மனித யூகம் மார்க்கம் ஆகாது
தங்களை மார்க்க அறிஞர்கள் வல்லுனர்கள் என்று மார்தட்டிக் கொள்ளக் கூடியவர்கள், மார்க்க விவகாரங்களில் தங்களாலும் யூகம் செய்து முடிவு செய்ய முடியும், நாங்கள் நம்பிப் பின்பற்றும் முன் சென்ற அறிஞர்கள் இப்படித்தான் யூகம் செய்து, மார்க்க விவகாரங்களை முடிவு செய்தார்கள், என்று கூறி அதற்கு ஆதாரமாக,
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதைப் பரப்பி விடுகிறார்கள். அவர்கள் அதை அல்லாஹவின் தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக் கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்.
அல்லாஹ்வுடைய கிருபையும், அருளும் உங்கள் மீதில்லாருதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (அல்குர்ஆன் 4 :83) என்ற இந்த ஆயத்தை எடுத்துச் சொல்கிறார்கள். இந்த வசனத்தில் வரக்கூடிய “இஸ்தின்பாத்” என்ற சொல்லை ஆதாரமாகக் கொண்டு மார்க்க விவகாரங்களில் யூகம் செய்து முடிவு செய்ய மார்க்க அறிஞர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளதாக அப்பாவி மக்களை வழி கெடுக்கிறார்கள்.
இந்த 4:83 வசனத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஓதி விளங்கக்கூடிய ஒரு நடு நிலையான சிந்தனையாளன், இந்த இறை வசனம் சிக்கலான உலகப் பிரச்சனை பற்றியது என்பதை தீர்க்கமாக விளங்கிக் கொள்ள முடியும்.
உலகில் நெருக்கடியான கட்டங்களில் பீதி ஏற்பட்டு விட்டது, அல்லது தங்கள் உயிர், உடல், பொருள் பாதுகாப்பைப் பற்றி பயம் ஏற்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் வதந்திகளைப் பரப்பாமல், அதற்குரிய சம்பந்தப்பட்டவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொல்வது கொண்டு, அவர்களிலுள்ள அறிஞர்கள், அது விஷயமாக நன்கு விசாரித்து, யூகித்து அறிந்து பயத்தைப் போக்க ஆவன செய்வார்கள் என்ற கருத்தை 4:83 வசனம் தருகின்றது.
உலக காரியங்களில் இவ்வாறு நடப்பதற்கு அல்லாஹ் அளிக்கிறான், அவ்வாறு அறிஞர்களின் யூகப்படி செயல்பட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அதன்பின் விளைவு நல்லதா? அல்லது கெட்டதா? என்பதையும் காலப்போக்கில் நடைமுறையிலேயே நம்மால் கண்டு கொள்ள முடியும், அந்த அறிஞரின் யூகப்படி நாம்செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த யூகம் தவறான விளைவை உண்டாக்குகின்றது என்பதை நிதர்சனமாகத் தெரிந்து கொண்டபின் குருட்டுத்தனமாக அதைப் பின்பற்றமாட்டோம். அதை விட்டுவிடுவோம். உலக காரியங்களில் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கின்றது.
இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவ காலத்திலேயே இடம் பெற்ற ஒரு சம்பவம் நமக்கு நல்லதொரு படிப்பிணையாக இருக்கின்றது. மதீனாவாசிகளான அன்சார்கள் தங்களது விவசாய முறையில் ஆண் பேரீத்த மரத்தின் பாளையை எடுத்துப் பெண் பேரீத்த மரத்தில் கட்டும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். இதைக் கண்ணுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இச்செயலைத் தடுத்துவிட்டார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யூகத்தை ஏற்று அன்சார்கள் தங்கள் பயிர்செய்முறையை விட்டு விட்டார்கள். ஆனால் அந்த மகசூலிலேயே நிதர்சனமாகப் பலன் குறைந்துவிட்டதையும் கண்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிடும்போது, “மார்க்க விஷயத்தில் நான் ஒன்றை உத்திரவிடும்போது, அதை ஏற்று நடங்கள். என் அபிப்பிராயத்தில் நான் ஒன்றைச் சொல்வேனேயானால் நானும் ஒரு மனிதனே!” (முஸ்லிம்) என்று தெளிவாக அறிவித்துவிட்டார்கள். இதிலிருந்து மார்க்க விஷயங்கள், உலக விஷயங்கள் ஆகியவற்றிலுள்ள தாரதம்மியங்களையும் அவற்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தி விட்டார்கள்.
ஆக, உலக காரியங்களில் அறிஞர்களின் யூகம் சரியா? தவறா என்பதை உலக நடைமுறையிலேயே கண்டு கொண்டு ஆவன செய்து கொள்ளவும், தவறைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே அறிஞர்கள் இது விஷயத்தில் யூகம் செய்யவும், மற்றவர்கள் அதை எடுத்து நடக்கவும் அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான். ஆனால் மார்க்க விஷயங்களில் அறிஞர்கள் இவ்வாறு யூகம் செய்யவும், மற்றவர்கள் அதை எடுத்து நடக்கவும் அனுமதிக்கபட்டிருக்கிறார்களா? என்று பார்த்தால், அதற்கு அனுமதி இல்லை என்பதே தெளிவான பேச்சாகும். காரணம் அறிஞர்களின் அந்த யூகத்தின் பலனை மரணத்திற்குப் பின்னால் தான் நாம் காண வேண்டியவர்களாக இருக்கிறோம்.
யூகம் செய்த அறிஞர்களும் மறுமையில் தான் அதன் பலனைக் கொண்டு கொள்வார்கள். ஆகவே தவறாக இருந்தால், அதைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விடுகின்றது. அதன் காரணமாகத்தான் பல அறிஞர்களின் தவறான யூகங்களைக் காலங்காலமாக, அந்த அறிஞர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்கள் செயல்படுத்தி வருவதன் காரணமாக வழிகேட்டில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அடுத்து யூகம் செய்யும்போது, எத்தனை பெரிய அறிஞராக இருந்தாலும் அதில் தவறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலேயே ஒரு சம்பவத்தை இடம் பெற வைத்து அல்லாஹ் நமக்குப் பாடம் புகட்டுகிறான்.
ஆக நாம் பெறும் படிப்பினை, ஒன்று நமக்கு நாளை மறுமையில் நன்மையைத்தரும், அல்லது தீமையைத் தரும் என்ற விஷயம் மறுமையைப் பற்றிய ஞானம் நிறைவாக உள்ள அல்லாஹ் அறிவித்துத் தரவேண்டும், அல்லது அல்லாஹ்வின் அறிவிப்பின்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அறிவித்துத்தரவேண்டும். அதாவது குர்ஆனிலோ, சஹீஹ் ஹதீதுகளிலோ காணப்பட வேண்டும். குர்ஆனிலோ, ஹதீதிலோ காணப்படாத மனித யூகங்களால் பெறப்பட்ட, மறுமை சம்பந்தப்பட்ட ஒரு நன்மையோ, தீமையோ ஒரு போதும் இருக்க முடியாது.
குர்ஆன் 4 : 83 வசனம் உலகியல் சம்பந்தப்பட்டதே அல்லாமல் மார்க்க விஷயங்கள் சம்பந்தப்பட்டதல்ல. இந்த வசனத்தை மார்க்க விஷயங்களில் இணைத்துப் பேசுபவர்கள் வழிகேடர்களாக இருக்க முடியுமே அல்லாமல் நேர்வழி நடப்பவர்களாக இருக்க முடியாது. அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.
-K.M.H. அபூ அப்தில்லாஹ்
-அந்நஜாத்