நல்ல மனையாளின் நேசம்!
அதிகாலை விடியலிலும் அஸ்தமன முடிவினிலும்
அதிஅழகாய் மின்னுமந்த அடிவான வடிவினிலும்
அதிமதுர அழகியலை அணிவித்த அரசனவன்
அதிபதியாம் அருளாளன் அளித்திட்ட அன்பவள்
ஆகாய வீதியிலே அலைபாயும் மழைமுகிலும்
ஆதாய மேதுமின்றி அவனிதனில் பெய்வதுபோல்
ஆராய ஏதுமின்றி அழுக்கில்லா அன்பாலே
ஆணான கணவர்க்கு அவதரித்த அழகவள்
இலக்கில்லாப் பயணமதில் ஏகிச்சென்ற வேளை
விளக்கெனவே வாய்த்தவளோ வெண்ணிலவின் திவலை
கலக்கமற களித்திடவே கண்டகனா பளித்திடவே
குளக்கரையில் குளிர்க்காற்றாய்க் குதித்துவரும் தென்றல்
தூக்கமிறா இரவுகளில் துணையாகும் இணையவள்
நீக்கமற நெஞ்சினிலே நிறைந்துநிற்கும் இளையவள்
பாக்குமர நிழலெனவே பாசமிலா உலகில்
பூக்குமரக் கிளைகளெனப் புல்விரிக்கும் பரிவு
சுட்டுவிடும் தீயெனவே உயிர்வதைக்கும் உறவில்
கொட்டுமழைத் துளியெனவே குளிர்விதைக்கும் குணமவள்
கெட்டவளும் மனம்மாறி கீழ்ப்படியும் வகையில்
மொட்டவிழும் பொழுதுகளாய் மணம்பரப்பும் மலர்
தூரநிறம் பச்சையென தவறிழைக்கும் பலரில்
துளிநீரும் தீர்த்தமென திருப்தியுறும் நிசமவள்
தேனெடுக்கக் கூடழிக்கும் திருடர்களின் குடிலில்
தீனெடுத்துத் தீதொழிக்கும் திங்கள்முகத் தளிர்
வம்பெடுத்து வரிந்துகட்டி வாழ்வழிக்கும் உலகில்
அன்பெடுத்து அறிவுடனே அரவணைக்கும் அசலவள்
கொம்பெடுத்துக் கூர்ச்சீவி குத்தவரும் கூட்டம்
கொடிமலரின் குணம்கண்டு திரும்பியொரு ஓட்டம்
உச்சிவெயில் வேளையிலே ஊருக்குள்ளே வெளிச்சம்
அச்சுஅசல் நிலவொளியாய் அவள்வதனம் அனிச்சம்
சுற்றத்திலும் நட்புகளும் வாழ்த்துகின்ற வண்ணம்
சுத்தமுள்ள உள்ளன்பால் மனம்கவரும் அன்னம்
ஏழுவர்ண வானவில்லோ வெயில்மழையின் குழந்தை
ஏகவர்ண வானவில்லாய் எழுமவளோ விந்தை
கட்டுரையாய் நீளுகின்ற கவலைகளின் கருவை
சுட்டும்விழிப் புன்னகையால் சுருக்கித்தரும் கவிதை
ஒற்றையடிப் பாதையிலும் உடன்நடக்கும் அவளே
கற்றைவெயில் கோடையிலும் குடைவிரிக்கும் கனிவு
எத்தகைய இடைஞ்சல்கள் படைதிரட்டி வரினும்
எதிர்கொள்வர் யாவருமே மனையாளின் துணையில்!
வாழ்க்கையின் வலக்கரம் –
-ஷப்பீர் அஹமத் அபுஷாஹ்ருக்