பெற்றோரை வெறுக்கும் டீன் ஏஜ் பிள்ளைகள்…
“நம்ம நிழலே நம்மைத் தாக்குமா?” என்று நீங்கள் குழம்பும் வகையில், சில நேரங்களில் உங்கள் பிள்ளைகள் உங்களை கேள்விக் கணைகளால் தாக்குவதை நீங்கள் அனுபவிக்கலாம்.
“உன்னைக் கண்டாலே எனக்கு பிடிக்கலை…. சீ போ…. எனக்கு உன்மேலே வெறுப்பா இருக்குன்னு சொல்றா. நான் என்ன தப்பு பண்ணினேன்? நான் நல்ல அம்மாவா தானே இருந்திருக்கேன்’’ என்று தன் 15 வயது பெண்ணைப் பற்றி என்னிடம் குமுறினார் ஒரு தாய்.
டீன் ஏஜில் பிள்ளைகளை வைத்திருக்கிற பல பெற்றோரின் குமுறல்கள் இப்படித்தான் இருக்கின்றன.
உங்களை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் வெறுப்புடன் அணுகினால்…? நீங்கள் சொல்கிற எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தினால்…?
பிள்ளைகள் டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிறபோது, பல பெற்றோரும் இப்படியொரு தர்மசங்கட சூழலைக் கடந்துதானாக வேண்டும்.
பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான அன்பு என்பது எந்த சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டதில்லை. ஆனாலும், உங்களுடைய டீன் ஏஜ் பிள்ளை உங்களைப் பார்த்து, ‘உன்னை எனக்குப் பிடிக்கலை’ என வெறுப்பை உமிழும் போது, அவளி(னி)டம் அன்பைக் காட்டுவது சாத்தியமா?
இப்படி நடப்பதை ஏற்றுக் கொள்வது பெற்றோருக்கு மிகவும் சிரமமானது. ஆனால், டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதும், சுதந்திரமாக இயங்க நினைப்பதும், அதன் விளைவாக பெற்றோரை உதாசீனப்படுத்துவதும் இயல்பான ஒன்று. ‘உன்னை எனக்குப் பிடிக்கலை’ எனச் சொல்கிற டீன் ஏஜ் மகன் அல்லது மகளின் வார்த்தைகளை பெற்றோர் அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
டீன் ஏஜ் வளர்ச்சியில் அதுவும் ஒரு அங்கமே. பக்குவமின்மைக் காரணமாக பதின்ம வயது பிள்ளைகள் மனதில் தோன்றுவதை அப்படியே கக்கி விடுவார்கள். மேலும் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்ஸ செய்வார்கள். பெற்றோர்கள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள்ஸ தமக்கு வேண்டியதைச் செய்வார்கள் என்று அவர்கள் சோதிக்கும் பருவம் இது.
இத்தகைய நடத்தையானது 15 வயதில் உச்சத்தில் இருக்கும். 14 வயதில் அவர்களுக்கு சுதந்திரம் தேவைப்படும். அதனுடன் கூடவே ஒரு விரக்தியும் இருக்கும். பருவ வயது ஹார்மோன்களின் மாற்றங்களினால் உண்டாகும் பல விளைவுகளில் இதுவும் ஒன்று. அந்த வயதில் ‘வைத்தால் குடுமிஸ எடுத்தால் மொட்டை’ என்கிற அளவுக்கு இரண்டு எல்லைகளுக்கும் சட்ஸ சட்டென மனம் மாறுவார்கள். ஆனால், 16 வயதில் அடியெடுத்து வைத்ததும், அந்த நடவடிக்கைகள் மெல்ல மெல்ல மாறுவதைப் பார்ப்பீர்கள்.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அவர்கள் எப்படி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்பதோ, அதனால் மற்றவர்கள் எப்படிக் காயப்படுகிறார்கள் என்பதோ புரியாது. இது தெரியாமல் பெற்றோர் அவர்களுக்கு எதிராகக் கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாமல் அமைதிகாத்தார்களே ஆனால், நிலைமை சீக்கிரமே சகஜ நிலைக்குத் திரும்பும். பிள்ளைகள் கோபத்தில் பேசும் வார்த்தைகளைப் பெரிதுபடுத்தாமல், கண்டு கொள்ளாமல் தவிர்ப்பதன் மூலம் அவர்களின் சீற்றமும் தணியும்.
இப்படி எதிர்பாராத விதத்தில் பிள்ளையை அணுகும் பொழுது அவளு(னு)டைய தந்திரம் முறியடிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவளு(னு)டைய தற்காவல் நழுவி தன்னுடைய அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகும். சில பெற்றோருக்கு பிள்ளைகளின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளையோ, தம்மை அலட்சியப்படுத்துவதையோ அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதை மிகப் பெரிய தவறாகப் பார்ப்பார்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் ஆதரவும் அக்கறையும் தேவையாகவே இருக்கும். ஆனாலும், அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். அவர்களது நடவடிக்கை உங்களை எந்தளவு காயப்படுத்துகிறதோ, அதே உணர்வை அவர்களும் உணர்வார்கள். ஆனாலும், வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளின் இந்த திடீர் புரட்சி நடவடிக்கை அவர்களது 16, 17 வயதில் தானாக சரியாகிறதா என அமைதியாகக் கவனிக்க வேண்டியது பெற்றோராகிய உங்கள் கடமை.
நீங்கள் செய்வது அத்தனையும் சரி என்றும் நீங்கள் நினைத்து விடக்கூடாது. நீங்கள் செய்வது தவறு என்று உங்கள் பிள்ளைகள் பழித்தால் பெரும்பாலும் அது உண்மையாகவே இருக்கக்கூடும். அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று சற்றே நீங்கள் யோசித்து, அப்படி தவறுஇருந்தால் அதை ஒப்புக்கொள்வதோடு உங்கள் பிள்ளை செய்த தவறையும் சுட்டிக்காட்டினால் அது எடுபடும். அதே நேரம் எக்காரணம் கொண்டும் உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ வேண்டுமென்றே, ஏதேனும் உள் நோக்கத்தோடு உங்களை பழிப்பதாக நீங்கள் நினைத்தால், அதை அனுமதிக்கக் கூடாது. ‘உன்னால ஒழுங்கா, நல்லவிதமா பேச முடியலைன்னா, எதுவுமே பேசாதே’ என்கிற பழங்காலத்து அட்வைஸும், அணுகுமுறையும்தான் இந்த இடத்தில் ஒரே தீர்வு.
‘அது பரவாயில்லைஸ எனக்குக் கூடத்தான் சில நேரம் உன்னைப் பிடிக்காம இருந்திருக்கு. ஆனாலும், உன் மேல எனக்கு அளவில்லாத அன்பு உண்டு. உன்னைப் பிடிக்காததுக்கான காரணங்கள், உன்னோட சில நடவடிக்கைகள். மரியாதைக் குறைவான நடவடிக்கைகள். அந்த நேரத்துல உனக்கு என் மேல வெறுப்பாதான் இருந்திருக்கும். ஆனா, உன் கோபமெல்லாம் குறைஞ்ச பிறகு யோசிச்சுப் பார்த்தேன்னா, உனக்கு என்னோட அன்பும், அரவணைப்பும் தேவைங்கிறதை நீ நிச்சயமா உணர்வேஸ’ என்கிற மாதிரியான உரையாடல்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவும். இருவருக்கும் இடையிலான மனக் காயங்களை ஆற்றும்.
டீன் ஏஜில் பிள்ளைகளிடம் காணப்படுகிற கோபம் இயல்பானதுதான் என்றாலும், குடும்ப உறுப்பினர்களை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியமான கடமை.
நீங்கள் அனுமதிக்கிற முறையிலும், நீங்கள் மற்றவர்களை நடத்துகிற விதத்திலும்தான் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் உங்களையும் மற்றவர்களையும் நடத்துவார்கள். இதுதான் மரியாதையான பேச்சுமுறை, மரியாதையான நடவடிக்கை என்பதை அழுத்தமாக அவர்கள் மனத்தில் பதிய வைப்பதுடன், தவறு செய்யும் போதும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளும் போதும், அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி உணர வைப்பதும் பெற்றோரின் கடமையே. உங்கள் மகனோ, மகளோ கோபத்தில் வெறுப்புடன் ஏதோ பேசுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். முதலில் அதன் அடிப்படையைக் கண்டுபிடியுங்கள். சில நேரங்களில் அந்த வார்த்தைகள் வெறும் விரக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம். அவர்கள் சொல்வது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கேட்டுக்கொள்ளுங்கள்.
பிரச்னைக்கான வேரைக் கண்டுபிடிப்பதன் மூலம், அடுத்தடுத்து வரப் போகிற வாக்குவாதங்களைத் தவிர்க்க முடியும். அது மட்டுமின்றி, தான் தன் பெற்றோரைக் காயப்படுத்தி விட்டோம் என்பதையும் உங்கள் டீன் ஏஜ் மகன் (அ) மகளுக்கு உணர்த்தும். உங்கள் பிள்ளைகளிடம் உரையாடுவதன் மூலம் அவர்களை உண்மையில் பாதிக்கிற விஷயம் தான் என்ன எனத் தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு ஆழ்மனத்தில் பதிந்து போன ஏதேனும் விஷயம் அவர்களை அப்படி நடந்து கொள்ளச் செய்கிறதா என்பதை அவர்களிடமிருந்து நாசுக்காக அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருக்கிறதா என்றும் பாருங்கள். பெற்ற பிள்ளை, பெற்றோரை வெறுப்பதாகச் சொல்கிற போது, பெற்றோர் அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை ஆராய வேண்டியது அவசியம்.
உங்கள் இருவருக்குமான உறவை சுமுகமாக்க என்ன செய்யலாம் என உங்களை வெறுப்பதாகச் சொல்கிற பிள்ளையிடம் அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கும் போது வேடிக்கையாக உரையாடி முடிவெடுங்கள். மேலும் அவர்களிடம் குற்றம் கண்டுபிடிக்காமல், அவர்களின் வார்த்தை மற்றும் நடவடிக்கையை திறந்த மனதுடன் அவர்களுடன் சேர்ந்து ஆராய்வதே சிறந்த வழி. உறவை சுமுகமாக்கும் அந்த முயற்சியில் உங்கள் பிள்ளையையும் இணைத்துக் கொள்வதன் மூலம் தன் தரப்பு வாதம் கவனிக்கப்படுவதையும் தன் கருத்தும் பரிசீலிக்கப்படுவதையும் உங்கள் பிள்ளைகள் உணர்வார்கள்.
தவிர….
உங்களை நீங்களே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
நீங்கள் உங்கள் பிள்ளையுடன் விட்டுக் கொடுத்துப் போகத் தயாரா?
உங்கள் பிள்ளையிடம் குற்றம் மட்டும் கண்டுபிடிக்கிறீர்களா? அல்லது அவர்களின் நிறைகளை கண்டு கொண்டு அவ்வப்போது பாராட்டவும் செய்கிறீர்களா?
உங்கள் பிள்ளையின் திறமைகளையும் சாதனை களையும் பாராட்டி ஊக்கப்படுத்துகிறீர்களா?
உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லோரையும் போல் வாழ்க்கையில் ஒரு உந்துதலும் பாசிட்டிவான ஊக்கமும் தேவைப்படும் என்று நினைத்ததுண்டா?
பிள்ளைகளின் டீன் ஏஜ் முடிகிற வரை அவர்களிடம் பாசிட்டிவான உரையாடலைத் தொடரும் பெற்றோருக்கு, கடந்த காலத்தில் நடந்த ‘வெறுப்பு’ நாட்களை நினைத்து சிரிப்புதான் வரும்.
ஒரு அம்மா என்னிடம் சொன்னதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‘என் பொண்ணு, என்னைப் பார்த்து, ‘உன்னை எனக்குப் பிடிக்கலைன்’னு சொன்னா. ‘நல்லது. ஒரு அம்மாவா நான் என் வேலையைச் செய்துட்டுப் போறேன்’னு பதில் சொன்னேன். அவளுக்கு ஒண்ணும் புரியலை. என்னை முறைச்சு ஒரு மாதிரியா பார்த்தா. நானும் அவளைப் பார்த்துட்டு, பயங்கரமா சிரிச்சிட்டேன். ‘நீ பைத்தியக்காரத்தனமா பேசும்போது, செம வேடிக்கையா இருக்குன்’னு சொன்னேன். அவளும் தன் பைத்தியக்காரத்தனத்தை மறந்து சிரிச்சிட்டாஸ.’’ இதே அணுகுமுறையை நீங்களும் பின்பற்றிப் பார்த்தால் உணர்வீர்கள்.
நீங்களும் ஒரு காலத்தில் டீன் ஏஜை கடந்து வந்தவர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என அர்த்தம் கொள்ளாதீர்கள். உங்கள் சித்தாந்தங்கள், நீங்கள் சொல்கிற ஒழுக்கங்களைப் பின்பற்றுவதில்தான் அவர்களுக்கு சிக்கல். அல்லது அன்றைய பொழுது அவர்களுக்கு மோசமானதாக இருந்திருக்கலாம். குழந்தைகள் எப்போதும் எதையும் உள் நோக்கத்தோடு செய்வதில்லை. பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அவர்கள் ஏன் உங்கள் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதையும், கோபத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள உதவும்.
அவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள். ‘நீ ஏன் என்னை வெறுக்கறேஸ’ என்றோ, ‘நீ வெறுக்கிற அளவுக்கு நான் அப்படி என்ன செய்தேன்’ என்றோ கேட்கலாம். அதற்கான அவர்களது பதில்களை ஏற்றுக் கொள்வது உங்களுக்கு அத்தனை எளிதாக இல்லாவிட்டாலும், அவர்கள் சொல்வதை அப்படியே மவுனமாகக் கேட்டுக் கொள்வதுகூட இருவருக்குமான தடைகளைத் தகர்த்தெறிய உதவலாம்.