அன்புக் குழந்தைகளின் எதிர்காலம்…
[ நம்முடைய குழந்தைகள் டாக்டராகவும் எஞ்சினியராகவும் தொழில்நுட்ப வல்லுனராகவும் வர வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்று ஆசை கொள்கிறோமா? ]
குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். ஒவ்வொரு நாட்டின் வருங்கால தூண்கள். நாளைய தேசத்தை வழிநடத்த இருப்பவர்கள். இத்தகைய குழந்தை செல்வங்கள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்கள் மிகவும் எளிதாக வழி தவற வாய்ப்புள்ளது.
சிறு வயதில் குழந்தைகள் பழகும் பழக்கங்கள், அவர்களின் மனப்பான்மை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வழி தவறிய குழந்தைகளால் குடும்பத்திலும் நாட்டிலும் குழப்பமும் வேதனையும் தான் மிஞ்சும்.
தற்போதுள்ள சூழ்நிலைகள் அடுத்த தலைமுறையினர் சந்திக்க இருக்கும் குழப்பங்களை குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள், விளையாட்டு பொருட்கள் என எந்தவொரு பொருளை வாங்குவதற்கும் அதிகமான சிரமப்பட வேண்டியுள்ளது. எங்கு நோக்கினும் நாம் சிறிதும் விரும்பாத உருவங்கள்தான் விகாரமாக காட்சி தருகின்றன. பார்ப்பதற்கு எந்தவிதத்திலும் சகிக்காத ஸ்பைடர் மேன், பென்டன் வகையறாக்கள் தான் எங்கும் நீக்கமற உள்ளன. குழந்தைகள் அதிகமாக விரும்பும் பார்பி கேர்ள் பொம்மையும் இப்போது அரைகுறை ஆடையுடன்தான் வருகிறது.
திரையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய கதாபாத்திரங்கள், அவர்களின் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 1990-களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் தொடரை பார்த்த குழந்தைகள், சக்திமான் என்னை காப்பாற்றுவார் என்று கூறிக்கொண்டு, மாடியில் இருந்து குதித்ததையும் தனது உடம்பில் தீ வைத்து கொண்டதையும் நாம் மறக்க முடியாது. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் என எல்லா மேன்களுக்கும் இது பொருந்தும். ஆனாலும் இந்த நிழல் உலக ஹீரோக்களின் படையெடுப்பு நிற்பதாக இல்லை. இது குறித்து பல முறை எழுதப்பட்டாலும் இவர்களின் மீதான மோகம் குறைவதாக இல்லை.
நிழல் உலக ஹீரோக்களின் ஆக்கிரமிப்பால் குழந்தைகள் நிஜ ஹீரோக்களை மறந்து விடுகின்றனர். சமூக முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்காக பாடுபட்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் என அனைவரும் இன்று வரலாற்று புத்தகங்களில் மட்டுமே இடம் பிடிக்க முடிகிறது.
ஸ்பைடர்மேன், பென்டன், சூப்பர்மேன் போன்ற கதாபாத்திரங்கள் குழந்தைகள் மனதில் அபரிதமான கற்பனைகளையும் வன்முறையையும் சத்தமில்லாமல் வளர்க்கின்றன. திரையில் காணும் சாகசங்களை தங்களால் நிறைவேற்ற முடியாத போது குழந்தைகள் மனதளவில் தோல்வியை உணர்கின்றன. இதனால் குழந்தைகளிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நேரத்தை போக்குவதற்கும் பள்ளியில் இருந்து சோர்வாக வரும் குழந்தைக்கு உற்சாகமாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களே இத்தகைய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கின்றனர். ஆனால் இது அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பும் முயற்சி என்பதை அறியாதவர்களாகவே உள்ளோம், இல்லையென்றால் தெரிந்தும் அலட்சியமாக உள்ளோம். எதிர்கால சந்ததியினரை சீரழிப்பதற்கான முயற்சிகள் இவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்லாமல், கலாச்சார சீர்கேடு இன்னொரு விதத்திலும் சப்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. ஆயத்த ஆடைகள் வடிவத்தில் இன்று நம்முடைய கலாச்சாரம் புதை குழியை நோக்கி அழைத்து செல்லப்படுகிறது. தனது பெண் குழந்தைக்கு துணிகள் வாங்க சென்று திணறிய விதத்தை சமீபத்தில் ஒரு சகோதரி மிகவும் அழகாக பதிவு செய்திருந்தார். ஐந்து, ஆறு வயது குழந்தைகளுக்கு அறைகுறை ஆடைகள் மட்டுமே இருப்பதை கண்ட அவர், தன்னுடைய குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்காமலேயே அந்த கடையில் இருந்து வெளியேறியதாக தெரிவித்தார். ஆனால் பலரும் அந்த அரைகுறை ஆடைகளை வாங்கிய கையோடு தான் வெளியே வருகின்றனர் என்பதை நாம் கண்டு வருகிறோம். குழந்தைகளுக்கு ஒரு கண்ணிமான ஆடையை வாங்க முடியாமல் தடுமாறும் அவலத்தை எங்கு சென்று சொல்வது?
சில சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அணிவிக்கும் ஆடைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. சிறுவர்களுக்கான உடைகளையும் விளையாட்டு சாமான்களையும் தேடிச் சென்றால் அதே கோரமான முகங்கள்தான் எங்கும் நிறைந்து இருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் சிறிது விகாரமாக யாரும் உடை அணிந்திருந்தால் அதனை விரும்பாத நாம், இத்தகைய கோரமான முகங்களையும் உடைகளையும் எப்படித்தான் சகித்து கொள்கிறோம் என்பது புரியவில்லை.
மாடல் அழகிகளையும் சினிமா நடிகைகளையும் போன்று தங்கள் குழந்தைகளுக்கு ஆடைகளை அணிவித்து மகிழ்பவர்கள், எத்தகைய சந்ததியினரை உருவாக்குகின்றனர்? மேலை நாட்டு கலாச்சார மோகமும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையும் இந்த குழந்தைகளை வழி நடத்தி செல்கின்றன. வளர்ந்த பின்னரும் இந்த கலாச்சார மோகத்தில் இருந்து விடுபட முடியாமல் அதிலேயே தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் இதில் இருந்து வெளியேறுகின்றனர்.
நம்மையும் அறியாமல் நம்முடைய கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு நாம் விரும்பாத விதத்தில் நம்முடைய குழந்தைகள் வளர்ந்து வருகின்றன. இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதில் பெற்றோர்களுக்கு தான் முக்கிய பங்கு இருக்கிறது. சினிமா நடிகைகளும் சூப்பர்மேன்களும் நமக்கு முன் மாதிரிகள் கிடையாது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் அணியும் ஆடைகளும் செய்யும் செயல்களும் கண்ணியமான நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
நம்முடைய குழந்தைகள் டாக்டராகவும் எஞ்சினியராகவும் தொழில்நுட்ப வல்லுனராகவும் வர வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்று ஆசை கொள்கிறோமா? பதில் நம்மிடம்தான் உள்ளது.
சிந்தனைக்கு
-ஏர்வை ரியாஸ்:-
source: http://www.thoothuonline.com/