நான்கு பேரைக்கண்டு அஞ்சும் மோடி!
அந்த நான்கு பேரும் யார்? என்ன செய்கிறார்கள்?
முரளிமனோகர் ஜோஷிக்கு வாரணாசியைத் தராமல் இழுத்தடிக்கிறார் நரேந்திர மோடி என்பது பி.ஜே.பி. தலைமைப் பீடத்தில் உள்ள கோஷ்டிப்பூசலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இதுபற்றி பி.ஜே.பி. தலைவர்கள் இரவு பகலாகப் பேசிப்பேசி கடந்த 14-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தார்கள் – ஜோஷிக்கு கான்பூர் தொகுதியைத் தருவது என்று. மனம் இல்லாமல் ஜோஷியும் அதனை ஏற்றுத் தலையாட்டிவிட்டார்!
200 தொகுதிகளுக்கு மேல் பி.ஜே.பி. வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள்(!!!!) சொன்னாலும் இன்னமும் தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட முடியவில்லை.(?!!!!) பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் பி.ஜே.பி-யில் உள்ள நான்கு ‘டி’ (டெல்லி) தலைவர்கள் (எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி) தன்னை ஏதாவது காரணத்தில் கவிழ்த்துவிடலாம் என்ற பயத்திலேயே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடர்கிறார். ‘
‘ஏற்கெனவே பிரதமர் வேட்பாளரை கட்சி அறிவித்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடியைத் தேர்வுசெய்யலாம். பி.ஜே.பி-க்கு தனித்து 272 தொகுதியில் வெற்றி கிடைத்தால் மட்டுமே உறுதியாகக் கூறமுடியும். இது கிடைக்காத பட்சத்தில் கட்சி தனது தேர்தலுக்கு முந்தைய நிலையிலிருந்து மாறலாம். இதில்தான் இந்த நான்கு தலைவர்களால் தனக்கு எப்போதும் ஆபத்து என்று கருதுகிறார் மோடி” என்று டெல்லி பி.ஜே.பி-யை உன்னிப்பாக கவனிப்பவர்கள் சொல்கிறார்கள்.
பி.ஜே.பி-க்கும் நாடாளுமன்ற வெற்றிக்கும் மையமாக இருக்கும் உ.பி. மாநிலத்துக்கு கட்சித் தலைவர்கள் யாரையும் நம்பாமல் தன்னுடைய குஜராத் சகா அமீத் ஷாவைத்தான் அனுப்பி உ.பி-யை சர்வே செய்தார் மோடி. அங்கு போட்டியிடலாமா எந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுப்பது என்பதை அறிய தன்னுடைய பிரதிநிதியைத்தான் அனுப்பினாரே தவிர, உள்ளூர் கட்சிப்பிரமுகர்களையோ அல்லது கட்சித் தலைவரையோ அவர் நம்பவில்லை. இதே மாதிரி தேர்தலுக்குப் பின்னர் இந்த நாலு தலைவர்களின் வெற்றி தனக்கு சவாலாகிவிடும் என்று கருதும் மோடி இவர்களது வெற்றியில் உன்னிப்பாக இருக்கிறார் என்பதை பி.ஜே.பி. உள்வட்டாரங்கள் கூறுகின்றன.
இதை உணர்ந்து அந்த லிஸ்ட்டில் இருக்கும் இந்த ‘டி’ தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகவே இருக்கின்றனர். இதில் சுஷ்மா ஸ்வராஜ் பாதுகாப்பாக இருக்கிறார் என்றாலும், கடந்த சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு ஷாக்காக இருந்தது. அவரது மத்தியப்பிரதேசம் விடிஸா தொகுதிக்குட்பட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற… ஷாக் அடைந்த சுஷ்மா இதற்கான பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தார். ‘எனக்கு வேறு தொகுதியை கொடுங்க. இல்லை, போபாலுக்கு மாத்துங்க’ என்று கேட்டுள்ளார். ஆனால் அம்மாநில பி.ஜே.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், சுஷ்மாவிடம், ”கவலைப்பட வேண்டும்… உங்க வெற்றிக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்” என்று கூறிவிட்டாராம். எனவே, சுஷ்மா வெற்றி சௌகான் கையில்தான் இருக்கிறது.
எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங் போன்றவர்களுக்கு இந்த நிலைமையில்லை. குஜராத் மாநிலம் காந்தி நகரில் அத்வானி போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளாராம் மோடி. ஆனால், அத்வானிக்கோ, மோடி தன்னை அங்கே வெற்றிபெற வைப்பாரா என்கிற சந்தேகம் வந்துள்ளது.
மோடியும் அத்வானி வெற்றியில் மகிழ்ச்சியோடு இல்லை என்பதை உள்வட்டாரம் கணிக்கிறது. இதனால் அத்வானியும் சிவராஜ் சிங் சௌகான் மூலம் மத்தியப்பிரதேசத்தில் போபால் போன்ற தொகுதியை ஒதுக்குமாறு கேட்டு வந்தார். சுஷ்மா ஸ்வராஜ் மாதிரி சிவராஜ் சிங் பாதுகாப்பில் அத்வானியும் வெற்றி பெற விரும்பினார். ஆனால் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் இதற்கு சம்மதிக்காமல், ”நீங்கள் தொகுதி மாற வேண்டாம்” என்று கூறியதோடு மோடியிடம் அத்வானியின் வெற்றியை உறுதிசெய்து கொடுத்தாராம். ”காந்தி நகரில் போட்டியிடுங்கள்” என்று கூறி சம்மதிக்கவைத்துள்ளார் என்று சொல்கிறார்கள்.
கடந்த முறை காஸியாபாத் தொகுதியிலிருந்து ராஜ்நாத் சிங் வெற்றி பெற்று சென்றார். இந்த முறை இந்த காஸியாபாத் தொகுதி வேண்டாம் என்று அவரே கூறும் நிலைமை. இந்தப் பகுதியில் ராஜ்புத்கள் வாக்குகள் இருந்தும் தொகுதி மாற விரும்புகிறார். காரணம், மோடிக்கு அடுத்து ‘பிரைமினிஸ்டர் வெயிட்டிங்’ என யோசித்துக் கொண்டிருப்பவர் ராஜ்நாத் சிங். ஒருவேளை மோடியை கூட்டணிக் கட்சிகள் மறுத்து அவரால் முன்னிலையில் இருக்க முடியவில்லை என்றால், தான் முன்னிலைக்கு வரலாம் என்ற நோக்கத்தோடு லக்னோ தொகுதியில் இருந்து போட்டியிட முயற்சிக்கிறார் ராஜ்நாத்.
ஏற்கெனவே வாஜ்பாய் என்ற பிரதமரை தேர்ந்தெடுத்த தொகுதியாக இருக்க… அதே சென்டிமென்ட்டோடு தானும் தேர்ந்தெடுக்கப்பட்டு வர வேண்டும் என்று நினைத்து லக்னோ தொகுதியில் இறங்க நினைக்கிறார் ராஜ்நாத் சிங். இத்தோடு கெஜ்ரிவால் பயம் ராஜ்நாத் சிங்குக்கு இருக்கிறது. இப்போது தேசிய அளவில் கெஜ்ரிவால் கலக்குவது இந்த காஸியாபாத் தொகுதிக்குள் இருக்கும் தலைமை அலுவலகத்தில் இருந்துதான். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி அலை வீச… அந்தக் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த ஆம் ஆத்மி அலையில், தான் அடித்து போய்விடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் ராஜ்நாத் சிங். அவருக்கு லக்னோ தொகுதியைத் தரவேண்டாம் என்று தற்போதைய சிட்டிங் எம்.பி-யான லால்ஜி டாண்டனையே ஏவி விட்டார்கள். அவரும் நெருக்கடி கொடுத்து வருகிறார். ‘
கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மோடிக்கு வேண்டுமானால் விட்டுக்கொடுப்பேன். மற்ற யாருக்கும் தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்கிறார் வாஜ்பாயின் சிஷ்யரான லால்ஜி டாண்டன். இவரது வயதைக் காட்டி வாய்ப்பை மறுக்கப் பார்க்கிறார்கள். முரளிமனோகர் ஜோஷியின் வயதைப் பற்றிக் கவலைபடாத உ.பி. பி.ஜே.பி. தலைவர்கள் லால்ஜி டாண்டனை ரெஸ்ட் எடுக்க சொல்லி வருகின்றனர். ஆனாலும் ராஜ்நாத் சிங், வாஜ்பாய் தொகுதியில் இருந்து போட்டியிடத் தயாராகிவருகிறார்.
இந்தப் பட்டியலில் நான்காவதாக இருக்கும் நபர் அருண் ஜெட்லி. இவர் மோடியின் தீவிர ஆதரவாளர்தான். ஆனாலும் இருவருக்குள் சமீப காலமாக மோதல் வலுக்கிறது. ஜெட்லியை நம்ப முடியாது என்று மோடியும் நினைக்கிறார். ”மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான இவரது பதவிக்காலம் இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. ஆனால், காங்கிரஸில் ப.சிதம்பரத்துக்கு இருக்கும் ஆசை மாதிரியே அருண் ஜெட்லிக்கும் உண்டு. வாக்கு வங்கி பலமில்லாமல் பிரதமர் பதவிக் கனவில் இருப்பவர். இதனால் மாநிலங்களவை உறுப்பினரான இவர் மக்களவை உறுப்பினரானால் வாய்ப்பு கிடைத்தால், கட்சியின் மக்களவைத் தலைவராக போட்டியிடலாமே என்று எதிர்பார்த்து சீட் கேட்கிறார். பஞ்சாப்பைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு கட்சி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை ஒதுக்கத் தயார் என்கிறது. ஆனால், அங்கு கிரிக்கெட்டர் சிந்து மோடியோடு நின்றால் அடிவாங்குவோம் என்று கருதிய ஜெட்லி, இப்போது வசுந்த்ரா வின் கீழ் பாதுகாப்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார்” என்று சொல்கிறார்கள்.
அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா, அருண் ஜெட்லி ஆகிய நான்கு பேர் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பதிலேயே மோடியின் பெரும்பாலான நேரம் போய்க்கொண்டு இருக்கிறது!
– சரோஜ் கண்பத்
நன்றி விகடன்
இதற்கிடையில்…
மோடியை தோற்கடிக்க ‘பொது வேட்பாளர்’ : கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அனைவரும் வாபஸ்!
வாரனாசியில், நரேந்திர மோடிக்கு எதிராக, பலமான ஒரு பொது வேட்பாளரை நிறுத்த மதசார்பற்ற தலைவர்கள் அனைவரும், ஒத்தக் கருத்துடன் முயற்சித்து வருகின்றனர்.
முன்னதாக, ‘கவ்மி ஏக்தா தள்’ (QED) சார்பாக முக்தார் அன்சாரி நிறுத்தப்படுவதை அறிந்த முலாயம் சிங், தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டு, முக்தார் அன்சாரியை ஆதரிப்பதாகக் கூறினார்.
தற்போது, மோடியை தோற்கடிக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார் என, ‘கவ்மி ஏக்தா தள்’ கட்சியின் தலைவர் அத்ஹர் ஜமால் கூறியுள்ளார்.
மோடியை தோற்கடிக்க ‘ஆம் ஆத்மி கட்சி’யின் அர்விந்த் கேஜ்ரிவால் தான் பலமான வேட்பாளர் என்றால், அவருக்கு ஆதரவாக அன்சாரியை தாங்கள் வாபஸ் வாங்கவும் தயார், என்கிறார், அத்ஹர் ஜமால்.
மோடிக்கு எதிராக பொது வேட்பாளராக கேஜ்ரிவால் நிறுத்தப்பட்டால், மோடிக்கு தோல்வி உறுதி என, கடும் அச்சத்தில் உள்ளனர், பாஜகவினர்.