தீமைகள் புயலாய் வீசும்போது…! (2)
ஓர் ஊரின் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கும்போது அந்த ஊரில் வசிப்பவர்கள் செயல்களின் அடிப்படையில் இரு பிரிவினராக மட்டுமே பிரிக்கப்படுகிறார்கள். நற்செயல்களின் காரணமாக பாதுகாக்கப்படுபவர்கள் ஒரு பிரிவினர்: இரண்டாவது பிரிவினர், தீமைகள் காரணமாக வேதனைக்குள்ளாக்கப்படுபவர்கள். “மூன்றாவது பிரிவினர்” என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது தீமைகளிலிருந்து மக்களைத் தடுத்த நல்லவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வேதனையால் பிடிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களைப் பொறுத்தவரை பாவம் புரியாமல் இருந்தாலும் சரியே; அல்லது தீமைகள் மலிந்த சூழ்நிலையில் அவற்றுக்கு எதிராக குரல் எழுப்பாதவர்களாக இருந்தாலும் சரியே; அல்லது நிராசை அடைந்து மூலையில் முடங்கி உட்கார்ந்திருந்தவர்களாக இருந்தாலும் சரியே!
பிறகு குர் ஆனின் இந்த வாக்கியமும் கவனத்திற்குரியது; தம் பொறுப்பை உணர்ந்து தீமைகளைத் தடுத்துக் கொண்டிருந்தவர்களை மூன்றாவது பிரிவினர் தடுத்தபோது அவர்கள் கூறினார்கள் “உங்கள் இறைவனிடம் எங்கள் நிலையை சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக!” அதாவது மறுமை நாளில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து இந்த வாதம்தான் அவர் களைக் காப்பாற்றும்: “எங்கள் இறைவனே! மக்களுக்குத் தீமைகளை தீமை என்று உணர்த்துவதில் எங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவழித்தோம். எந்த வகையிலும் அப்பணியில் நாங்கள் குறை வைக்கவில்லை. இறுதி மூச்சு வரையில் தடுத்தோம்!”
மற்றோர் இடத்தில் குர் ஆன் கூறுகிறது:
“அந்தப் பாவத்தின் விளைவு குறித்து அஞ்சுங்கள். அது உங்களில் தீமை புரிந்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதல்ல!”
இந்த வசனத்திற்கு மொளலானா மொளதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய விரிவுரை மிகத் தெளிவானதும், மனத்தில் பதியக்கூடியதுமாகும்.
அந்த ஃபித்னா – அந்த குழப்பம் என்பது கூட்டு வாழ்வில் தலையெடுக்கும் – பரவலாகும் ஃபித்னாவாகும். பாவம் செய்பவர்கள் மட்டுமல்ல, அந்தப் பாவம் செய்யும் சமுதாயத்தில் மனமார வாழக்கூடியவர்களும் பலியாகி விடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு நகரத்தின் சிறு பகுதியில் அசுத்தங்கள் காணப்படுகின்றன. ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான மக்கள் தூய்மையாகத் திகழ்கிறார்கள். ஆனால் அந்த நகர்த்தில் அசுத்தங்கள் பெருகத் தொடங்கினால், அவற்றைத் துப்புரவு செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யாது போனால் பிறகு காற்று, நீர், பூமி அனைத்திலும் அசுத்தங்கள் ஊடுருவி விடுகின்றன. பிறகு அசுத்தங்களைப் பரப்புவோர், அவற்றைச் சகித்துக் கொள்வோர். அதை துப்புரவு செய்ய முயற்சி மேற்கொள்ளாதோர் அனைவருமே அதற்குப் பலியாகி விடுகின்றனர். ஒழுக்கக் கேடும் இது போன்றதுதான். சமுதாயத்தில் தனிப்பட்ட சிலரிடம் மட்டும் ஒழுக்கக்கேடுகள் காணப்படுமாயின் இழப்புகளும் வரையறைக்குட்பட்டதாகவே இருக்கும். ஆனால் ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சி பலவீனம் அடைந்தால் — தீய ஒழுக்கங்களை அடக்கி வைக்கின்ற வலிமையை இழந்துவிட்டால் — பிறகு நாணமற்ற — ஒழுக்கமற்ற செயல்கள் தலைவிரித்தாடத் தொடங்கும். அச்சமுதாயத்தில் வசிக்கும் சான்றோர்கள், தீமையின் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்து (Passive Attitude) மெளனமாகி விடுகின்றனர். அந்த நிலையில் முழுச் சமுதாயமும் வேதனைக்கு பலியாகும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அச்சமயத்தில் ஒருசில நல்லவர்களும் தண்டனைக்குள்ளாகி விடுகின்றனர்.
ஆக, அல்லாஹ்வின் அருளுரையின் நோக்கம் இதுவே: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தப் பணிக்கு எழுந்துள்ளாரோ – எந்த அழைப்பை விடுகின்றாரோ அந்தப் பணிக்கு ஒத்துழைப்பு தருவதிலும், அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதிலும்தான் தனி நபர் மற்றும் சமூகத்தின் வாழ்வு அடங்கியுள்ளது. அவவாறு ஏற்றுக் கொள்ளாமல் தீமைகளைச் சகித்தால் பெரும் ஆபத்து ஏற்பட்டு, சமூகத்திலுள்ள அனைத்து மக்களையும் தாக்கும். அப்பொழுது தீமையில் ஈடுபடாதவரும், தீமைகளைப் பரப்பாதவரும் கூட அதற்கு பலியாகி விடுவார்கள். (தஃப்ஹீமுல் குர் ஆன் பாகம் 2 பக்கம் : 138-139)
இந்தக் குர் ஆன் விளக்கங்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்மொழிகளையும் வைத்துப் பார்த்தால் விஷயம் இன்னும் தெளிவாகிவிடும். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மேன்மை வாய்ந்த அல்லாஹ், குறிப்பிட்ட சிலரின் குற்றங்களுக்காக எல்லா மக்களுக்கும் வேதனை அளிப்பதில்லை. ஆனால் தீமைகள் நடப்பதைக் கண்டும். அவற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இருந்தும் மக்கள் மொளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் எல்லா மக்களையும் அல்லாஹ் வேதனைக்குள்ளாக்கிவிடுவான்”. (அஹ்மத், திப்ரானி)
இந்த அடிப்படைக் கொள்கையை இன்னும் நன்கு மனதில் பதியவைக்க, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்ராயீல்களின் படிப்பினையூட்டும் தன்மையை எடுத்துரைத்தார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்:
“அனைத்துக்கும் முதலாக இஸ்ராயீல்களிடம் தலை தூக்கிய குறைபாடு இதுவே: அவர்களில் தவறு செய்யும் ஒருவரை இன்னொருவர் சந்தித்தால், “ஓ…! மனிதனே, இறைவனை அஞ்சு! இந்தத் தவறில் இருந்து விலகிக் கொள்” என்று கூறுவார். பிறகு மறுநாள் அவரை அதே நிலையில் பார்க்கும்போது, அவருடன் பழகும் வாய்ப்பு போய்விடுமே என்று வாய் திறவாமல் இருந்து விடுவார். இஸ்ராயீல்களின் சிந்தனையும் செயலும் இப்படி ஆன பிறகு அவர்கள் எல்லோரையும் ஒரே வகையினராய் – அல்லாஹ் ஆக்கி விட்டான்.” இதைக் கூறிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்:
“இஸ்ராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப் பட்டவர்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். தாம் செய்து கொண்டிருந்த தீய செயலிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன. இன்று அவர்களில் பெரும்பாலோர் (இறை நம்பிக்கையாளருக்கு எதிராக) நிரகரிப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாயும் உற்ற நண்பர்களாயுமிருப்பதை நீர் காண்கிறீர். சந்தேகமின்றி அவர்களைத் தமக்காக சம்பாதித்தவை எத்துணைத் தரங்கெட்டவை! இதனாலேயே அல்லாஹ் அவர்கள் மீது கோபங்கொண்டான். மேலும் நிரந்தரமாக வேதனைக்கு அவர்கள் பலியாவார்கள். உண்மையிலேயே அவர்கள் அல்லஹ்வின் மீதும், இறைத்தூதர் மீதும், அவருக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (நம்பிக்கையாளருக்கு எதிராக) நிரகரிப்போரை தம் உற்ற நண்பர்களாய் ஒருபோதும் ஆக்கிக் கொண்டிருக்கமாட்டடார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு கீழ்படிவதிலிருந்து விலகிச் சென்று விட்டனர். (5: 78-81)
இந்த வசனங்ளை ஓதிய பிறகு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழுத்தமாகக் கூறினார்கள்: “எச்சரிக்கை! இறைவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அநீதி மற்றும் கொடுமைகள் இழைப்போர் கரங்களைப் பிடித்து அவர்களை சத்தியத்தின் பக்கம் திருப்பவேண்டும். நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் இதயங்கள் ஒன்றுப்போல் ஆகிவிடும். யூதர்கள் சபிக்கப்பட்டது போல் நீங்களும் இறைச் சாபத்திற்கு ஆளாகி விடுவீர்கள்!”
(அதாவது இறையருளில் இருந்தும், வழிகாட்டுதலில் இருந்தும் எவ்வாறு யூதர்கள் தூக்கி எறியப்பட்டார்களோ அவ்வாறே உங்களையும் இறைவன் தூக்கி எறிந்து விடுவான்.)
இதே கருத்தினை மற்றொரு நபி மொழியிலும் காண்கிறோம். அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“இஸ்ராயீல்கள் இறைவனுக்கு மாறு செய்வதில் ஈடுபட்டபோது அவர்களைச் சேர்ந்த அறிஞர்கள் மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் இஸ்ராயீல்கள் விலகவில்லை. அறிஞர்கள் அந்த மக்களை புறக்கணிப்பதற்குப் பதிலாக சேர்ந்து உட்கார்ந்து விருந்துண்டார்கள். நிலைமை இவ்வாறு ஆனபோது, அவர்கள் எல்லோரையும் இறைவன் ஒன்றுபோல் ஆக்கிவிட்டான்.”
மஸ் ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மேலும் அறிவிக்கின்றார்கள் “அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நன்கு நிமிர்த்து உட்கார்ந்த பிறகு கூறினார்கள்: “இல்லை! எவன் கையில் என் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நண்மையை ஏவி, தீமையைத் தடுக்காவிட்டால் யூதர்கள் போல் நீங்களும் ஆகிவிடுவீர்கள்.!” (திர்மிதி)
இதேபோன்று மற்றொரு அறிவிப்பு “திப்ரானி” எனும் நபி மொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது :
“மக்களே! உங்களுடைய பிரார்த்தனையும், பாவமன்னிப்புக் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை வரும் முன்பே நீங்கள் நன்மையை ஏவுங்கள்: தீமையைத் தடுத்து நிறுத்துங்கள்!”
தனி நபரோ, குழுவினரோ தீமைகளைச் சகித்துக் கொள்கிறார்கள் எனில் அவர்களின் உள்ளங்களிலிருந்து “மார்க்க ரோஷம்” எடுபட்டு போய்விடும். பிறகு மாறு செய்வோருக்கும் இவர்களுக்கும் வித்தியாசமே தெரியாமல் — இருவரும் ஒன்று போலாகி விடுவார்கள்.
சத்தியம் – அசத்தியத்தின் போர்க்களம்தான் இந்த உலகம்! சத்தியத்திற்கு துணை போக வேண்டும் என்ற துடிப்பில்லாதவர்கள் சத்தியத்தை மேலோங்கச் செய்ய எப்படித் துணை போவார்கள்? பிறகு அத்தகைய மக்கள் வாழும் நகரத்தின் மீது இறைவனின் வேதனை இறங்கும் போது பாவிகள் மட்டும்தாம் தண்டனைக்குள்ளாவார்கள் எப்படிக் கூற முடியும்?
வான்மறை கூறுகிறது:
எந்த ஃபித்னாவின் – குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்று விடாதோ, அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டனையளிப்பவன் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். (8:25)
கடமையில் அலட்சியமாய் இருப்பதனால் ஏற்படும் விளைவு – நபி மொழி கூறுவதென்ன?
தீமைகளைக் கண்டும் அவற்றைச் சகித்துக் கொண்டு மனநிறைவுடன் வாழ்பவர்கள், தீமைகளுக்கு எதிராக தம் அருவருப்பைத் தெரிவிக்காமல் மனஅமைதியுடன் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் அந்தத் தீமைகளினால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு நிச்சயம் பலியாகியே தீர்வார்கள். இந்தப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் தெளிவான ஓர் உவமையின் மூலம் மனதில் பதியும் வண்ணம் விளக்கியுள்ளார்கள்.
பின்வரும் நபிமொழியை நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிகின்றார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“இறைவரம்புகளைப் பேணி வாழ்பவர்க்கும் அதற்குக் குறைபாடு செய்பவர்க்கும் உள்ள உதாரணமாவது: மக்கள் ஒரு படகில் ஏறுகிறார்கள். சிலர் மேல் தளத்திலும் சிலர் கீழ் தளத்திலும் தங்குகிறார்கள். தண்ணீர் எடுப்பதற்காக கீழ் தளத்தில் உள்ளவர்கள் மேலே சென்றால், மேல் தளத்துக்காரர்கள் அவர்கள் வருவதை விரும்பவில்லை. இதனைக் கண்ட கீழ் பகுதியினர் “படகில் துளைப்போட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டால் பிரச்னை தீரும்” என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்நிலையில் மேலே இருப்பவர்கள் அவர்களைத் தடுக்காமல் விட்டுவிட்டால் அனைவரும் மூழ்கி விடுவார்கள். இதற்கு மாறாக கீழ்பகுதியினரின் கரத்தைப் பிடித்து தடுத்து நிறுத்தினால் அனைவரும் தப்பித்துக் கொள்வார்கள்!” (புகாரி)
உண்மையில் இஸ்லாமியச் சமூகம் உலக மக்கள் முன் சத்தியத்திற்கான சான்று வழங்கும் உன்னத பணியில் அமர்த்தப்பட்டுள்ளது, உலகத்திற்கு நேர்வழிக்காட்டும் உயர்ந்த அந்தஸ்து அச்சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் குறைபாடுகள் பற்றி கவலைப்படவேண்டும். அவர்களை நீதியில் நிலைத்திருக்கச் செய்ய உழைக்க வேண்டும். தவறான போக்குகளின் அபாயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். இறைவரம்புக்குட்பட்டு வாழ்ந்து இவ்வுலகமெனும் கடலில், தம் வாழ்க்கைப் படகைச் சீராக நடத்திச் செல்லும் பொறுப்பு அந்த இஸ்லாமியச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வான்மறை கூறுகிறது:
மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் “உம்மத்தன் வஸத்தன்” — சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சாண்று வழங்குபவர்களையும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக!”
திருமறையின் இந்த வசனத்திற்கு மெளலானா மெளதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வரைந்துள்ள விளக்கம் படிப்பினையூட்டக்கூடியதாகவும், பயன் மிக்கதாகவும் உள்ளது.
“இறுதித் தீர்ப்பு நாளில் மனித குலம் முழுவதையும் ஒன்று திரட்டி கணக்கு வழங்கப்படும். அப்பொழுது சீரிய சிந்தனை, நேரிய செயல், நீதிமிக்க அமைப்பு ஆகியவற்றைப் பற்றி அவர்களுக்கு நாம் (இறைவன்) அருளிச் செய்த ஞானத்தை எல்லாம் கூடுதல் குறைவில்லாமல் உங்களிடம் ஒப்படைத்த தோடல்லாமல், அவற்றின்படித் தாமே நடந்து காட்டினார் என்பதற்கு நம்முடைய அதிகாரப்பூர்வமான பிரதிநிதி எனும் தகுதியில் இறைத்தூதர் சாட்சியங் கூறுவார்.
அதன் பின்னர் “இறைத்தூதர் எங்களுக்கு போதித்தவற்றையெல்லாம் உலக மக்கள் அனைவர்க்கும் அறிவிப்பதிலும், இறைத்தூதர் எங்கள் முன் செயல்ரீதியாக எடுத்துரைத்த எல்லாவற்றையும் பின்பற்றி – செயல் ரீதியாக மக்கள் அனைவருக்கும் எடுத்துரைப்பதிலும் நாங்கள் எங்களுடைய சக்திகள், சாதனைகள், திறமைகள் முழுவதையும் ஈடுபடுத்திவிட்டோம். அதில் யாதொரு குறையும் வைக்கவில்லை என்று இறைத்தூதரின் பொறுப்புகளைப் பெற்றவர் என்ற தகுதியில் மக்கள் மீது நீங்கள் சாட்சியங் கூற வேண்டியதாயிருக்கும்.
தனி மனிதனோ, ஒரு குழுவோ அல்லாஹ்வின் சார்பாக இவ்வாறு உலக மக்களின் முன் சான்றாய்த் திகழும் தகுதியில் இருப்பதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளார் என்பதன் பொருள்: தலைமைப்பதவி, உலகிற்கு வழிகாட்டும் தகுதி ஆகிய சிறப்புகளால் அவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர் என்பதேயாகும். நிச்சயமாக இது மேன்மையான நிலை, அருட்சிறப்புடைய நிலை. ஆனால் அதே சமயத்தில் இந்நிலையை அடையப்பெற்ற்வன் மீது ஒரு கடினமான பாரத்தை இது சுமத்தி விடுகிறது.
இதன் உட்கருத்து என்னவென்றால், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த லட்சியக்குழு – உம்மத்தின் மீது இறையச்சத்திற்கும், நீதி நெறிக்கும், சீரிய நடத்தைக்கும், சத்திய வேட்கைக்கும் எவ்வாறு உயிருள்ள சான்றாகத் திகழ்ந்தார்களோ அதுபோலவே அனைத்துலகிற்கும் இந்த லட்சியக்குழுவும் உயிருள்ள சான்றாகத் திகழ வேண்டும். மேலும் அதன் சொல், செயல், நடைமுறை இன்னும் அதன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் உலகம் இறை வழிபாடு, இறைவனுக்கு கீழ்படிதல் ஆகியவற்றின் மறுபெயர் இதுதான்: சீரிய நடத்தை என்பது இன்னதுதான்: நீதி நெறி என்பது இதுவே: சத்தியம் போற்றுதல் இதுவேதான் என்று தெரிந்து கொள்ளும் வரையில் தொடர்ந்து சான்றாய் திகழ வேண்டியது இந்த உம்மத்தின் கடமையாகும்.
இறைவன் காட்டிய நேர்வழியையும், நல்லுரைகயையும் நம் வரை கொண்டு வந்து சேர்ப்பிப்பதற்காக அண்ணல் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட கடமையும், பொறுப்பும் மிகக் கடுமையாக இருந்தன. அவ்வாறே “உலகப் பொதுமக்கள் வரை இவற்றைக் கொண்டு வந்து சேர்க்கும் இந்தப் பொறுப்பு நம் மீது கடுமையாக சுமத்தப்பட்டு இருக்கிறது. எங்கள் இறைவா! ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் நீங்கள் எங்களுக்கு அருளிய அறிவுரைகளை உன்னுடைய அடியார்கள் வரை கொண்டுவந்து சேர்க்கும் பணியில் நாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை” என்று இறைவனின் நீதிமன்றத்தில் நம்மால் சாட்சியங்கூற முடியாவிட்டால், நாம் இறைவனின் கடுமையான பிடிக்குள்ளாவோம். இந்நிலையில் தலைமைப்பதவி வகிப்பது நமக்கு பெருமையோ, சிறப்போ அளிக்காமல் நம்மைக் கவிழ்ப்பதற்கே காரணமாய் அமைந்துவிடும். நாம் தலைமைத்துவப் பொறுப்பு வகித்த காலத்தில் நாம் செய்த தவறுகள், நமது செயல்களில் ஏற்பட்ட அசட்டை ஆகியவற்றின் காரணமாகச் சிந்தனையிலும், செயலிலும் எத்தனை சீர்கேடுகள் உலகில் தலைத் தூக்கினவோ, எத்த்னைக் குழப்பமும் அமளியும் அல்லாஹ்வின் பூமியில் எழுந்தனவோ அவை அனைத்திற்காகவும், விஷமத்தை பரப்பிய தலைவர்கள், மனித இனத்திலும் ஜின இனத்திலும் உள்ள ஷைத்தான்கள் ஆகியோருடன் சேர்ந்து நாமும் இறைவனின் பிடியில் அகப்பட்டுக் கொள்வோம். உலகில் பாவச் செயல், அக்கிரமம், சீர்கேடு ஆகியவற்றின் புயல் வீறிட்டெழுந்து சுழன்றடித்துக் கொண்டிருந்த போது நீங்கள் எங்கு சென்று செத்து மடிந்த்தீர்கள் என்று நம்மிடம் விசாரிக்கப்படும். (தஃப்ஹீமுல் குர் ஆன் முதல் பாகம்)
நன்மையை ஏவுதல் – தீமையை தடுத்தலின் மார்க்கத் தகுதி
நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் வெறுமனே ஒரு விரும்பத்தக்க செயல்; அதனை நிறைவேற்றும்படி இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஆர்வம் ஊட்டப்பட்டுள்ளது என்ற நிலை மட்டுமல்ல. மாறாக, இது இஸ்லாமியச் சமுதாயத்தின் தலையாய கடமையும். அது தோற்றுவிக்கப்பட்டதன் குறிக்கோளும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி நபியாக அனுப்பப்பட்டதன் நோக்கமும் ஆகும். இஸ்லாமியச் சமூகம் என்பது மற்ற சமூகங்கள் போல தன் கருத்தப்படி, தன் விருப்பப்படி இயங்கும் சமூகமல்ல. மாறாக, குறிப்பிட்ட குறிக்கோளின் அடிப்படையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. திருமறையில் அல்லாஹ் இச்சமுதாயத்தின் எதார்த்தத் தன்மையைத் தெளிவான வார்த்தைகளில் எடுத்துரைக்கின்றான்.
“இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் (கைரே உம்மத்) நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் நம்பிக்கை கொள்கின்றீர்கள்” (3:110)
இந்த இலட்சியக் குழு “கைரே உம்மத்” என்று கூறப்பட்டதன் காரணமே, அது நன்மையை ஏவி, தீமையிலிருந்து தடுக்கும் அழகிய பணியை செய்கிறது என்பதாலேயே ஆகும். இக்கடமையை நிறைவேற்றும்போதுதான் அதற்குரிய சிறப்புத் தகுதி கிடைக்கிறது.
இச்சமூகம் தான் அமைக்கப்பட்டதன் இந்தத் தூய நோக்கத்தை – தன்னுடைய மாபெரும் கடமையைப் புறக்கணித்து விட்டால் பிறகு அது சிறப்புக்குரியதாக இருக்க முடியுமா? இந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் தன் பிரச்னையை மட்டும் கவனிக்கும் குறுகிய வட்டத்தில் முடங்கிக் கிடக்க முடியுமா? அவ்வாறு தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு சமூகம் பற்றிய உணர்வின்றி இருக்க முடியுமா?
இத்தொடரில் வான்மறையின் ஒரு வசனத்திற்கு சிலர் தவறான விளக்கம் கூறுகிறார்கள். இந்த வசனத்தின் நோக்கத்திற்கே எதிரானது. பலவீனமான நம்பிக்கை கொண்டவர்கள் அந்த வசனத்தின் எதிரான திசையில் சென்று விடுகிறார்கள்.
அந்த வசனம் இதுவே:
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப் படுங்கள், நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது.” (5 : 105)
அழைப்புப்பணி, ஜிஹாத், அதற்காக போரடுதல் ஆகிய கடினங்களில் இருந்து முகம் திருப்புபவர்கள் இந்த வசனத்திற்குத் தவறான கருத்து கொண்டுள்ளனர். தங்களித் தவிர பிறரைப் பற்றிய சிந்தனை தங்களுக்கு இல்லை: மற்றவர்கள் ஒழுக்கக் கேடுகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை: சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை: தங்களைப் பற்றி கவலைப்பட்டால் போதுமானது என்று வாதிடுகின்றார்கள்.
இந்தத் தவறானக் கருத்து ஏதோ இன்று நேற்று தோன்றியதல்ல: மாறாக துவக்க காலத்திலேயே இத்தகையக் கருத்துகளுக்கு சிலர் பலியானார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயல்முறையை நன்கு கற்றிருந்த, தீனின் தேட்டத்தை முழுமையாக அறிந்திருந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் இத்த்கைய கருத்துக்கள் தவறானவை என்று எடுத்துரைத்தார்கள். நபி மொழியின் ஒளியில் அத்திருவசனத்தின் பொருளைப் புரிந்துக் கொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
மக்களே நீங்கள் இந்த குர் ஆன் வசனத்தை படிக்கின்றீர்கள். நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். ஒரு கொடுமையாளன் கொடுமை புரியும்போது மக்கள் அவன் கரத்தை பிடித்து தடுக்கவில்லையானால், விரைவில் அல்லாஹ் தண்டனையை மக்கள் மீது அனுப்புவான்.
மேலும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆற்றிய உரையையும் கவனியுங்கள்: “மக்களே! குர் ஆனின் இந்த வசனத்தைப் படிக்கின்றீர்கள். ஆனால் அதற்குரிய சரியான பொருளை நீங்கள் எடுத்துக் கொள்வதில்லை. குர்ஆனின் நோக்கத்திற்கு மாறாகப் பொருள் கொள்கின்றீர்கள். நான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதைக் கேட்டுள்ளேன். “நீங்கள் ஒரு தீமையைப் பார்த்து அதனைத் தடுக்க முயலாவிட்டால் விரைவில் அல்லாஹ் வேதனையை அனுப்பி வைப்பான்!” எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் இப்பணியைத் தொடர்ந்து செய்த வண்ணம் இருங்கள்; இந்த வசனத்திற்கு தவறான கருத்து கொள்ளாதீர்கள். “என்னுடைய பொறுப்பெல்லாம் என் செயலைப் பற்றி மட்டும்தான் என்று திருப்தி அடையாதீர்கள்.”
மேலும் கூறினார்கள்:
“இறைவன் மீது ஆணையாக! நீங்கள் கண்டிப்பாக நன்மையை ஏவிய வண்ணமும், தீமையைத் தடுத்த வண்ணமும் இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது இழிவானவர்களை ஆட்சியாளர்களாய் இறைவன் திணித்து விடுவான். பிறகு அம்மக்களின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா!”
ஆக, தீமைகள் புயலாய் வீசும்போது ஓர் இறைநம்பிக்கையாளனின் பொறுப்பு என்ன? இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர் மொளலானா மொளதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்துக்கள் இங்கே கவனிக்கத் தக்கது:
“சீர்கேடுகள் தலை விரித்தாடுகின்றன; அவற்றையெல்லாம் களைந்தெறிவது முடியாத செயல்” என்று மக்கள் கருதுகிறார்கள். நான் உங்களிடம் ஓர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகின்றேன். இந்தப் பாதையில் இருக்கும் தடைகள், கடினங்கள் ஆகியவற்றை நீங்கள் இன்னும், பன்மடங்கு அதிகப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அத்தகைய நிலையிலும் ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்வாறுதான் சிந்திக்க வேண்டும்; “இத்தகைய நிலைக்கு எதிரில் போராடாமல் நான் சரணடைந்துவிட வேண்டுமா? இந்தப் பொங்கி வரும் பெருவெள்ளம் அடித்து செல்லும் திசையில் என்னையும், அடுத்தத் தலைமுறையையும் துரும்புகள் போல் விட்டு விடுவதா? அல்லது என்னிடம் இருக்கும் ஆற்றல்கள், சக்திகள் ஆகியவற்றை திரட்டிக்கொண்டு என்னால் இயன்ற வரை அதனை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபடுவதா? இதன் விளைவாக என் கை கால்கள் வெட்டப்பட இருந்தாலும் நான் போராடுவதா?”
“ஒவ்வொரு மனிதனும் ஆற அமர சிந்திக்க வேண்டும்: “இந்த நிலையைக் கண்டு நிராசையில் மூழ்கி, இந்தத் தீமைகளின் எதிரில் சரணடைந்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அவை எந்தத் தீமையின்பால், அழிவின்பால் விரட்டிச் செல்கின்றனவோ, அத்திசையில் ஓட நான் தயாராகி விட வேண்டுமா?”
இறைநம்பிக்கையின் ஒரு சிறு பொறியேயேனும் தன்னுள் கொண்ட மனிதன் இதற்குத் தயாராக மாட்டான். பிறகு, வல்ல இறைவன் தனக்குக் கொடுத்துள்ள வலிமைகள், ஆற்றல்கள் ஆகியவற்றைத் திரட்டிக் கொண்டு நிலைமையை ஒழுங்குபடுத்த மும்முரமாக இறங்குவதைத் தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை! இதன் விளைவாக அவனுக்கு வெற்றி கிட்டினாலும் சரியே; கிட்டாமல் போனாலும் சரியே!
ஓர் உண்மையை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள்; தீமைகளைத் தடுப்பது, நன்மைகளின் பால் மக்களை அழைப்பது, நன்மைகளை நிலைநாட்ட, நன்மைகளை நிலைநாட்ட முயற்சி செய்வது – இவைதாம் இறைநம்பிக்கையாளனின் கடமைகளாகும்.
ஆனால், தீமைகளைத் திட்டவட்டமாக பூண்டோடு அழித்து விடுவது, நன்மைகளை வேரூன்றி நிலைக்கச் செய்துவிடுவது இறைநம்பிக்கையாளனின் பொறுப்பல்ல. மாறாக, இது வல்ல இறைவனின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கிறது.
வல்ல இறைவன் இந்தச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற நாடினால், நம்முடைய முயற்சிகளில் அவன் பாக்கியங்களை அருள்வான். அவை தம் இலக்கை அடையும்!
இதற்கு மாறாக, வல்ல இறைவனின் நாட்டம் அவ்வாறு இல்லை என்றால், நம் முயற்சிகள் அந்த இலக்கை இங்கு அடைந்திட முடியாது. உலகமக்களின் பார்வையில், நாம் பெரும் தோல்வி அடைந்தவர்களாய் காட்சியளிப்போம். ஆனால், நாம் வாய்மையாக இந்த முயற்சியை செய்துவிட்டிருந்தால், வல்ல இறைவனிடம் நாம் தோல்வி அடைந்தவர்களல்லர்! மாறாக, கடைசி மூச்சு வரை நம் பணியை முழுமனதுடன் செய்து முடித்த பணியாளராக – வெகுமதிக்குரியவராகத் திகழ்வோம்.
source: http://www.satyamargam.com/islam/riyadus-salihin/553-theemaigal-puyalai.html