இறைநம்பிக்கையை இழக்கச்செய்யும் ஒரு கொடிய பாவம் சூனியம்!
முஜாஹித் இப்னு ரஜீன்
[ சூனியக்காரர்கள் நம்மை எவ்வாறு வழிகெடுக்கின்றார்கள். நமது உள பலவீனங்களை வைத்து ஷெய்தான் நம்மை எவ்வாறு குஃப்ரின்பால் கொண்டு செல்கின்றான் என்பது பற்றி நாம் விரிவாக அறியவேண்டியுள்ளது.]
ஒருவருக்கு சூனியத்தால் நோயேற்பட்டு விட்டது என்று நாம் வைத்துக் கொள்வோம். எதனால் இந்த நோய் ஏற்பட்டது என்று தெரியாத நிலையில் உடனே அவரை பெரும் பெரும் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்கிறார்கள் ஆனாலும் அவர் குணமடையவில்லை. ஒரு சாதரணக் குடிசையிலுள்ள, வித்தியாசமான தோற்றத்தையுடைய ஒருவரிடம் அவரைக் கொண்டு செல்கிறார்கள் அவர் குணமடைந்து விடுகிறார்.
இதற்கென்ன காரணம் என்பதைப் பார்ப்போமானால், ஷெய்தான் மனிதனில் ஏற்படுத்தும் தாக்கம் இரு வகைப்படும். ஒரு மனிதனுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான வழிகளை ஷெய்தான் அறிந்துள்ளான். அதை ஷெய்தான் உபயோகிக்கின்றான்.
மனித உடலுக்கு இரத்தம், நீர் ஆகியன அத்தியாவசியமானவைகளாகும். இரத்த நாளங்களிலெல்லாம் ஷெய்தான் ஓடிக்கொண்டிருக்கிறான் என ஹதீஸில் வருகிறது. ஆகவே ஷெய்தானுக்கு என்ன மாறுதல்களை ஏற்படுத்தலாம் என்பது தெரியும்.
நாம் ஒன்றை நினைக்கும் போது அதற்கு மாற்றமான ஒன்றை நமதுள்ளத்தில் தோன்ற வைக்க ஷெய்தானுக்கு ஆற்றலுண்டு. இதையே நாம் ‘வஸ்வாஸ்’ என்கிறோம். இவ்வாற்றல் கொண்ட ஷெய்தான் நமைச் சூழவிருக்கும் காந்த அலைகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தினால் நமதுடலில் மாறுதல்களை உருவாக்கலாம் என்பதை அறிந்துள்ளான்.
இவ்வகையில் ஷெய்தான் ஏற்படுத்தும் நோய் ஒரு வகையாகும். இந்நோய் ஏற்பட்ட ஒருவரை நீங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றாலோ அல்லது அல்லாஹ்விடம் துஆச்செய்து அல்லாஹ் அதை ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் நாடினால் இது குணமாகிவிடும்.
இதுவல்லாத இன்னொன்றும் உள்ளது ஷெய்தான் தனது மேலதிக ஆளுமையைப் பயன்படுத்தி ஒரு மனிதனில் ஏற்படுத்தும் அபரிமிதமான தாக்கங்களே அது. இவ்வகையைப் பொருத்தமட்டில் நீங்கள் எங்கு சென்றாலும் இதைக் குணப்படுத்த முடியாது. இரு இடங்களில் இது குணமடைய வாய்ப்புண்டு. ஒன்று ஷிர்க்கின் பால் செல்வது. அதாவது தாயத்துப் போட்டால் குணமாகும். ஷிர்கான வாசங்களை மொழிவதனால் குணமாகும். இறை நம்பிக்கையை எப்போது அந்த நபர் இழப்பாரோ அப்போது குணமாகும்.
ஜின்பிடித்த சிலருக்கு தாயத்தைப் போட்டதும் அடங்கிவிடுவர். தாயத்தைக் கழட்டிவிட்டால் மறுபடியும் ஆடத்துவங்கிடுவர் இதை நாம் நேரில் கூட காணலாம். சிலர் இதை வைத்து தாயத்தை ஓர் அற்புதாமாகக் கூறுவர். தௌஹீத் கருத்திலுள்ள சிலருக்கு இதனால் பயமேற்படடதைக் கூடக் கண்டிருக்கிறோம். இது ஷெய்தான் மனிதனை தன்னை வணங்க வைக்கும் சந்தர்ப்பமாகும். இவ்வகையிலும் ஒருவர் குணமடையலாம்.
இது குணாகும் 2வது வழி இறைவனை நெருங்குவது அவனைப் பிரார்த்திப்பது குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது .இவ்வகை நோய்கள் குணமாக அல்குர்ஆனும், ஸுன்னாவும் நமக்குப் பல வழிகாட்டல்களைத் தந்துள்ளன.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது இந்த இரண்டாவது முறையில் பாதிப்படையச் செய்வதே. அதாவது சூனியக்காரர்களினால் குணமடையும் முறையாகும். சூனியக்காரர்கள் நம்மை எவ்வாறு வழிகெடுக்கின்றார்கள். நமது உள பலவீனங்களை வைத்து ஷெய்தான் நம்மை எவ்வாறு குஃப்ரின்பால் கொண்டு செல்கின்றான் என்பது பற்றி நாம் விரிவாக அறியவேண்டியுள்ளது.
உலகில் நமக்குப் பயனளிப்பவைகள் அனைத்தும் ஹலால் எனவும், நமக்குப் பயனளிக்காதவைகள் ஹராம் எனவும் நாம் நம்பியுள்ளோம் இது மாற்றப்பட வேண்டிய ஒரு தவறான நம்பிக்கையாகும். உலகில் பயன் தருபவையனைத்தும் ஹலால் என்றால் வட்டி ஹலாலாக இருந்திருக்கும். பாதிப்பை ஏற்படுத்துபவை ஹராமாக இருக்குமென்றால் வியாபாரம் ஹராமாக இருந்திருக்கும். வட்டியெடுத்தால் செல்வந்தனாகலாம்.
வியாபாரம் செய்தால் ஓரளவுக்குத்தான் முன்னேறாம். நலவு, பாதிப்புக்களை வைத்து இஸ்லாம் ஹலால், ஹராமை வகுக்கவில்லை. ஒருவருக்கு பசியேற்படுகிறது அவர் நாய்க்கறி சாப்பிடுகிறார் அவருக்குப் பசி போய்விடுகிறது. இங்கு நாய்க் கறி உண்பதால் அவருக்கு நன்மையொன்று ஏற்பட்டதென்றாலும் நாய்க்கறி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆகவே நலவு, கெடுதியை வைத்து இஸ்லாம் ஹலால், ஹராமைத் தீர்மானிக்கவில்லை என்பதை தெளிவாக நாம் விளங்க வேண்டும்.
அல்லாஹ்வும் தூதரும் பயன்தரும் ஒன்றை ஹராமாக்கினால் அது ஹராமாகும். தீங்கு தரும் ஒன்றை ஹலாலாக்கினால் அது ஹலாலாகும். தீமையான ஒன்று ஏன் ஹலாலானது நன்மையான ஒன்று ஏன் ஹராமானது என்பது பற்றி நம்மால் எதுவும் கூறமுடியாது.
அல்லாஹ் மனிதனுக்கு இரு பாதைகளைக் காட்டியிருப்பதாகக் கூறியுள்ளான். விபச்சாரம் அடுத்தது திருமணம், களவு அடுத்தது வியாபாரம், கொலை அடுத்தது மன்னிப்பு இப்படி எதை எடுத்தாலும் இரு பாதைகளையும் அவை இரண்டிலும் சமமான வெற்றியையும் அல்லாஹ் வைத்துள்ளான். இணை வைப்பவர்கள் ஆட்சியதிகாரத்திலும், அல்லாஹ்வை நம்பி வாழ்பவர்கள் வறிய நிலையிலுமுள்ளார்கள் இதை வைத்து சரி, பிழையைத் தீர்மானிக்க முடியாது.
நோய் நிவாரணத்துக்கு ஹராமானது ஹலாலானது என இரு பாதைகளை அல்லாஹ் உலகில் வைத்துள்ளான். பசி தீர்ப்பதற்கு ஹராமானது ஹலாலானது என இரு பாதைகளை அல்லாஹ் உலகில் வைத்துள்ளான். ஒருவருக்கு நோயேற்பட்டால் அல்லாஹ் அவருக்கு குறிப்பிட்ட ஒரு தினத்தில் அது குணமடையும் என்பதை எழுதியிருந்தால் அல்லாஹ் இரு பாதைகளை நமக்கு வகுத்துள்ளான். இரண்டில் எதை அவர் தெரிவு செய்தாலும் குறிப்பிட்ட அத்தினத்தில் அவருக்கு அந்த நோய் குணமாகும். குணமாகாது என அல்லாஹ் எழுதியிருந்தால் இரு பாதைகளில் எதை அவர் தெரிவு செய்தாலும் அவருக்கு நோய் குணமாகாது.
ஆகவே தனக்கேற்பட்ட ஒரு நோய்க்காக ஒருவர் தாயத்துப் போடுகிறார். அல்லாஹ் நிர்ணயித்த அந்த தினம் வந்ததும் அவருக்கு நோய் குணமாகின்றது. தாயத்துப் போட்டதால்தான் எனக்கு நோய் குணமாகியது என்று அவர் கூறமுடியாது.
இந்த அடிப்பைடையை நாம் நன்கு தெரிந்திருப்போமானால் ஜின், சூனிய வைத்தியம் செய்வதாக் கூறி ஏமாற்றுவோரிடம் செல்லமாட்டோம். ஒரு முஃமினைப் பொருத்தளவில் இம்மையை விட மறுமையிலேயே அவனுக்கு நல்வாழ்வுள்ளது. மறுமையிலிருக்கும் நல் வாழ்வுக்கு முரணில்லாத ஒரு நல்வாழ்வு அவனுக்கு இவ்வுலகில் கிடைக்குமானால் அதை அவன் எடுத்துக்கொள்வான். மறுமை வாழ்வுக்கு ஈறு விளைவிக்கும் ஒரு நல்வாழ்வு இவ்வுலகில் அவனுக்குக் கிடைத்தால் அவன் அதைப் புறந்தள்ளிவிடுவான்.
அல்லாஹ் தனது திருமறையில் “நீங்கள் முஸ்லிம்களாகவேயன்றி மரணிக்க வேண்டாம்” என்றே கூறுகிறான் சுகதேகிகளாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறவில்லை. நோயில்லாமல் வாழ்வதற்காக நாம் எடுக்கும் பிரயத்தனங்கள் ஏராளம். அதே நேரம் இபாதத் விடயங்களில் இதே முயற்சிகளை நாம் மேற்கொள்வதில்லை. நபியவர்கள் கூட ஒரு காய்ச்சலில்தான் மரணித்தார்கள். நோயொன்று ஏற்படுத்தும் போது இதைக் குணப்படுத்தியே ஆகவேண்டும் என ஒருவர் நினைத்தால் அவர் ஒரு மறுமை நம்பிக்கையற்றவராகவே இருக்க முடியும்.
அல்லாஹ் நாடியிருந்தால்தான் இந்த நோய் குணமாகும் என்று நம்பி ஹலாலான வழிமுறைகள் மூலம் நோயைக் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஹலாலான வழிமுறைகள் மூலம் நோய் குணமாகாத போது ஹராமான வழிமுறைகள் மூலம் நோயைக் குணப்படுத்த முயற்சிப்போமானால் நமது மார்க்கத்தை நாம் விற்கின்றோம் என்பதுவே அதற்கருத்தமாகும். உலக நலவிற்காக மறுமை நலவுகளை இழக்கிறோம் என்பதுவே அதற்கருத்தமாகும்.
குணமாக வேண்டும் என்ற நோக்கில்தான் நாம் சூனியத்தின் பால், ஜின் வைத்தியத்தின் பால் செல்கிறோம். நாம் மறுமையை நம்பியவர்கள் இவ்வுலகில் கஷ்டம் ஏற்படுகின்றது என்பதற்காக நாம் வட்டியின் பால் சென்று விடலாகாது. ஏனென்றால் கஷ்ட, நஷ்டங்களைக் கொண்டும் அல்லாஹ் முஃமின்களைச் சோதிப்பான் இதில் பொறுமையாளிகளுக்கே வெற்றியுண்டு. நஷ்டத்துக்காக வட்டியின் பால் சென்றவனுக்கல்ல. இந்த அடிப்படையை நாம் தெளிவாக விளங்கவேண்டும். ஏனென்றால் நம்மில் பலர் தாயத்தால் நோய் குணமாகாது என்றுதான் கூறுகின்றனர். அப்படியாயின் குணமாகினால் அது ஹலாலகிடுமா? என்று நாம் அவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது. குணமகினாலும் குணமாகாவிட்டாலும் தயத்து ஹராமாகும்.
ஒருவர் இஸ்லாத்துக்குள் நுழைவதற்கும் அல்லாஹ் இரு வழிகளை வைத்துள்ளான். ஓன்று ஷிர்க்கான வழியாகும். மற்றது அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லித் தந்த வழியாகும். அதாவது இசையோடும், சினிமாவோடும் வாழும் ஒருவருக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைச் சொல்லி நல் வழியில் இஸ்லாத்துக்கு எடுக்கலாம். இதே நபருக்கு இசை கலந்த, இஸ்லாம் சாயம் பூசப்பட்ட பாடல்களைக் காட்டி இஸ்லாத்துக்குள் எடுக்கலாம். இதனால் இஸ்லாத்தைத் தழுவி திருந்தியவருக்கு நன்மையிருந்தாலும் இவரைத் திருத்தியவருக்கு பாவமே கிடைக்கும்.
ஏனென்றால் எப்படியாவது ஒருவரை இஸ்லாத்துக்குள் எடுத்து விடுங்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. நல்வழியில் அழைப்பு விடுக்குமாறுதான் கூறியுள்ளான்.; யூனுஸ் நபி எவ்வளவோ முயற்சித்தும் அவருடை சமூகத்துக்கு நேர்வழி கிடைக்காத போது சில நொடிகளில் அந்த சமூகத்துக்கு எவ்வாறு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அதைப் போல யாருக்கு அல்லாஹ் நாடுகிறானோ அவருக்கு நேர்வழி கொடுப்பான். இங்கு நாம் செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே.
இது போலவே நோயுமிருக்கிறது. நோய் உடலிலும் ஏற்படலாம், உள்ளத்திலும் ஏற்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வும் தூதரும் காட்டிய வழிகளைக் கொண்டே நாம் இந்நோய்களுக்கு நிவாரணம் காண முயற்சிக்க வேண்டும். முடியாத போது முடியமான முயற்சிகளை மேற்கொள்வதுடன் அல்லாஹ்விடம் துஆச்செய்வதுதான். ஐயூப் நபிக்கு சதை கரையும் நோயிருந்தது. இன்றைக்கும் இந்த நோய் இருக்கிறது. கோடியில் ஒருவருக்கே இது ஏற்படும் இந்நோயிற்கான மருந்தின் பெறுமதி இந்திய ரூபாவில் சுமார் இரண்டு இலட்சங்களாகும். இந்தியாவில் இலவசமாக இந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள்.
இத்தகைய பாரதூரமான நோய் தனக்கு ஏற்பட்ட போது ஐயூப் நபி ஏழு வருடங்களாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். ஆனாலும் அவரால் நோயிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இயலவில்லை. ஆகவே அல்லாஹ் கத்ரில் எழுதியிருந்தால் நோய் குணமாகும். எழுதிராவிட்டால் குணமாகாது. மறுமைக்காகத்தான் நாம் வாழ்கின்றோம் என்ற பலமான நம்பிக்கையினடிப்படையில் அமைந்த வாழ்வே இங்கு நமக்கு அவசியமாகும். இந்த மன உறுதி நம்மிடமிருந்தால் நாம் ஏமாறாமல் இருப்பதற்காக சில ஆலோசனைகளை நான் சொல்கிறேன்.
சூனியம் செய்வதாகக் கூறுவோரிடம் சென்று பார்க்கும் போது தாவரங்கள், சில வகைக் காய்கள், குர்ஆன் அட்டைகள் போன்றவற்றை வைத்திருப்பார்கள். தாம் நாட்டு வைத்தியம் செய்வதாகவும், குர்ஆனிய மருத்துவம் செய்வதாகவும் காட்டுவதற்கே அவர்கள் இவைகளை வைத்துள்ளார்கள். மக்கள் தமை நம்பவேண்டும் என்பதற்காக இவை போன்ற மேலும் சில ஆவனங்களை அவர்கள் வைத்திருப்பார்கள். ஆனால் இவைகளனைத்தும் பொய்யாகும். அவர்கள் சூனியக்காரர்கள்தான் என்பதற்கு அடையாளம் என்னவெனில் அவர்களிடம் மருத்துவம் செய்வதற்காக யாராவது சென்றால்
அவருடை தாய், தந்தை இருவரின் பெயர்களைக் கேட்பார்கள். இதுவொன்று.
அடுத்ததாக சீப்பு, ஆடைத்துண்டு, முடி, நகம் போன்றவைகளைக் கேட்பார்கள்.
அல்லது ஆடு, கோழி போன்ற பிராணிகளை அறுத்து ஏதாவதோர் இடத்தைக் கூறி அங்கே அதைப் போடுமாறு சொல்வார்கள். அதாவது ஷெய்தானுக்கு தாமாக செய்ய வேண்டிய வணக்கங்களை மக்கள் மூலம் அவர்கள் செய்கிறார்கள். நமக்கு தொழுகை, ஸகாத் போன்ற கடமைகள் இருப்பதைப் போல ஷெய்தானை வணங்கும் அவர்களுக்கும் சில கடைமைகளுண்டு.
மிருகங்களின் இரத்தங்களைக் கொண்டு வரச்சொல்வார்கள். காயங்களுக்கு அதனைப் பூசுவார்கள். மேனியிலே பூசுவார்கள்.
சில நேரம் குறியீடுகள், அடையாளங்கள் போன்றவற்றை எழுதி தண்ணீர்ப் பாத்திரத்திலிட்டுக் குடிக்குமாறு நோயாளியிடம் சொல்வார்கள்.
நட்சத்திர ஒளியில் இவற்றை வைக்கச் சொல்வார்கள்.
கைகளை நீட்டச் சொல்லி கைகளை வாசித்து நோயிருப்பதாகச் சொல்வார்கள். இவர்களிடம் காணப்படும் விஷேட அம்சம் யாதெனில்
ஒருவர் அவர்களிடம் சென்றால் அவர் எங்கிருந்து வந்துள்ளார். ஏதற்காக வந்துள்ளார். அவருக்கு என்ன நோயிருக்கிறது போன்ற தகவல்களைச் சொல்வார்கள். ஷெய்தானுக்கு அடிமையாகியுள்ள இவர்களுக்கு ஷெய்தான் இவை போன்ற அற்ப உதவிகளைச் செய்து கொடுக்கிறான். ஷெய்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை அல்லாஹ் கீழ்வருமாறு கூறிக்காட்டுகிறான்.
هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ الشعراء : 221 ، 222
”ஷைதான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?, இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.” (அஷ்ஷ{அரா : 221-222)
சிலர் தாயத்துக்களை எழுதி ஒரு பையிலிட்டுக் கொடுப்பார்கள்.
இன்னும் சிலர் ஆடைகளில் முழுவதுமாக இது போன்ற அடையாளங்களை எழுதிக் கொடுப்பார்கள்.
இன்னும் சிலர் குர்ஆன் தாளில் மாதவிடாய் இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வரச்சொல்வார்கள். இது இலங்கையிலும் நடந்துள்ளது. ‘நஊது பில்லாஹி மின்ஹா’ இது எவ்வளவு பாரதூரமானது என்பதைப் பாருங்கள். எப்படியாவது தமது நோய் குணமாக வேண்டும் என்று அலைபவர்களை இத்தகைய கேவல நிலைக்கு இலகுவாய் கொண்டு சென்றிடலாம்.
சிறு நீர் கழித்து தொடைத்து விட்டு வருமாறெல்லாம் இந்த சூனியக்காரர்கள் கூறுவார்கள்.
குர்ஆனை தழைகீழாய் எழுதச் சொல்வார்கள். எந்தளவுக்கு இஸ்லாத்தைக் கேவலப்படுத்த முடியுமோ இந்தளவுக்கு இவர்களை நெருங்கலாம்.
நாம் மேலே கூறிய இவைகளனைத்தும் கற்பனைகளல்ல. சவுதி அரேபியாவிலிருக்கும் ஏவல் விலக்களுக்கான அமைப்பு என்ற நிருவனம் மேற்கொண்ட தேடுதலின் போது கிடைத்த தகவல்களே இவைகளாகும்.
ஈயத்தைக் கரைத்து ஊற்றுமாறு சொல்வார்கள்.
மிருகங்களின் தோல்களை வாகனங்களில் கட்டச் சொல்வார்கள்.
இவற்றின் மூலம் உங்களுக்கு இவ்வுலகில் சிலவேளை குணமேற்பட்டாலும் மறுமையில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். وَمَا كَفَرَ سُلَيْمَانُ ஸ{லைமான் ஏக இறைவனை மறுக்கவில்லை.
அல்லாஹ் தொடர்ந்தும் பின் வருமாறு கூறுகிறான்.
وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللَّهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ البقرة : 103அவர்கள் நம்பிக்கை கொண்டு இறைவனை அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் கூலி மிகவும் சிறந்தது. அவர்கள் அறிய வேண்டாமா?
(அல்பகரா : 103)
சூனியம் எவ்வளவு பாரதுரமானது என்பதை நபியர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
صحيح البخاري – (17 234)
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ
ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அவை என்னவென்று நபித்தோழர்கள் கேட்ட போது ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம், அல்லாஹ் தடை செய்த ஆத்மாக்களைக் கொலை செய்தல், வட்டி சாப்பிடல், அனாதையின் சொத்தைச் சாப்பிடல், யுத்தத்திலிருந்து விரண்டோடுதல், பத்தினிப் பெண்களை அவதூறு கூறுதல்’ என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி
மேலுள்ள ஹதீஸில் நபியவர்கள் சூனியத்தை இரண்டாவது மிகப்பெரும் பாவமென வகைப்படுத்தியிருப்பது சூனியத்தின் பாரதூரத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே சூனியத்தை நம்பி ஏமாந்து போகும் சசேகாதரர்கள் இத்தரவுகள் மூலம் சூனியம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூனியத்தினால் நோய் நிவாரணம் பெற முயல்வது பசிக்காகப் பன்றியதைப் புசிப்பது போலாகும். இத்தகையோர் மறுமையில் நஷ்டவாளிகளே.
سنن أبى داود-ن – 3907 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُسَدَّدٌ – الْمَعْنَى – قَالاَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- அ مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ .
யார் நட்சத்திரக் குறி பார்த்தலைக் கற்கிறாரோ அவர் சூனியத்தைப் படித்தவர் போலாவார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவுத்)
நட்சத்திரக் குறி பார்ப்பது, சூனியம் செய்வதைப் போன்றது என்பதன் மூலம் சூனியத்தின் அகோரம் இந்த ஹதீஸில் தெரிகிறது.
ஆகவே நோய் குணமாகிறது என்பதற்காக சூனியத்தின் பால் செல்லும் சகோதரர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அவர்கள் அல்லாஹ்விடமே பிரார்த்தித்தார்கள். அதனால் அவர்களுக்குக் குணமேற்பட்டது. ‘நபியவர்களுக்கு சூனியம் காட்டப்பட்டது எங்களுக்கு அவ்வாறு காட்டப்படுமா?’ என சிலர் வினவலாம்.
நபியவர்களுக்கு சூனியம் காட்டப்பட்டது என்பது உண்மைதான். அதற்காக நபியவர்கள் அதைப் பிரிக்கவோ வெட்டவோ முயற்சிக்கவில்லை. அல்லாஹ்வின் உதவிக்காக பிராத்தனையில்தான் ஈடுபட்டார்கள் சூனியம் தனக்குக் காட்டப்பட்ட போதும் மாற்று வழி காண நபியவர்கள் நினைக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே சூனியத்துக்கு இதுவே சரியான நிவாரணம் என்பதுடன் மறுமையை நம்பியவர்களின் வழியும் இதுதான் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
-முஜாஹித் இப்னு ரஜீன்
source:: http://mujahidsrilanki.com