இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா?
இஸ்லாம் எந்தளவுக்கு நடைமுறைக்கேற்ற மார்க்கம் என்பதை நம் அன்றாட வாழ்விலும், செய்திகள் மூலமும் அறிந்து கொள்கிறோம். முன்பு பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு, மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்து திருமணம் செய்வித்தார்கள். பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டனர். அந்தப் பிள்ளைகளும் தன் கணவனை / மனைவியைக் காதலித்தார்கள். பிரச்சினைகள் எழவில்லை, அப்படி எழுந்தாலும் அதன் அளவு மிக மிகக் குறைவே, அதையும் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டார்கள்.
ஆனால், இன்றைய நவீன(!!!) கால உலகில் திருமணத்திற்கு முன்பே திருட்டுக் காதல், கள்ளக் காதல் என்று எல்லா சமூகங்களிலும் பெருகி வருவது மிக மிக கவலைக்குரியதாகும். பிற மதங்களில் இவ்வாறு நடப்பது என்பது ஒரு பெரிய விஷயமல்ல. காரணம், ஆண்/பெண் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற வாழ்வியல் சட்டங்கள்-திட்டங்கள் அவர்களின் மத நூற்களில் கிடையாது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று அவாள்களின் புராணக் கதைகளும், சிலைகளின் சிற்ப வேலைப்பாடுகளும் காட்டுகின்றதே தவிர, நல்ல விஷயங்களை போதிக்கவில்லை. அதனால் அவர்கள் பாழுங்கினற்றில் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
நம் மார்க்கத்தைப் பொருத்தவரை, நமக்கென்று தெளிவான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. யார் யார் எப்படி நடக்க வேண்டும், சிறுநீர், மலம் கழிக்கும் முறையைக் கூட ஆரோக்கியம் பேணும் வழிமுறையாக கற்றுத் தரும் நம் மார்க்கத்தில் சிலர் தவறான சிந்தனைகளால் ஏற்பட்ட கோளாறினால், “நான் ஷைத்தானுக்கு மச்சான்” என்ற ரீதியில் செயல்படுவதனால் அவர்களும் தறிகெட்டு, அவர்களைத் தொடர்ந்தவர்களும் நிலை தடுமாறி, நரக நெருப்பை சந்திக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
“ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் ஷைத்தான் இருப்பான்” (ஆதாரம் : அஹ்மது) என்ற நபிகள் நாயகத்தின் அருள் மொழியை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு நிதர்சனமென்பது புரியும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் உள்ள நம்பிக்கையினால், கூடவே இருக்கும் ஷைத்தானை மறந்து விடுகிறார்கள். அந்த ஷைத்தான் – அந்த பிள்ளைகளை நரக படுகுழியில் தள்ளும் முயற்சியை தூண்டி விடுகின்றான்.
இன்று தொலைக்காட்சிகள், இணையதளங்கள், செய்தித்தாள்கள் என எதிலும் நிறைந்திருக்கும் கள்ளக் காதல், காதலன் ஏமாற்றியதால், கணவனின் அல்லது மனைவியின் கள்ள தொடர்பால் தற்கொலை அல்லது கொலை இப்படியான செய்திகள் வியாபித்திருப்பவைகள் தான் அதிகம், அதிகம். இவைகளை களைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு – அடிப்படை மார்க்க அறிவினை போதிப்பது இன்றியமையாக் கடமையாகும்.
தன் பிள்ளைகள் டாக்டர், எஞ்சினியராக வேண்டும் அதன் மூலம் பெண் வீட்டைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்று ஆண் மகனைப் பெற்ற பெற்றோரும் என் மகள் மெத்தப் படித்தவள் என்று தன் மகளைப் பெற்றோரும் பீற்றிக் கொள்கிறார்களே தவிர, என் மகன் அல்லது மகள் தொழக் கூடிய, குர்ஆன் ஓதக்கூடிய, அல்லாஹ்வையும், அவன் தூதரையுமே பின்பற்றக் கூடிய ஒரு முஸ்லிம் என்று சந்தோஷப்படுகிறோமா? அவர்களை அப்படி வளக்கிறோமா? அவ்வாறு செய்ய ஏவுகிறோமா? இப்படி எண்ணுபவர்களின் சதவிதம் மிகக் குறைவு. அதனால்தான் முஸ்லிம் குடும்பத்தில் கூட இவ்வாறெல்லம் நடக்க அரம்பித்து விட்டது. அப்படி மார்க்கத்தை – அடிப்படை இஸ்லாமிய அறிவை ஊட்டவில்லை என்றால் இது தொடர் கதை ஆகிவிடும்.
இவைகளைக் களைய, நம் தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கிறது. முஸ்லிம் இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் கடமை இருக்கிறது. அரசியல் பேச மட்டுமா இயக்கங்கள்?! அசிங்கங்களைக் களையவும் தான். நம்மிடையே இருக்கும் இயக்கங்கள் எல்லாம், ஒன்று கூடி ஒருவருக்கொருவர் அனுசரித்து மார்க்கத்தின் போதனைகளை ஒரே குழுவாக இருந்து எடுத்துரைத்தால் இன்னும் வலுவாக இருக்கும்.
இது நடக்கக் கூடிய காரியமா? என தயவு செய்து அங்கலாய்க்கவோ, கமெண்ட் கொடுக்கவோ எண்ணாதீர்கள், மாறாக, சீரியசாக விவாதியுங்கள். அவரவர் இயக்க உறுப்பினர், அந்த அந்த இயக்க தலைவர்களிடம் கேள்வி கேளுங்கள், முடிவு செய்யுங்கள், காரியத்தில் இறங்குங்கள், மாற்றத்தை இறைவன் பார்த்துக் கொள்வான்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் எல்லாம் இணைந்தால், அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகும். ஒரே குரலாக எதிரொலிக்கலாம். சட்டமன்றம், பாராளுமன்றத்தில் நம் குரல் ஒலிக்க வலுவான ஒரு கூட்டணியாக ஏற்படுத்தி, தேர்தலில் நின்று சாதிக்கலாம். இவைகளுக்கு எல்லா கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஒத்துழைப்பார்கள். ஆனால், இதற்கு அந்தக் கட்சிகளின் / இயங்கங்களின் தலைவர்கள்தான் தங்களின் ஈகோவை கைவிட வேண்டும்.
“உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே, அல்லாஹ் அன்பை ஏற்படுத்தி விடக் கூடும், அல்லாஹ் ஆற்றலுடையவன்” – (அல்குர்ஆன் 60:7)
“உன் பகைவனை அளவோடு வெறு ! ஒருநாள் அவன் உன் நண்பனாக ஆகலாம்” (நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்).
“எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புத் தேடுபவர்களே!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆக, இறைவன் நாடினால், எதுவும் சாத்தியமே! இதை அரசியல் கட்சிகள் / இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஓன்று கூடி, சிந்தித்து ஒரே தலைமையின் கீழ் செயல்பட முயற்சிக்க வேண்டும்.
இன்றொன்றையும் சொல்லியாக வேண்டும், மார்க்க விஷயங்களில், பிரச்சாரத்தில் கொள்கைகளை விளக்கி ஏக இறைவனையே வணங்க வேண்டும் என்ற உயரிய கொள்கையைக் கொண்ட எல்லா முஸ்லீம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாக பிரச்சாரத்தை பலப்படுத்தி, நம் களப் பணிகளை வீரியமாக ஆக்கினால் இன்ஷா அல்லாஹ் கை மேல் பலன் கிட்ட வாய்ப்பாக அமையும்.
கட்டுக் கோப்பான உறுப்பினர்களை கொண்ட இயக்கங்கள் அதன் தலைவர்களின் ஈகோவை மறந்து அல்லாஹ்விற்காக அவைகளை துறந்து செயல்பட்டால், ஒரே குரலாக மார்க்கப் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.
அரசியலுக்கு ஒரு கட்சி என்றும் மார்க்கம் போதிக்க மற்றொரு இயக்கமென்றும் இரட்டைக் குழாய் துப்பாக்கியாக, செயல்பட முடியும். ஒரே குரலில், ஒரே முகம் கொண்டு, ஒரே லட்சியம் என வரும்போது இன்ஷா அல்லாஹ் நிறைய சாதிக்க இயலும்.
இந்த வேண்டுகோளை அனைத்து இயக்கங்களின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
ஏக இறைவன் அல்லாஹ்வுக்காக, நம் இதயத்தில் என்றும் நிலைத்து இருந்து கொண்டிருக்கும், இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?
-இப்னு அப்துல் ரஜாக்