துன்பத்தைத் தரும் உறவுகள்
பொதுவாகவே துன்பகரமான உறவுகள் என்று சொல்லும்போது கணவன் மனைவி உறவு முறை தான் முதலில் நமக்குத் தோன்றும். பெரும்பாலும் கணவனால் துன்புறுத்தப்பட்ட மனைவி தான் அதிகம். ஆனால் காலத்தின் கோலம் இப்போழுது மனைவியினால் துன்புறுத்தப்பட்ட கணவனும் இந்தப் பிரிவில் வந்து அடங்கியிருக்கிறது. மனைவி கணவன் இருவருக்கும் வேலை பளு, தாங்க முடியாத மன அழுத்தத்தினால் ஒருவரை ஒருவர் துன்புறுத்தி வீடே நரகமாகிவிடுகிறது. இந்தப் பிரிவில் இப்போ பெற்றோர்/பிள்ளைகள் உறவும் வந்துவிட்டது தான் கொடுமை!
ஏன் இந்தக் கொடுமையான உறவில் ஒருவர் நீடிக்கிறார்? முக்கியமான காரணம் பொருளாதாரம். நிதி நிலைமையில் சுதந்திரம் இல்லாததால் கணவனையே சார்ந்திருக்கும் நிலைமை. அடுத்து ஒரு பயம், எப்படி தனித்து வாழ்வது, அப்படி வாழ்ந்தாலும் ஊர் என்ன சொல்லும், என்னை நிம்மதியாக வாழ விடுமா அல்லது வாழாவெட்டி என்று சொல்லுமா போன்ற எண்ணங்கள்/கவலைகள் ஒரு காரணம். தனித்து வாழும் பெண்ணை இன்னும் ஏளனமாகப் பார்க்கும் இந்த சமுதாயம் மாறவில்லை. ஆனால் எல்லாவற்றிர்க்கும் மேலான காரணம் குழந்தைகள். குழந்தைகளுக்காக அனைத்தையும் சகித்துக் கொள்கின்றனர் பெண்கள்.
குடிகார ஆண்களுக்கு இரு முகங்கள் உண்டு. ஒன்று அன்பான அனுசரணையான முகம், மது அருந்தாதபோது. மற்றொன்று அவதூறு பேசி மனைவியை புரட்டி அடிக்கும் குடிகார முகம். இந்த மாதிரி கணவனை கொண்ட மனைவி படும் வேதனை வார்த்தைகளில் அடங்காதது. ஆனால் அவளை நேசிக்கும் உறவினர்களும் நண்பர்களும் கூட அந்த கணவன் குடிக்காதபோது செயல்படும் விதத்தைப் பார்த்து அவனுடனேயே குடித்தனம் நடத்தும்படி அறிவுறுத்துவர்.
இன்னும் பல கொடூரமான முகங்களும் பல ஆண்களுக்கு உண்டு. அவற்றில் ஒன்று, சித்திரவதை செய்வதில் இன்பம் காணும் முகம், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் மனைவி வீட்டில் இருந்து சீர் செய்யச் சொல்லும் பேராசை முகம், நல்ல நடத்தையுள்ள மனைவியை சதா சந்தேகிக்கும் மற்றொரு விகார முகம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்டக் கணவனுக்கு மனைவியான துர்பாக்கியவதி எந்நேரமும் துன்பப்படுகிறாள்.
மனைவிகள் மட்டும் இத்துன்பத்திற்கு ஆளாவதில்லை, கணவன்களும் மனைவிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆண்களும் இந்த மாதிரி உறவில் தொடர்ந்து இருப்பதற்கு மூல காரணம் குழந்தைகள் தான். அவர்கள் மேல் உள்ள அன்பால், அல்லல் படுத்தும் பெண்டாட்டிகளையும் அனுசரித்து செல்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி உறவுகளில் இருந்து எளிதாக வெளிவர ஆணால் முடியும். ஏதோ ஒரு சில சமயங்களில் மனைவி/தோழியின் மேல் உள்ள அதீத மோகத்தால் அவள் சொல்படி ஆடிக்கொண்டு அந்தத் துன்ப சூழ்நிலையில் சிக்கி வாழும் சில ஆண்கள் உண்டு. அவர்களுக்கு விமோசனம் கவுன்சலிங் தான். கருத்துரை வழங்குபவரின் உதவியை நாடி அவர் பேச்சைக் கேட்டு அந்த துன்ப உறவில் இருந்து தப்பிக்கலாம்.
எந்தத் துன்பத்தையும் தாங்குவதற்கு ஓர் எல்லை உண்டு. தாங்க முடியாது உடையும் தருணம் ஒன்று அப்படித் துன்பப்படுபவர்களுக்கு வரும். அப்பொழுது, ஒன்று அந்த உறவில் இருந்து தைரியமாக வெளியே வருவார்கள், அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நண்பர்களும் உறவினர்களும் தான் பெரும் உதவி செய்ய வேண்டும். நொந்த நிலையில் இருப்பவர்களுக்கு தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு மிகவும் குறைவாக இருக்கும். சிந்திக்கும் திறனைக் கூட இழந்து விடுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள நண்பர்களும் உறவினர்களும் தான் அவர்கள் ஏதாவது விபரீத முடிவை நோக்கிச் செல்கிறார்களா என்று கவனித்து தக்கத் தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்து காக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் எல்லாம் தன் கணவனைப் பற்றிப் பெருமையாகவே பேசுவார். ஒரு நாள் தீக்குளித்து இறந்து விட்டார். பின் விசாரித்ததில் அவரின் கணவன் அவரின் மனத்தையும் உடலையும் மிகவும் துன்புறுத்தியதால் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்திருக்கிறார் என்று தெரிய வந்தது. பின் ஏன் அவர் தன் கணவனைப் பற்றி அலுவலகத்தில் புகழ்ந்து பேசியிருக்கிறார்? தன் இழி நிலை பிறருக்குத் தெரியக் கூடாது என்று நினைத்திருப்பார் போலும்.
பல வருடங்களுக்கு முன் என் குடும்ப நண்பரின் அருமை மகள் இரு சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுவிட்டு ஓடும் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இது நடந்தது கலிபோர்னியா மாகாணத்தில் ப்ரீமான்ட் என்னும் நகரத்தில். திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவள் கணவனின் குணம் தெரிந்து தன் பெற்றோர்களிடம் மகிழ்ச்சியில்லா தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறாள். அனால் அதற்குள் அவள் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்தது. உடனே அவள் பெற்றோர்கள், குழந்தை பிறந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று வழக்கமான பல்லவியை பாடியிருக்கிறார்கள். ஆனால் அது மாதிரி எந்த அதிசய நிகழ்வும் ஏற்படவில்லை.
மறுமுறை கர்ப்பம் தறித்த பின் துன்பம் தாங்க முடியாமல் கணவனைப் பிரிந்து பெற்றோர் இல்லம் வந்து சேர்ந்தாள். குழந்தை பிறந்த பின் கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்தாள். தான் பட்ட மன உளைச்சல்களையும் உடற் துன்பங்களையும் சொல்லியழுதாள். ஆனால் பிள்ளையின் பெற்றோர்களின் வற்புறுத்தலாலும், தன் பெற்றோர்கள் இவளை புரிந்து கொள்ளாமல் இவளை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததாலும் மிகுந்த வருத்தத்துடன் திரும்பிச் சென்றாள். அவள் தந்தை தான் அவளுடன் அமேரிக்கா சென்று அவளையும் குழந்தைகளையும் அவள் கணவன் இல்லத்தில் சேர்த்துவிட்டுத் திரும்பினார். அவர் விமானம் திரும்ப வந்து தரை இறங்கும் முன் அவர் மகள் இறந்த சேதி அவர் குடும்பத்தார்க்கு வந்து சேர்ந்து விட்டது.
அவள் போட்டிருந்த அழகான மூக்குத்தியை வைத்து தான் அவளை அடையாளம் காட்ட முடிந்தது. சின்னாபின்னமாகியிருந்தது உடல். இதை நான் எழுதும்போதே என் கண்கள் குளமாகின்றன, அவ்வளவு நல்ல பெண் அவள். போலிசாரால் கணவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் பிள்ளை பெற்ற பின் வரும் மன அழுத்தத்தில் இருந்தாள் (postpartem depression) இந்த முடிவை தானாகத் தேடிக் கொண்டாள் என்று கூறினான்.
பெண்ணின் குடும்பத்தினர் வேறு நாட்டில் இருந்தனர், என்ன செய்ய முடியும். நடை பிணமாக என்ற சொல் வழக்கைக் கேளிப்பட்டிருக்கிறேன், அந்தப் பெற்றோர்களை பார்த்த பின் அப்படியிருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்து கொண்டேன். பெற்றோர்கள், மகள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள்.
மண வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பவர்கள் துன்பத்தை விளைவிப்பவர் இல்லாத போதும் ஒரு வித பயத்துடனே வாழ்வர். அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று கௌன்சலிங். ஆனால் அந்த முயற்சியை மேற்கொண்டு, பின் கருத்துரை வழங்குபவரின் அறிவுரையை செயல் படுத்த வேண்டியது அந்தத் துன்பப்படுபவரின் பொறுப்பாகிறது. அவர் அந்த உறவை துறந்து தனியே வாழ முடிவு எடுத்த பின் நண்பர்களும் உறவினர்களும் அவர்களுக்கு உற்றத் துணையாக இருந்து, வேலை வாங்கித் தருவதற்கோ, அல்லது இருக்க இடம் (விடுதி அல்லது வீடு) தேடி தருவதற்கோ, அவர்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்கு நல்ல முறையில் உதவி புரிய வேண்டும். ஆனால் இதில் மிகவும் கடினமானது பாதிக்கப்பட்டவர், பிரிவது ஒன்று தான் வழி என்று முடிவெடுக்கும் தருணம் தான். ஏனென்றால் புது வாழ்க்கை எப்படி அமையும் என்று தெரியாததால் ஏற்படும் மனக்குழப்பம் அவர்களை பாதிக்கும்.
இது நாள் வரை அவர்கள் வாழ்வில் அனுபவித்த பல சௌகர்யங்களை இழக்க வேண்டியிருக்கும், சுற்றத்தாரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும், இதுவரை வேலைக்குச் செல்லாதவராக இருந்தால் அதை அனுசரிக்கப் பழகிக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி பலப்பல தெரியாத காரணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதலால் முடிவெடுக்கும் முயற்சியே மிகவும் கடுமையான செயல்பாடு.
இந்த மாதிரி கடுமையான உறவுகளில் இருந்து வெற்றிகரமாக வெளி வந்து வாழ்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதில் நான் அதிசயப்பட்டு தலை வணங்குவது எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்பவரைத் தான். அவர் குடிகாரக் கணவனிடம் பட்டத் துன்பம் சொல்லில் அடங்காதது. ஒரு பிள்ளையையும் பறிகொடுத்திருக்கிறார். ஆனால் தைரியமாக, அழகான இளம் பெண்ணாக இருந்தும், கணவனை விட்டுப் பிரிந்து மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்.
மூவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தன் மூத்த மகளின்(அவள் இளம் வயதில் கணவனை இழந்துவிட்டதால்) மூன்று பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்த்து அவர்களும் சிறப்போடு வாழ்கிறார்கள். வீடுகளிலும், திருமணங்களிலும் சமையல் செய்து அவர் வாழ்க்கை நடத்தியுள்ளார். இது ஒரு தனி ஒருத்தியின் சாதனை. அவருக்கு அந்த காலத்தில் உறுதுணையாக இருந்தது அவருடைய தாய் தான்.
இப்பொழுது கல்லூரியில் பேராசிரியாராக இருக்கும் என் தோழி ஒருவர் ஒரு காலத்தில் கணவனால் துன்புறுத்தப்பட்டு வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்தவர். தன் மதியுக்தியால் வீட்டில் இருந்து தப்பித்து (திரைப்படங்களில் வருவது போல) பின் தன் ஊர் சென்று மறு வாழ்வை ஆரம்பித்தார். விவாகரத்துப் பெறவே கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. மேலும் படித்து பேராசிரியராக உள்ளார். அவருக்கும் உற்றத் துணையாக இருந்தது பெற்றோர்களும் சகோதரரும். இவர்கள் இவ்வளவு துன்பத்திற்குப் பிறகும் இன்முகத்துடன் தங்கள் பணிகளை உற்சாகமாகச் செய்வதை பார்க்கும்போது அவர்களின் மனோ திடத்தை பாராட்டுகிறேன்!
உறவினர்களாலும் நண்பர்களாலும் மட்டுமே தான் இந்த மாதிரி சோதனைக் கதைகளை சாதனைக் கதைகளாக மாற்ற உதவ முடியும். முக்கியமாக பெற்றோர்கள் பெண்ணுக்குத் திருமண வாழ்வு தான் எல்லாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கௌன்சிலிங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அந்த அமர்வுகளுக்குச் சென்று பயன் பெற வேண்டும். இதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
ஒரு உறவை முறிப்பது எளிதன்று, மகிழ்ச்சியைத் தரக் கூடியதன்று. ஆனால் வாழ்க்கை என்பது கிடைத்தற்க்கரிய பொக்கிஷம். நம் வாழ்க்கையை இன்னொருவரால் நரகமாக்கிக்கொள்ளக் கூடாது. துன்பக்கடலில் மூழ்கி தொலைத்து விடக் கூடாது. நிச்சயமாக இந்த பாதிப்பில் இருந்து மீண்டு புது வாழ்வு வாழ்பவர்கள் வாழ்க்கையை நோக்கும் விதம் வேறு மாதிரியாகத் தான் இருக்கும். அவர்கள் மறு முறை திருமண பந்தத்தில் ஈடுபட தயங்குவார்கள். ஆனால் நிச்சயமாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும், மன நிம்மதியுடன் வாழ முடியும், மகிழ்ச்சியைக் கொண்டாட முடியும்.
source: http://amas32.wordpress.com/author/amas32/page/8/