வட்டியும் சூழல் நிர்பந்தங்களும்
பொதுவாக இன்றைய பணவியலைப் பற்றிப் பேசும் போது ஒரு அடிப்படை விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக வங்கி பற்றிப் பேசும் போது இவ்வடிப்படை மிக முக்கியமானதாகும். இன்றைய வங்கி முறைமை வட்டியை அடிப்படையாகக் கொண்டது. எங்களுக்கும் வங்கிக்கும் எந்த விதத் தொடர்பும் இருக்கக் கூடாது. காரணம் அது ஒன்றில் :
1. நேரடியாகவே வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது,
2. மறைமுகமாக வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது,
3. வட்டியை அடிப்படையாகக் கொண்டியங்கும் அவைகளுக்குத் துணைபோவதாக இருக்கும்.
ஆக உலகில் எந்த அறிஞரும் வங்கியோடு தொடர்பு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்றே தீர்ப்புச் சொல்ல வேண்டும். இன்று வங்கியோடு தொடர்புள்ளவர்களை 3 வகைப்படுத்தலாம்.
1. இஸ்லாம் வட்டியைத் தடை செய்கிறது அது பாரதூரமான கொடும்பாவம் என்பதையெல்லாமல் கணக்கில் எடுக்காமல் வங்கியுடன் மனவிருப்பத்துடன் எல்லா வகையிலும் தொடர்புள்ளவர்கள். இவர்கள் வட்டியெடுப்பவர்கள் மற்றும் கொடுப்பவர்கள் அதற்கு துணைபோபவர்கள்.
2. இஸ்லாம் வட்டியைத் தடை செய்கிறது. எனவே வங்கியுடனான தொடர்பை மட்டுப்படுத்தி ஆனால் அவசியமா இல்லையா என்பதைப் பாராது வங்கியின் ஒரு சில பகுதிகளை தாரளாமாகப் பயன்படுத்துபவர்கள். உதாரணமாக: நடைமுறைக் கணக்கு, சேமிப்புக் கணக்கு, வங்கிதரும் ஸில்வர்காட் கோல்ட் கார்ட் கடன் வசதிகள்ஸ என இப்பட்டியல் நீளும். இவர்கள் வங்கியோடு இது போன்ற தொடர்புகள் வைப்பது தவறில்லை என எண்ணி அதில் தாராளம் காட்டுபவர்கள்.ஆனால் வங்கியுடன் இதர விடயங்களில் தொடர்பகொள்வது ஹராம் என்ற உறுதியான நம்பிக்கையிலுள்ளவர்கள்
3. வங்கியுடனோ வட்டியைத் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த நிறுவனங்களுடனோ கொடுக்கல் வாங்கல் தொடர்பு வைப்பது ஹராம் என்பதை அறிந்து வங்கியுடன் எந்த விதத் தொடர்பையும் வைக்கக் கூடாது என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள். ஆனால் தவிர்க்க முடியாத எந்த வகையிலும் வங்கி மூலமன்றி செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் விடயங்களில் மாத்திரம் தொடர்பை பயன்படுத்தி விட்டு வங்கியைத் தவிர்ப்பவர்கள்.அந்த நிலையிலும் அதை வெறுப்போடும் மன விருப்பமின்றியும் செய்பவர்கள். அதே நேரம் தாம் இந்த நிர்பந்த சூழலில் இதைப் பயன்படுத்துகிறோம் என்பதற்காக அதை அடிப்படையிலேயே ஹலால் என்று நினைக்கமாட்டார்கள். இது ஹராமானததான் ஆனால் எனக்கு இதனூடாக அன்றி இதைச் செய்ய முடியாது என்பதனால் பயன்படுத்துகிறேன் என்ற எண்ணத்தோடுள்ளவர்கள்.
இந்த 3வது நிலையில் உள்ளவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான் என்றே மார்க்க அடிப்படையில் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம் இங்கே நாம் செய்யப் போகும் அந்த வியாபாரமோ அல்லது கொடுக்கல் வாங்கலோ அடிப்படையில் ஹலாலலானது. நாம் செய்யப்போகும் அந்தத் தொழில் அல்லது ஒரு செயற்பாடு வங்கியுடனானது அல்ல. ஆனால் வங்கி மூலமே செய்ய வேண்டியிருக்கிறது . அதற்கு இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்ட சட்டம் குறுக்காக நிற்கிறது. எனக்கு இஸ்லாம் அனுமதித்த ஒன்றைச் செய்ய அது எனக்குக் குறுக்காக நிற்கிறது.
இப்பொழுது நான் குற்றவாளியல்ல. கப்பம் கேட்கும்போது வீடு போய்ச் சேர அல்லது வியாபாரத்தை தொடர்ந்து நடத்த வேறு வழியின்று அதை வழங்குவது குற்றமாகாது. அதுபோன்ற ஒன்றே இது. இந்த அடிப்பைடயில்தான் நாம் வாகனங்களை பயன்படுத்துகிறோம். விமான சீட்டுக்களை வாங்குகிறோம். வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறோம். மேற் சொல்லப்பட்ட 3இலும் இன்ஸூரன்ஸ் (கப்பம்) இருக்கிறது. ஆனால் அது நாமாக விரும்பிக் கேட்கவில்லை. நாம் வாகனம் ஓட்டுவது வாங்குவது விற்பது இஸ்லாம் எங்களுக்க அனுமதித்த ஒன்று. அதற்கு குறுக்காக இந்த தேட் க்ளாஸ் இன்ஸூரன்(கப்பம்) நிற்கிறது. அதற்காக வாகனம் வாங்குவது ஹராம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.
நாம் விமானச் சீட்டுக்கு பணம் செலுத்தும்போது இன்ஸூரன்ஸிற்கும் சேர்த்துத்தான் அறவிடப்படுகிறது. விமானத்தில் பயணப்பிது இஸ்லாம் எங்களுக்கு அனுமதித்த ஒன்று. அதற்கு குறுக்காக இந்த வட்டிச் சட்டம் வந்தால் நாம் ஹஜ்ஜுக்குப் போவது ஹராம் என்று அர்த்தமாகாது. இது நாங்கள் விரும்பிய ஒன்றல்ல. அதுபோன்று இஸ்லாத்தின் தூய்மைக்கு எதிரான மனித கலாச்சாரத்திற்கு எதிரான லட்சக்கணக்கான இணைதளங்கள் மக்களை வழிதவறச் செய்துகொண்டிருக்கின்றன. அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு உண்மையை உணரச் செய்வது ஆற்றலுள்ளவர்களது கடமை. ஆனால் அதைப் பதிவு செய்ய இன்னும் அதற்கு ஒத்த நடைமுறைகளை மேற்கொள்ள டெபிட் காட்டை பயன்படுத் வேண்டியுள்ளது.
அதற்காக வேண்டி டெபிட்கார்ட் அடிப்படையிலேயே ஹலால் என்று தீர்ப்பு வழங்க முடியாது. காரணம் நான் ஏற்கனவே சொன்னதுபோல் வங்கியுடனான தொடர்பு ஒன்றில் நேரடியாகவே வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது மறைமுகமாக வட்டியோடு தொடர்புறுவதாக இருக்கும் அல்லது வட்டியடிப்படையாகக் கொண்டியங்கும் அவர்களுக்கும் துணைபோவதாக இருக்கும். அப்படியிருக்கையில் எவ்வாறு டெபிட்காட் ஹலால் என்று சொல்ல முடியும் வங்கி இதன் மூலம் இலாப நோக்கமற்ற அல்லது முறையான இலாப நோக்கங்கொண்டஒரு சேவையையா எமக்குத் தருகிறது.
சிறுதுள்ளி பெருவெள்ளம் என்ற அடிப்படையிலும் வேறு பெயர்களிலும் எம்மைச் சுரண்டும் பலவழிமுறைகளில் டெபிட் காடும் ஒன்று. எனவே அது அடிப்படையிலே ஹராம்தான். ஆனால் இஸ்லாம் அனுமதித்த ஒரு செயல்பாட்டுக்குக் குறுக்கே வரும்போது நாம் அதனூடாகவே அதைத் தாண்ட வேண்டியிருக்கும் போது அதைப் பயன்படுத்துவதில் அல்லாஹ் எம்மைக் குற்றம் பிடிக்கமாட்டான். இன்ஷா அல்லாஹ்.
{ قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَنْ يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَسْفُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَحِيمٌ (145)} الأنعام: 145
6:145. (நபியே!) நீர் கூறும்: ‘தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை’ – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் -நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங்கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
இஸ்லாம் அனைத்துச் சூழலுக்கும் எமக்கு வழிகாட்டியிருக்கிறது. மனித மனநிலைகளை அறிந்த எல்லாம் அறிந்த இறைவனது மார்க்கத்தில் நாம் இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்
sourcet: http://mujahidsrilanki.com/