எழுத்தின்போது ‘பிஸ்மில்லாஹ்’
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம், பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தைக்கு இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமான ஒரு திக்ர் இறை ஞாபகம் என்பதற்கு நூற்றுக் கணக்கான ஹதீஸ்களைக் காணலாம்.
பிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பிக்கக் கூடிய காரியங்கள் எமக்கு இளகுவாக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் வன்னம் பல ஹதீஸ்களைக் காண முடிகின்றன. இதனால்தான் இந்த பிஸ்மில்லாஹ்வை இஸ்லாமிய சமூகம் அனைத்துக் காரியங்களின் ஆரம்பத்திலும் பயன்படுத்து வருகிறது.
எழுதும்பொழுது ஆரம்பத்திலே பிஸ்மில்லாஹ்வை எழுதுவது பற்றி என்ன நிலை என நபிவழியில் தேடிப் பார்த்தால் நபிமார்கள் எங்கெல்லாம் எழுதினார்கள் என்ற செய்தி வருகிறதோ அங்கெல்லாம் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டே ஆரமபம் செய்துள்ளதைக் காண முடிகிறது.
தாம் இதனை யாருக்கு எழுதுகிறோம் அவர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அவர்கள் கவனித்ததாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.
1. நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இணைவைக்கும் அரசிக்கு எழுதிய கடிதத்தை இறைவன் குறிப்பிடும்போது
اذْهَبْ بِكِتَابِي هَذَا فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُونَ (28) قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ (29) إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (30) أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ (31)} النمل: 28 – 31
‘என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி: அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி‘ (என்று கூறினார்). (அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: ‘பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.‘ நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது இன்னும் நிச்சயமாக இது ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்‘ என்று (துவங்கி) இருக்கிறது. ‘நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்‘ (என்றும் எழுதப்பட்டிருக்கிறது). நம்ல்: – 2831
இங்கே அந்த அரசி அந்த பிஸ்மில்லாஹ் எழுதப்பட்ட கடிதத்தை மதிப்பதை விட அவமதிப்பதற்கே வாய்ப்புண்டு இருப்பினும் எழுத்தில் ஸுலைமான் நபியவர்கள் அதைக் கடைபிடித்ததைப் பார்க்கிறோம்.
2. அதே போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு ஆரம்பித்ததைப் பார்க்கிறோம். அவைகளில் மாத்திரம் அல்ல.
3. ஹுதைபியா உடன்படிக்கையின் போதும் நபியவர்கள் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்‘ என்று ஆரம்பிக்க பிரச்சனை உருவாகியது. புpஸ்மில்லாஹ்வை ஏற்கிறோம் ரஹ்மான் என்பது எமக்குத் தெரியாது நாம் உடன்பாடாய் உள்ள ‘பிஸ்மில்லாஹ்‘ என்ற வர்த்தைகொண்டெழுதுமாறு சொல்ல நபியவர்கள் அதைக் கொண்டு எழுதிய செய்தியைப் பார்க்கிறோம்.
அந்த வார்த்தையைக் கொண்டு எழுத்தை ஆரம்பிப்பதில் உள்ள முக்கியத்துவமே நபியவர்கள் அப்படிப்பட்ட இக்கட்டான பிரச்சனையான சூழ் நிலையிலும் பிஸ்மில்லாஹ் என ஆரம்பிக்கக் காரணம். இந்த செய்தி முஸ்லிமில் 1784வது இலக்கத்திலே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகள் அனைத்தும் முஸ்லிம்கள் தமது எழுத்துக்களை ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. துண்டுப்பிரசுரங்களில் அவ்வாறு எழுதினால் மதிக்கப்படாத நிலைக்குச் செல்ல வாய்ப்புண்டு என்பதெல்லாம் ஏற்கத் தக்க வாதமல்ல என்பதை மேலுள்ள செய்திகள் எமக்குணர்த்துகின்றன.
இதுவல்லாமல் அல்லாஹ் என்றும் முஹம்மத் நபியென்றும் இன்னும் நபிகளாருக்கு ஸலவாத் சொல்லியும் நபித் தோழர்களுக்கு திருப்தியைப் பிரார்த்தித்தும் துண்டுப்பிரசுரங்களிலும் இன்னும் பல ஊடகங்களிலும் நாம் எழுதவே செய்கிறோம். அவைகளையெல்லாம் எழுதிவிட்டு பிஸ்மில்லாஹ்வை மாத்திரம் தவிர்ப்பது சரியான பார்வையல்ல. அல்லாஹ் மிக அறிந்தவன்.
source: http://mujahidsrilanki.com