கணவரின் இதயத்தில் இடம் பிடியுங்கள்
[ ”புடவை முள்ளில் விழுந்தாலும், முள் புடவையில் விழுந்தாலும் சிரமம் சேலைக்குத் தான்” ]
அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மனைவி ஹஜ்ரத் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன் தோழிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் . அங்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்தார்கள் . அங்கு நடந்த சம்பவத்தை அன்னை ஹஜ்ரத் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே கூறுகிறார்கள்…
”……ஒரு நாள் நான் என் வயதிலுள்ள தோழிப் பெண்களோடு அமர்ந்திருந்தேன். நாங்கள் அமர்ந்திருக்கும் பக்கமாக அண்ணலார் அவர்கள் வந்தார்கள். எங்களுக்கு ஸலாம் கூறிவிட்டுச் சென்றார்கள் . எங்களைக் கடந்து செல்லும்போது ”நீங்கள் நல்ல படியாக நடந்து கொள்ளும் கணவரிடம் நன்றி இல்லாமல் நடப்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்…
பெண்களாகிய உங்களில் ஒரு சிலர் திருமணம் முடிக்காத கன்னிகளாக உங்கள் பெற்றோர்களிடமே உட்கார்ந்திருக்கிறீர்கள். பிறகு வல்ல அல்லாஹ் திருமணம் நடக்க வைத்து உங்களுக்கு கணவனை அளிக்கிறான். பிறகு மனைவியாகிய அவள் எதோ ஒரு விஷயத்தில் கோபப்பட்டு தன் கணவனைப் பார்த்து, ‘உன்னால் எனக்கு எந்த நிம்மதியும் கிடைக்கவில்லை. நீ எனக்கு எந்த ஒரு நன்மையையும் செய்ததில்லை என்று கூறுகிறாள்’ (எனவே நீங்கள் நல்ல விதமாக நடந்து கொள்ளும் கணவன் மார்களுக்கு நன்றிகெட்டு நடப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்)” என்று சொல்லி விட்டுச்சென்று விட்டார்கள்.
இந்தச் சம்பவத்தையும் உணர்வு ஊட்டும் உபதேசத்தையும் அன்னை அஸ்மா பின்தி யஸீத் அல் அன்சாரிய்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவித்துக் கொடுத்துள்ளார்கள். தன் அருமை மனைவியின் தோழிகள் நற்கதி பெற வேண்டும் என்ற ஆசையில் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் இந்த உபதேசத்தை அருளி இருக்கிறார்கள்.
கோபங்களும் சாபங்களும் சடுதியாக வரும் இனம் நமது பெண் இனம். சொல்லிய வார்த்தைகளை அள்ளிட முடியாது என்பதை அறிந்தும் அறியாமல் வாழும் இனம். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பதை நாம் நிதானமாக நினைத்துப் பார்ப்பது இல்லை. சொல்லிவிட்டு அள்ள முடியாமல் தவிப்போம்! அது தான் பெண்!
தடித்த வார்த்தை?
பெண் புத்தி பின் புத்தி என்றும், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றும் ஆண்கள் நமக்குப் பல சூடு மொழிகளைச் சொல்லி வைத்தாலும் சில சமயங்களில் அதை மறந்து விட்டுச் செயல்படும் சுபாவம் நமக்கு உண்டு. நினைத்துக் கொண்டே செயல்படுவதும் உண்டு. அதிலும் கணவரிடம் கோபித்துக் கொண்டு பேசுவது என்றால் சில சமயங்களில் கண், மூக்குத் தெரியாமல் கொட்டி விடுவதும் உண்டு. நமது கணவர் தானே நமக்கு இல்லாத உரிமையா? என்று நறுக்கென்று நடந்து கொள்வதும் உண்டு. தடித்த வார்த்தைகளால் கொல்வதும் உண்டு. எது எப்படிப் போனாலும் ”புடவை முள்ளில் விழுந்தாலும், முள் புடவையில் விழுந்தாலும் சிரமம் சேலைக்குத் தான்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
யாராக இருந்தாலும் நாகாக்க வேண்டும். இல்லையெனில் இழிவான சொல் கொண்டு இடித்துரைக்கப்பட்டு சோகத்தைச் சுவைக்க நேரிடும் அல்லவா? அதில் கணவன் மனைவி நிலை கொஞ்சம் கனமாகவும், ஆழாமாகவும் கவனிக்கப்படுகிறது. ஆண் இனத்துக் கணவன் அதிகம் பேசி விட்டாலும் அதில் அனல் தெறிப்பது குறைவாகவே இருக்கும். ஆனால், பெண் இனத்து மனைவி ஒரு சொல் உரைத்தாலும் இரும்பு நச்சென்று அடிப்பது போல் இருக்கும்.
தீயினால் சுட்ட புண்ணாவது சில நாட்களில் ஆறிவிடும். நாவினால் சுட்டசொல் ஆறாத் தழும்பாக ஆகிவிடும். எனவே தான் சொல்கிற சொல்லை கவனித்துச் சொல்ல வேண்டும். கோபதாப நேரங்களிலே கூட காய் போன்ற கசந்த சொல்லைச் சொல்வதை விட கனி போன்ற இனிய சொல்லைச் சொல்லி இனிப்புறலாம். கணவன் மனத்தைக் குளிர வைப்பதற்காக தலை கீழாக நடக்கும் மனைவிமார்களும் உண்டு. காலை முதல் இரவு வரை கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு கவனமாக பொறுப்பு நிறைந்த மனைவிகளும் உண்டு.
தனது கொள்கை எல்லாம் கணவனின் நெஞ்சைக் குளிர வைப்பதே என்ற நினைவில் நாளெல்லாம் நைந்து சாகும் மனைவிகளும் இருக்கிறார்கள். அதிலே வெற்றி கிடைக்கும்போது மன நிறைவுடன் ஒரு சந்தோஷப் பெருமூச்சு விட்டால் போதும் அவர்களுக்கு இப்படி நளினமான புத்தியுடன்-குடும்பம் நடத்தும் பெண்கள் குடும்பத்தில் பெயர் போட்டு விடுகிறார்கள் .
சுரணை இல்லாக் கணவர்
இந்நிலையில் சூடு சுரணை இல்லாத சில கணவர்களுக்கு சில சமயங்களில் சுருக்…சுருக்கென்று ஊசி வார்த்தை போட்டால் தான் வேலையே ஆகிறது. அந்த நேரங்களில் தான் கல்லாக இருக்கும் கணவர்கள் கூட கொஞ்சம் அசைந்து கொடுப்பது உண்டு. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற தமிழ் மொழி பெண் இனத்தைக் கோழைத்தனத்திற் குள்ளாவதாக உள்ளது. கணவன் கல்லாகவும் இருக்ககூடாது. புல்லாகவும் இருக்ககூடாது. புருஷன் எப்போதும் புருஷனாக தான் இருக்க வேண்டும். அந்த இலக்கணத்திலிருந்து நழுவி நிற்கும் போது குடும்பச் சூழ் நிலைகளில் பள்ளம் விழ ஏதுவாகி விடுகிறது. இந்தப் பள்ளம் விழாதிருக்க கணவன் மனைவியையும் உணர்வூட்டிக் கொள்வதற்காக சில பேச்சு வார்த்தைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அது ஒருவருக்கொருவர் திருத்திக் கொள்ள உதவுகிறது முன்னேற வழி வகுக்கிறது.
இதற்கு மாறாக காலமெல்லாம் மாடு போல உழைத்துச் சம்பாதித்துப் போடும் நல்ல கணவரிடத்திலே கூட கடுகாக வெடித்துச் சிதறும் மனைவிகளும் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. கோடி கோடியாகச் சம்பாதித்துப் போட்டாலும் அதில் மன நிறைவு கொள்வதில்லை. உயர்வான பொருட்களை வாங்கிப் போட்டாலும் அதை திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதில்லை. பிறர் மேச்சும்படியாகத் தன் மனைவியை நடத்தும் நல்ல கணவர்களுக்குக் கூட கட்டிய மனைவியிடம் நற்பெயர் கிடைப்பதில்லை. இதுதான் பெரும் கைசேதமாக இருக்கிறது.
கணவனின் கொடுமைகளில் மனைவி இருப்பது போல சில குடும்பங்களில் மனைவியின் கொடுமைகளிலும் கணவன் இருப்பது மறுக்க முடியாதது. கட்டிய கணவன் என்ற கண்ணியமே இல்லாதபடி ஏனோதானோவென நடக்கும் மனைவிமார்கள் தன்னை திருத்தி வாழ முயற்சிக்க வேண்டும்.
சிறு சொல் பெரும் பாவம்
கணவனுக்கு அடிபணிந்து நடப்பதைத் தான் இஸ்லாம் சொல்கிறதே தவிர அடிமைப்பட்டுக் கிடக்கும்படிச் சொல்லவில்லை. தேவைப்படும் நேரங்களில் உரிய மரியாதையை கணவனுக்கு அளிக்கும் மனைவியாக வாழ வேண்டும். அதுவே மனைவிக்கும் மரியாதை தரும். தனக்குப் பிடிக்காத ஒரு காரியத்தைத் தனது கணவன் செய்து விட்டாலும்- ஒரு தவறான காரியத்தைக் கணவன் செய்து விட்டாலும் சபைகளிலோ -பெரியவர்கள் முன்னிலையிலோ சிறியவர்கள் முன்னிலையிலோ அவரை அவமானப்படுத்தாமல், தனித்துக் கூப்பிட்டு அவர் தவறைச் சுட்டிக் காட்ட வேண்டும். சப்தம் போடாமல் அமைதியாகப் பேசி விடை காண வேண்டும்.
எதோ சின்னச் சின்னத் தவறுகளுக்காக எகிறி விழுந்து மரியாதை கெட்டத் தனமாக நடந்து விடக் கூடாது. மரியாதை இல்லாத பேச்சை பேசி விடக்கூடாது. எந்த நிலையிலும் மரியாதை வேண்டும். வாழ்வெல்லாம் நமக்குப் பாடுபடும் கணவர் நம்மிடமே ஏச்சுப்பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தக் கூடாது. நமது கணவரை நாமே மதிக்காவிட்டால் பிறர் எப்படி மதிப்பார்கள்? இதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.
”நன்றி மறப்பது நன்றன்று” என்பதை உணர்ந்து இருக்கிறோம். பிறர் செய்த சிறு நன்றியைக் கூட மறக்கக் கூடாது நாம் கணவர் செய்த நன்மைகளை மறக்கலாமா? அதற்கு நன்றி உள்ள பெண்ணாக வாழ வேண்டுமானால் கணவரின் மனமறிந்து நடக்க வேண்டும் . கணவரின் மனம் குளிர்ந்து வாழ வேண்டும். தன் உடல் சக்திகளை எல்லாம் இழந்து நமக்காக பாடுபடும் கணவர் மனைவியிடம் எதிர்பார்ப்பது அன்பான உபசரிப்பு, அன்பான வார்த்தைகள், அன்பான் புன்னகை இவைகளைத் தான். தான் உழைப்பது போன்று தன் மனைவியும் உழைத்து வர வேண்டும் என்று எல்லாக் கணவரும் நினைக்க மாட்டார்.
நன்றி உள்ள மனைவியாக இருக்க வேண்டும் . கணவன் பார்க்கும்போது அவன் சந்தோஷப்பட வேண்டும். கணவனின் பொருட்களையும், பிள்ளைகளையும், தன் கற்பையும் பாத்துக் காத்துக் கொள்ள வேண்டும். நல்ல கணவர்கள். இவர்கள் மனைவியிடம் நல்லபடியாக நடக்கும் கணவர்கள். இப்படி நல்லபடியாக நடக்கும் கணவன்மார்களிடம் நன்றியுடன் நடக்க வேண்டும் என்று தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவியின் தோழிகளுக்கு அறிவுரை கூறி இருக்கிறார்கள்.
நன்றியிலேயே உயர்ந்த நன்றி தன் கணவருக்கு மனைவி காட்டும் நன்றி தான். கணவர் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் மனைவி நன்றியுடன் நடந்தால் கணவரின் இதயத்தில் நல்ல இடம் கிடைக்கும். சுவர்க்கத்திலும் மேலானநல்ல இடம் கிடைக்கும். நல்ல மனைவிமார்களாக வாழ அல்லாஹ் கிருபைச் செய்வானாக! ஆமீன்
அல்லாஹ் மிக அறிந்தவன்.
source: http://islam-bdmhaja.blogspot.in/2014/03/ithayam-idam.html