Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சகோதரியே! சற்று கேள்!

Posted on March 27, 2014 by admin

சகோதரியே! சற்று கேள்!

 மெளலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்ஃபில்.

அன்பிற்கினிய சகோதரியே ! இவ்வுலகில் வாழ ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். அக்குறிப்பிட்ட கால வரையறை முடிவுற்ற அடுத்த கணமே மரணம் வந்துவிடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் அமைக்கப்பட்டுள்ள நம் வாழ்க்கையை நாம்தாம் மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

சோகங்களே நிறைந்துள்ள என் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ள முடியும்? என்று நீ கேட்கலாம். ஆனால் அந்தச் சோகங்கள் நிரந்தரமானவை அல்ல என்றும் அச்சோகங்களைக் கொடுத்த அல்லாஹ்வே அவற்றை நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டவன் என்பதையும் நீ உன் மனதினுள் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ளும்போது உன் சோகங்கள் அகன்று இன்பமாக மாறிவிடும்.

சுகமும் சோகமும் நிரந்தரமல்ல என்பது பொதுவிதி. துன்பத்திற்குப் பின் இன்பமே. துன்பத்திற்குப் பின் இன்பமே என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுவதை ஒரு கணம் நீ எண்ணிப்பார். உன் சோகம் சுகமாக மாறிவிடும்.

ஒரு தடவை திடீரெனப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இரவு நேரம். பயணச்சீட்டு முன்பதிவு செய்யவில்லை. தொடர்வண்டியில் பொதுப்பெட்டிக்குள் மக்களோடு மக்களாகப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். கூட்டம் நிறைந்து வழிகிறது. படியில் கால்வைத்து ஏறுமிடத்திலும் பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். உள்ளே ஏறுவதற்குள் பெருந்துன்பமாகிவிட்டது. நீண்ட நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலை. என் மனைவி என்னைத் திட்டிக்கொண்டே வருகிறாள். என் பிள்ளைகள் தூக்க மயக்கத்தில் இருந்ததால், அங்கு கிடைத்த இடத்தில், தரையில் படுக்க வைத்தோம். அவ்வளவு கடினமான பயணம். அந்தச் சூழ்நிலையிலும் நான் சிரித்துக் கொண்டுதான் வந்தேன். துக்கப்படவில்லை. மனம் வருந்தவில்லை.

உ.பி., பிகார் போன்ற வட மாநிலங்களில் தொடர்வண்டி பற்றாக்குறையாலும் மக்கள்தொகை மிகுதியாலும் பயணம் செய்ய இடம் கிடைக்காமல் தொடர்வண்டியின் மேற்கூரையில் பயணம் செய்வதை நாளிதழ்களில் படித்திருக்கிறேன். நமக்குத் தொடர்வண்டிக்குள் நிற்பதற்கேனும் இடம் கிடைத்ததே என்றெண்ணி மகிழ்ச்சியடைந்தேன். ஆம் ! இப்படித்தான் நம் வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள் அவ்வப்போது நம்மை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கும். அவற்றைச் சமாளித்து வெற்றிகொண்டு மகிழ்வதே வாழ்க்கை.

சின்னச் சின்னச் சிக்கல்கள் உன் வாழ்க்கையில் வரும்போது நீ அதற்காகப் பெரிய அளவில் வருத்தப்படக்கூடாது. மாறாக, அத்தருணத்தில் அதைவிடப் பெரிய சிக்கலை எண்ணிப் பார்த்து, அது நம்மை அடையாமல் போனதே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும். பெரிய கோட்டைச் சிறிய கோடாக மாற்ற, அதைவிடப் பெரியதொரு கோட்டை அதனருகில் வரைந்தால் முதல்கோடு மிகச் சிறியதாக மாறிவிடும். அதே நிலைதான் வாழ்க்கையை இயல்பாக எடுத்துக் கொள்கின்ற, இறைநம்பிக்கை கொண்ட ஆண் – பெண்களின் நிலை. அதையே அல்லாஹ் விரும்புகின்றான்.

உனக்கு உன் கணவன்தான் பிரச்சனை என்றால், கணவனே இல்லாமல் விதவையாக இருந்துகொண்டு, நாள்தோறும் சமுதாய மக்களின் ஏச்சுப் பேச்சுகளை காதில் வாங்கிக்கொண்டு வெம்பி, நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்களைப் பார் அத்தகைய சோக நிலையை எனக்குத் தராத அல்லாஹ்வுக்கே நன்றி என்று கூறு. உன் பிரச்சனை எங்கோ ஓடி மறைந்துவிடும்.

உன் மாமியார்தான் உனக்கு ஒரு மிகப்பெரும் சிக்கல் என்றால், அவரின் மனதைக் கவர உன்னால் இயன்றதைச் செய். உங்களுக்கு என்ன பிடிக்கும் மாமி? என்று மனம் விட்டுக் கேள் ! அதை அவருக்குச் செய்துகொடு. உன் பிரச்சனை தீர்ந்துவிடும். அத்தோடு குடும்பமே இல்லாமல், உறவினர்களே இல்லாமல் ஒற்றையாக வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்டிர்களைச் சற்று உற்றுநோக்கு. எனக்கு ஓர் அழகான குடும்பத்தையும், கணவன், பிள்ளைகள், மாமனார், மாமியார் போன்ற உறவுகளையும் அமைத்துக் கொடுத்துள்ள அல்லாஹ்வுக்கே நன்றி என நீயாகவே கூறுவாய். அதன்பின் உன் சோகம் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இப்படி ஒவ்வொரு துக்கம் ஏற்படும்போதெல்லாம், அதைவிடப் பெரியதை எண்ணிக்கொள். கவலையே உன் வாழ்வில் இருக்காது. நாம் இவ்வுலகில் கவலைகொள்ள பத்துக் காரணங்கள் இருந்தால், நாம் மகிழ்வோடு இருக்க நூறு வழிகளை அல்லாஹ் வைத்துள்ளான். ஒவ்வொன்றையும் நாம் அணுகும் விதத்தில்தான் இருக்கிறது. எனவே உன் மகிழ்ச்சி உன் கையில் என்றுதான் நான் சொல்வேன்.

உன் சோகத்தை மறந்து உன் கணவனை மகிழ்விக்க என்னென்ன வழிகள் உள்ளனவோ அவற்றை நீ கற்றுக்கொள் ! உன் உடல் நிறைய பொன் நகைகள் அணிந்துகொண்டு உன் கணவனை மகிழ்விக்க நினைப்பதைவிட, உன் உதட்டோரப் புன்னகையால் அவனைப் பல மடங்கு மகிழ்விக்க முடியும். எனவே அவனைக் காணும்போதெல்லாம் உன் உதட்டில் புன்னகை இழையோடட்டும் !

ஒரு நல்ல பெண்மணியின் இலக்கணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபோது கணவன் அவளைப் பார்த்தால் அவனுக்கு மகிழ்வூட்டுவாள். அவன் வெளியே சென்றுவிட்டால் அவனுடைய பொருள்களைப் பாதுகாப்பாள். தன் கற்பைப் பாதுகாத்துக்கொள்வாள். என்றுரைத்தார்கள்.

கணவனை மகிழ வைப்பது மனைவியாக உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியமாகும். நீ அவனை மகிழ்ச்சிப்படுத்தினால் அதன் பயனை அனுபவிக்கப்போவது நீதான். ஆம் ! அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது உன்னைத் திட்டமாட்டான். உன்னைக் கடிந்துகொள்ள மாட்டான். உன் சமையலில் குறைகாண மாட்டான். கண்டாலும் மென்மையாகச் சொல்வான். அவனுடைய தாய் உன்னைப் பற்றிக் குறை கூறினால், அவனுடைய பேச்சில் அவ்வளவு வீரியம் இருக்காது. இவையெல்லாம் உனக்கு நன்மைதானே? எனவே நீ உன் கணவனைப் பார்க்கும்போதெல்லாம் உன் உதட்டோரத்தில் புன்னகையைத் தவழவிட மறவாதே !

இதையே உன் மாமியாரிடமும் அண்டை வீட்டுப் பெண்களிடமும் கடைப்பிடி. எல்லோரும் உனக்குச் சாதகமானவர்களாக ஆகிவிடுவார்கள். பிறகு உனக்கென்ன கவலை?

நன்றி : இனிய திசைகள், மார்ச் 2014

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb