நாளைய முஸ்லிம் பெண் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி
‘சமூக வாழ்வில் பெண்களின் நிலை’ என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும். இது மனித சிந்தனையை நேர்முரணான இரு தீவிர நிலைகளுக்கு இட்டுச் சென்றுள்ளதை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. ‘பெண்ணுக்கு ஆன்மா இருக்கின்றதா?’ என சர்ச்சைசெய்து, அவளை மிகவும் இழிவுபடுத்தியது ஒரு வகை தீவிரவாதம். அதன் தாழ்ந்த சிந்தனை வடிவங்களில் சில இன்றும் வாழ்கின்றன. ‘
பெண்ணும், ஆணும் எல்லா விதத்திலும் சமமானவர்களே’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு சமூக வாழ்வை அமைப்பது அதற்கு நேர் எதிரான புதிய தீவிரவாதம்.
சமூக வாழ்வின் இரு பகுதிகள்: ஒன்று, மனித சந்ததி குறித்தது. அவனது எதிர்கால பரம்பரையின் வாழ்வு, வளர்ச்சி, ஆக்கம் பற்றியது. இன்னொன்று அவனது பௌதீகத் தேவைகள், சமூக வாழ்வின் நிர்வாக ஒழுங்குகள் குறித்தது!
சாதாரண மொழியில் சொன்னால், ஒன்று சொந்த வீடு குறித்தது. மற்றொன்று வீட்டுக்கு வெளியேயுள்ள வாழ்வு குறித்தது. இவ்விரு பகுதிகளும் மனிதவாழ்வில் காணப்படுகின்றன என்பது எதார்த்தம். இனி இவற்றை எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதே கேள்வி.
எதிர்கால மனித பரம்பரையை உருவாக்கும் பொறுப்பை, அதனைச் சுமந்து, பராமரிப்பதில் பெரும் பங்கெடுத்துக் கொள்ளும் பெண்ணிடம் கொடுப்போமா? அல்லது சமூகத்தின் ஏனைய அலகுகளான நீதி, அரசு, நிதி, கல்வி என்பவை நிர்வகிக்கப்படும் அமைப்புக்கேற்ப ஒரு ஆட்சி நிறுவனமாக மட்டும் ஆக்குவோமா?
பெண்ணின் அதிமுக்கியமான அடிப்படையான களம் எது? வீடா? மனித ஆக்கப் பணியா? சமூகக் களமா? அதாவது ஆணும், பெண்ணும் சம அந்தஸ்துடையவர்கள் என்ற கண்ணோட்டத்தில், வீட்டிலும் வீட்டிற்கு வெளியேயும் சம அந்தஸ் தோடு காரியமாற்ற வேண்டுமா?
இந்தப் பிரச்சனைக்கு இஸ்லாம் சொல்லும் தீர்வு: பெண் எதிர்காலப் பரம்பரையை உருவாக்கும் உன்னத பொறுப்பு வாய்ந்தவள். அவளது உடல், உள, இயற்கை அமைப்புகள் அனைத் தும் இந்தப் பணிக்கு ஏற்பவே ஆக்கப்பட்டு உள்ளன.
இதன் பொருள், வீட்டில் அவள் அடைபட்டு கிடக்க வேண்டும் என்பதல்ல. அவள் வீட்டை விட்டு போர்க்களம் செல்லக்கூட அது அனுமதிக்கின்றது. ஆனால் வீட்டில் அவளது பணிக்கு அது பாதகம் விளைவித்துவிடக் கூடாது என இஸ்லாம் வேண்டுகிறது. சமூகக் களம் ஆணின் முதன்மையான பகுதி. வீடு, குடும்பம் – இவை அவனது இரண்டாவது பகுதி. வீடும், குடும்பமும் பெண்ணின் முதன்மையான பகுதி. சமூகக் களம் அவளின் இரண்டாவது பகுதி.
இவ்வாறு இஸ்லாம் ஆண் மீதும், பெண் மீதும் விதித்துள்ள கடமைகளையும், பொறுப்புக்களையும் நுணுகி ஆராயும்போது, அற்புதமான தொரு சமநிலையை ஆண் – பெண், குடும்பம் – சமூகம் என்ற இரு வகை அலகுகளுக்குமிடையே பேணியுள்ளமையை அவதானிக்க முடியும். இன்று நாம், முஸ்லிம்களின் சமூக வாழ்வும் சீர்கெட்டு, குடும்ப வாழ்வும் சிதைந்து போயுள்ள காலப்பிரிவில் வாழ்ந்து வருகின் றோம். இவ்விரு பகுதிகளையும் சீர்படுத்துவதற்கான முயற்சி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்கின்றோம். இந்த முயற்சியில், உழைப்பில் பெண்ணின் பங்கு யாது?
அந்நியர்கள் இஸ்லாமிய நாட்டின் மீது படையெடுத்து நாட்டுக்குள் நுழைந்துவிட்டால் ஆண் – பெண், சிறியவர் – பெரியவர் என்று அனைவர் மீதும் ஜிஹாத் கடமையாகிறது என்பது இஸ்லாமிய சட்ட வல்லுனர்களின் ஒருமித்த முடிவு. இது இராணுவப் படையெடுப்பு. இஸ்லாமியச் சிந்தனைக்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பின் போது, அன்னியச் சிந்தனைகள் இஸ்லாமிய சமூகத்தினுள் நுழைந்து தனி மனித வாழ்வு மீதும், சமூக வாழ்வு மீதும் ஆதிக்கம் செலுத்தினால், சிந்தனா ரீதியான போராட்டம் (ஜிஹாத்) ஆண் – பெண் இரு பாலினர் மீதும் கடமையாகாதா?
இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சனையை நோக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இஸ்லாமியப் பணியில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ள நாடு நமது நாடு. சமூகத் தீமைக்கெதிராக பாடுபடுதல், உழைத்தல் பெண்களின் கடமையல்ல என்ற மனப்போக்கு பரவலாகக் காணப்படுவதோடு மட்டுமல்ல அவ்வாறு உழைத்தல் பெண் களுக்கு களங்கம் விளைவிக்கும் என்ற எண்ணஆம் சமூகத்தினரி டையே பரவலாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் இக்கருத்தைத் தெளிவு படுத்துகிறது இந்நூல்.
டாக்டர் யூஸுஃப் அல்-கர்ளாவி இஸ்லாமிய உலகின் சட்ட வல்லுனர்களில் ஒருவர். தன் வாழ்வின் மிக ஆரம்ப காலத்திலிருந்தே இஸ்லாமிய எழுச்சிக்காகப் பாடுபடும் பிரச்சாரகர். நவீன இஸ்லாமிய சிந்தனைப் புனரமைப்பில் அவருக்கு மிகப் பெரியதொரு பங்குள்ளது என்பதை நவீன இஸ்லாமியச் சிந்தனையுள்ள யாரும் மறுக்கவியலாது. இந்நூல் டாக்டர் யூஸுஃப் அல்-கர்ளாவியின் இரண்டு கட்டுரைகளின் தமிழாக்கம். ‘நாளைய முஸ்லிம் பெண்’ என்னும் முதல் கட்டுரை ‘முஸ்லிமதுல் கதி’ என்னும் தலைப்பில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவின் தமிழாக்கம்.
இதனை மொழிபெயர்த்த எஸ்.ஹெச்.எம்.ஃபழீல் (நளீமி), இலங்கை ஜாமிஆ நளீமிய்யாவின் பேராசிரியர். மற்றொன்று, ‘பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவம்’. இக்கட் டுரை ‘அல்ஆமுஜ்தமஃ’ என்னும் புகழ்பெற்ற அரபு பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையை எம்.ஏ.எம். மன்ஸூர் (நளீமி) மொழி பெயர்த்துள்ளார். முதல் கட்டுரை இலங்கையில் ‘நாளைய முஸ்லிம் பெண்’ என்னும் தலைப்பில் தனி நூலாகவும் மற்றொன்று ‘தஃவா பணியில் பெண்கள்’ என்னும் நூலின் ஒரு கட்டுரையாகவும் வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றன.