் ஒருவனைப் பாதுகாத்து, ஊட்டுவித்து, உணர்வித்து, அறிவுறுத்தி, அவனை வாழ்க்கைக் களத்திற்குள் எல்லாத் தகுதிப்பாடுகளோடும் இறக்கி விடுவதற்கு, ஓர் அம்மையும் அப்பனும் படுகின்றபாடு தறி படாத பாடு.
அறுபது வயதுக்குப் பின்பு, எந்தப் பிள்ளை தள்ளாடி நடந்தபோது, அதன் கைகளைப் பற்றிக் கொண்டு எந்தத் தகப்பன் நடை பயிற்றுவித்தானோ, அந்தத் தகப்பன் வயதுத் தளர்வினால் தள்ளாடி நடக்க, அந்த மகன் தன்னுடைய தோளினைக் கொடுத்துத் தாங்குவதற்காக ஏற்பட்டதுதான் குடும்பம்.
முன் இருபது வயது வரைப் பிள்ளைகளைத் தாங்கவும், பின் இருபது வருடங்கள் பெற்றோரைத் தாங்கி நிற்கவும் உருவாகிய குடும்ப அமைப்புச் சிதைவதுதான் இன்றைய சமூகத்தின் மாபெரும் கேடு.
குடும்பம் சீர்குலைந்தால், சமூகப் பொறுப்புணர்ச்சி மிக்க மனிதனின் உருவாக்கம் முற்றாக நின்று போகும்.
குடும்பம் எதற்கு, அந்தப் பொறுப்பை அரசு மேற்கொள்ளுமெனச் சொல்லி, மாவோ சீனாவில் கம்யூன்களை தோற்றுவித்துப் பார்த்தார். அவை மண்ணைக் கவ்வின. குடும்பத்தின் இடத்தை குடும்பம்தான் நிரப்ப முடியும். பிள்ளை வளர்ப்பும், முதியோர்ப் பேணலுமே குடும்ப அமைப்பின் அடிப்படை. ஆணும் பெண்ணும் சேர்ந்து உறங்குவது அன்று.
கண்ட கணப் பொழுதில் யோசிக்க நேரமில்லாத விருப்பம், பத்து நாள்கள் கொஞ்சி மகிழல் (ஈஹற்ண்ய்ஞ்), இரண்டு மாதத்தில் திருமணம், நான்கு மாதத்தில் அறுத்துக் கொள்ளல். பெண்ணைப் பொறுப்பாக்கி விட்டு, ஆண் தப்பித்து ஓடுகின்ற தாய் வழிச் சமூகம் பெண்ணுக்குச் சுமையா? சுதந்திரமா?
இவ்வளவு நீளமும், அகலமும், வலுவும், பெருமையும் கொண்ட இந்தியா ஒருநாள் சிதைந்து போகட்டும். ஆனால், குடும்ப அமைப்பு சிதையக் கூடாது.
மிக இன்றியமையாத குடும்பத்தின் கால், ஆட்டம் காணத் தொடங்கி இருப்பது தான், வீழ்ச்சிகளிலெல்லாம் பெரு வீழ்ச்சி.
இப்போது மனிதனை உருவாக்குவதில் கடைசியாக மிச்சமிருப்பது இறையச்சம். அதை இன்னொரு வகையாகச் சொன்னால் வினையச்சம்.
கேடு செய்தவன் கேட்டை அடையாமல் தப்ப முடியாது. செய்த வினை அதற்குரிய பயனைத் தராமல் விடாது என்னும் இந்தியச் சமயங்களும், தீர்ப்பு நாளில் அதற்குரிய தண்டனையை இறைவன் தந்தே தீருவான் என்னும் கிறித்துவ, இசுலாமிய நம்பிக்கைகளும் ஒரே நோக்குடையவைதான்.
ஒரு லட்சம் பேர் இருக்கும் ஊரை நூறு காவலர்களை உள்ளடக்கிய காவல் நிலையத்தால் கட்டுப்படுத்த முடிவதற்குக் காரணம், குற்ற மனப்பான்மை உடையோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான். பெரும்பான்மைச் சமூகத்தை இறையச்சமே ஒழுங்கு படுத்தி விடுகிறது. சிறுபான்மை கயமைச் சமூகத்திற்குத்தான் சட்ட அச்சம் தேவைப்படுகிறது.
ஆனால் பெரும்பான்மைச் சமூகத்தின் நெறிமுறைக்குக் காரணமான இறையச்ச அல்லது வினையச்சக் கொள்கையும் நீர்த்துப் போகுமாறு செய்யப்பட்டு வருகிறது.
“நாம் செய்த வினை எதுவாயினும் அதனுடைய மூர்க்கம் நம்மைத் தாக்கி விடாதவாறு பரிகாரம் செய்து, வினையின் முனையை மழுக்கி விட முடியும்’ என்று நம்புவதைவிட கருணாநிதியைப் போல் கடவுள் நம்பிக்கை அற்றவராகவே இருக்கலாம்.
அதை விடக் கொடுமை சமயங்கள் நிறுவன வயப்பட்டு ஒன்றோடு ஒன்று மோதுதல். இறையச்சம் அல்லது வினையச்சத்தால் சமூகம் பெற வேண்டிய நன்மைகள், இந்த மோதல்களின் காரணமாகப் போக்கடிக்கப்பட்டு விடுகின்றன.
கல்வியால் பெற வேண்டிய பயனில் குறைபாடு; குடும்ப அமைப்பின் தத்தளிப்பு; விலைப் பட்டியலோடு சட்டம்; இறை நம்பிக்கையில் தடப் பிறழ்ச்சி – இவற்றின் விளைவாக உண்மையே வெல்லும் என்னும் நம்பிக்கை போய், ஊழலே வெல்லும் என்னும் நம்பிக்கை பெருகி, நல்லவர்களிடையேயும் ஊசலாட்டம் ஏற்பட்டு, நேர்மையின்மையே நாட்டின் பொதுவிதியாகி விடுமோ என்னும் நெருக்கடியில் இந்தியா தவிக்கிறது.
பணம்தான் வழிபாட்டிற்குரிய கடவுள் என்னும் புதிய மதம் உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்டு, ஞான மெய்ப்பூமியான இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டது.
ஈராயிரம் ஆண்டுகளாகக் கட்டி நிறுவப்பட்டிருந்த கட்டிறுக்கமான இந்தியச் சமுதாயம், நுகர்ச்சிச் சமூதாயமாக (இர்ய்ள்ன்ம்ங்ழ்ண்ள்ம்) மாறி நொறுங்கிக் கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர்.
வாசகர் கருத்து:
தகப்பனின் விரலைப் பிடித்துக் கொண்டு நடை பழகி, அறுபது வயதுக்குப் பின்பு, எந்தப் பிள்ளை தள்ளாடி நடந்தபோது, அதன் கைகளைப் பற்றிக் கொண்டு எந்தத் தகப்பன் நடை பயிற்றுவித்தானோ, அந்தத் தகப்பன் வயதுத் தளர்வினால் தள்ளாடி நடக்க, அந்த மகன் தன்னுடைய தோளினைக் கொடுத்துத் தாங்குவதற்காக ஏற்பட்டதுதான் குடும்பம். முன் இருபது வயது வரைப் பிள்ளைகளைத் தாங்கவும், பின் இருபது வருடங்கள் பெற்றோரைத் தாங்கி நிற்கவும் உருவாகிய குடும்ப அமைப்புச் சிதைவதுதான் இன்றைய சமூகத்தின் மாபெரும் கேடு.
குடும்பம் சீர்குலைந்தால், சமூகப் பொறுப்புணர்ச்சி மிக்க மனிதனின் உருவாக்கம் முற்றாக நின்று போய்விட்டது.
– முத்து
மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் மனிதனே அடிமை ஆகிவிட்டதால் சீரழிவு இருக்கத்தான் செய்யும்.கடவுள்,பணம்,புகழ்,அதிகாரம்,போன்றவற்றைப் படைத்த மனிதன் அவைககுக்கு அடிமையாகி பண்பாடு,கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுத்திருப்பதில் ஆச்சர்யமில்லை.
ஆண்டவனுக்கும் பணம்… அதிகாரக் கைப்பற்றலுக்கும் பணம்…பண்பாட்டு சீரழிவுக்கும் பணம்… ஒத்துக்கொள்ளாத உணவுக்கும் பணம்… அறமும் பணத்தால் எடைபோடும் நிலைக்கும் அடிப்படை அரசியல் அதிகாரப்பகிர்வுதான்…இது தெரிந்த திரு.பழ.கருப்பையா தனது கட்சித் தலைமையும் சமூகச்சீரழிவுக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்வார் என நம்பலாம்..
-தி. அரப்பா தமிழன்
நன்றி: தினமணி, 26 March 2014