பெண்களின் இதயம் காப்போம்!
டாக்டர் கு. கணேசன்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்றைய இளைஞர்களையும் இளம்பெண்களையும்தான் பெரிதும் சார்ந்திருக்கிறது.
இன்றைய தினம் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இருப்பது, உழைக்கும் வயதிலுள்ள இளைஞர்களும் இளம் பெண்களும்தான் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
வளர்ந்த நாடுகளுடன் போட்டிபோட்டு வளர்ந்துவரும் மென்பொருள் துறை, கணினித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, கல்வித் துறை, நிதி மற்றும் வங்கித் துறைகளில் இன்றைய பெண்கள் எண்ணிக்கையிலும் சரி, உழைப்பிலும் சரி ஆண்களைவிட அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கை நிறைய சம்பளம், வளமான வாழ்வு இன்று இவர்கள் கையில். அதே நேரத்தில், இவர்களின் ஆரோக்கியம்குறித்து நாம் அறியும் செய்திகள் மகிழ்ச்சி தருபவையாக இல்லை.
பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை
கடுமையான மூளை உழைப்பையும் குறைவான ஓய்வு நேரத்தையும் வலியுறுத்துகின்ற பணிச் சூழல் களால் மன அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கேடுகள் பெண்களிடம் அதிகரித்துவருவதாகச் சென்னையிலும் இந்தியப் பெருநகரங்களிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. ‘ஹீல் ஃபவுண்டேஷன்’ எனும் இதயநோய் ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதயநோய்களுடன் சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை 20% வரை அதிகரித்துள்ளது.
ஈஸ்ட்ரஜன் குறைவது ஏன்?
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதைக் கடந்த – மாதவிலக்கு நின்றுபோன – பெண்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படுவது வழக்கம். காரணம், பெண்களுக்கு இயற்கையிலேயே சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் எனும் ஹார்மோன் இவர்களுக்கு மாதவிலக்கு நிற்கும்வரை மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த ஹார்மோன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்; ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும்;
எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, ஹெச்.டி.எல். எனும் நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி, இதயத்துக்குப் பாதுகாப்பு தரும். ஆனால், இப்போதோ இந்தியாவில் 30 வயதுள்ள பெண்களும் மாரடைப்புக்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. ஈஸ்ட்ரஜன் அளவு இன்றைய பெண்களுக்கு வெகுவாகக் குறைந்துவிட்டதுதான் காரணம் என்கிறது ‘ஹீல் ஃபவுண்டேஷன்’.
சரி, இப்போது மட்டும் இந்த ஹார்மோன் ஏன் குறைவாகச் சுரக்கிறது? ‘பெண்களிடம் அதிகரித்துவரும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம் ஒரு முக்கியக் காரணம்’ என்கிறது அந்த நிறுவனம். ஆரோக்கியம் காக்கும் இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் இப்போது பொதுவாகவே குறைந்து விட்டது. மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது. சிறுதானியங்களின் மதிப்பை நாம் மறந்துவிட்டோம். பருப்புகளின் பலனைப் புறந்தள்ளிவிட்டோம். காய்கறிகளைச் சமைக்கச் சோம்பல் வந்துவிட்டது.
பதிலாக, அடிக்கடி உணவகங்களுக்குச் சென்று, எண்ணெயில் வறுத்த, பொரித்த, கலோரிச் சத்து மிகுந்த பீட்ஸா, ஹாம்பர்கர் போன்ற துரித உணவுகளையும் அசைவ உணவுகளையும் மிகையாக உண்பது வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் உள்ள பெண்களுக்கு உடலுழைப்பு குறைந்துவிட்டது.
உடற்பயிற்சியும் இல்லை. இதனால், இவர்களுக்கு வளர்சிதை மாற்றத்தில் அசாதாரண மாற்றம் ஏற்பட்டு, இளமையிலேயே உடற்பருமன் வந்துவிடுகிறது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது; இன்சுலின் எதிர்ப்பை அதிகப்படுத்துகிறது; நீரிழிவு நோயையும் இதய நோய்களையும் கூட்டுசேர்த்துவிடுகிறது.
இதயநோய்குறித்த முழு ஆய்வு ஒன்று, வளரும் நாடுகளில் இருக்கும் மக்களைவிட இந்தியாவில் நீரிழிவு நோயும் மாரடைப்பும் இளம் வயதிலேயே பெண்களுக்கு ஏற்படுகிறது என்றும், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் கிராமப்புறங்களில் மூன்று முதல் ஐந்து சதவீதமும், நகர்ப்புறங்களில் 8 முதல் 10 சதவீதமும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. இவற்றின் விளைவால், பெண்களுக்கு இதய நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
அடுத்து, பெருநகரங்களில் பணிபுரியும் பெண்கள் சமைக்கும் நேரத்தைக் குறைக்கும்பொருட்டு, பதப்படுத்தப்பட்ட உடனடி உணவுகளையே இப்போது அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த உணவுகளில் உப்பு அதிகம்; டிரான்ஸ் கொழுப்பு கூடுதல். இதனால் ரத்த அழுத்தம் எகிறுகிறது.
இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. இதயத்துக்குக் கேடு செய்யும் டிரைகிளிசரைட்ஸ், எல்.டி.எல். கொழுப்பு போன்றவை ரத்தத்தில் அதிகரித்து, இவர்களின் இதயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு முக்கியக் காரணம், பணிச்சுமை ஏற்படுத்தும் மனச்சுமை. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறைந்த அளவு காலக்கெடுவுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்துத்தர வேண்டிய அவசரமும் அவசியமும் இவர்களுக்குப் பெரிய மனச்சுமையைத் தருகிறது.
இதுமட்டுமன்றி, பெண்களுக்குக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கூடுதல் மன அழுத்தத்தைத் தருகிறது. இதனால், உழைக்கும் பெண்களிடம் புகைக்கும் பழக்கமும், வார இறுதிக் கொண்டாட்டங்களில் மது அருந்தும் பழக்கமும் அதிகரித்துவருவதாக அண்மையில் வந்துள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆம், பணிக்குச் செல்லும் பெண்களில் பலர் தங்கள் பணிச்சுமையை மறக்க, புகைபிடிக்கும் பழக்கத்துக்கும் மது அருந்தும் பழக்கத்துக்கும் உள்ளாகின்றனர். இவை இரண்டும் இதயத்துக்கு ஆபத்து தரும் என்பதைத் தெரிந்தே செய்கின்றனர்.
இன்றைய பெண்கள் தங்கள் மனச்சுமையைக் குறைப்பதற்கு முறையான ஓய்வு, சுற்றுலா, விடுப்பு, குடும்பத்தினருடன் உறவை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் ஈடுபட்டால், தங்களுக்கு ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தவிர்க்க முடியும் என்கிறது ‘ஹீல் ஃபவுண்டேஷன்’.
மேலும், சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடல் பருமனைத் தவிர்ப்பது, நிறைய காய்கனிகள் மற்றும் கீரைகளை உண்பது, எண்ணெயில் ஊறிய, கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக்கொள்வது, மென்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பது, புகைப்பழக்கத்தைக் கைவிடுவது, தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி/உடற்பயிற்சி செய்வது, தினமும் குறைந்தது 6 மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பது போன்ற மேம்பட்ட வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றினால், மொத்த உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் நாள் உலக இதயநோய் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு ஆரோக்கியமான இதயத்துக்குப் பாதை அமைப்போம்’ எனும் குறிக்கோளை முன்னிறுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் இதய நலம் காப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.
இன்றைய பெண்களை நாம் அறிவுள்ளவர்களாகவும் ஆற்றல் உள்ளவர்களாகவும் ஆளாக்கிவருகிறோம் என்பதில் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில், சிறந்ததொரு சமூகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றும் பெண்களை ஆரோக்கியம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை அல்லவா?
– டாக்டர் கு. கணேசன், பொது நல மருத்துவர்,
– தி இந்து