முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவது ஒன்றுபடாதிருப்பதாலே!
உலகின் பல பாகங்களிலும், முதலாளித்துவத்தின் உச்சம் என்று சொல்லப்படுகிற ஏகாதிபத்தியமும் அவர்களுக்கு இரையாக ஒரு அடிமைச் சமூகமும் இருப்பது இயல்பாக அமையப் பெற்றுள்ளது. அப்படி அடிமைப்பட்ட சமூகங்கள் ஏகாதியபத்தியத்தினை எதிர்த்து போரிட்டு வென்று பல புதிய வரலாறுகளையும் படைத்துள்ளனர்.
ஒன்று அது ஆயுதம் தாங்கிய போராட்டமாக, இல்லை; கருத்தியல் தாங்கிய போராட்டமாக, மக்கள் திரள் போராட்டமாக அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது அவைகள். ஆனால் ஒன்று உறுதி, ஒடுக்கப்படும் சமூகங்களின் ஒன்றிணைப்புகளே அவர்களை வெற்றியடையச் செய்தது.
அந்த வகையில் நம் இந்திய மண்ணில் ஒடுக்கப்படும் இனங்களில் ஒன்றாகவும், அந்நியப்படுத்தப்படும் ஒரு இனமாகவும் உள்ள இசுலாமியச் சமூகங்கள் இத்துனை காலம் போராடியும் குறிப்பிடும் அளவில் எவ்வித வெற்றியும் பெறாது இருப்பதன் உண்மை நிலை, அவர்களிடத்தில் ஒற்றுமை இல்லை.
இந்திய தேசத்திலே ஓரளவு விழிப்புணர்வு பெற்ற இசுலாமியச் சமூகத்தினராக தமிழக முஸ்லீம்கள் உள்ளனர். வட இந்தியாவில் தாங்கள் இசுலாமியர்கள் என்று சொல்வதற்குக் கூட அஞ்சும் மக்களாகத்தான் அங்குள்ள இசுலாமியர்கள் உள்ளனர். பாபரி மசூதி இடிப்பிற்குப் பிறகு தமிழகத்தில் புதிய புதிய இயக்கங்கள் உருவாகின. ஒற்றை இலக்கு பாபரி மசூதியினை கட்டி எழுப்புவோம் என்பதுதான். வென்றார்களா? இல்லை.
அடுத்ததாக இட ஒதுக்கீடு போராட்டம். தொடர்ந்து அரசே ஏற்ப்படுத்திய பல கமிஷன்கள் தெளிவாக இசுலாமியர்கள், தலித்துகளை விடவும் தாழ்ந்த நிலையில் உள்ளார்கள் என்று ஆதாரப்பூர்வமாய் எடுத்து வைத்தும், அதற்கான தீர்வாய் இசுலாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடுகளை வலியுறுத்தியும் ஆவணங்கள் சமர்ப்பித்தனர். இருந்தும் அரசு அது ஒரு கேளிக்கைப் போக்காக கருதி மறுத்தே வந்துள்ளது. இது நன்கு தெரிந்தும், இசுலாமியர்கள் இட ஒதுக்கீட்டிற்க்காய் என்ன செய்துள்ளார்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் தவிர்த்து?
இந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டில், மக்கள் தங்களுக்கான நீதியினை பெற சட்ட ரீதியாக அணுகுவதே சிறந்தது. அதற்காய் எத்துனை காலம்தான் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இருப்பது? ஏகாதிபத்திகளை எதிர்த்து, ஒடுக்கப்படும் சமூகம் விடுதலை பெற வேண்டும், அதற்காய் நாம் மார்க்ஸிய வழியில் போராட வேண்டும் என்று ‘லெனின்’ கூறிய போது அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டது, போராட்டம் என்றாலே ஆயுதம் ஏந்தி கொலை, வன்முறை நிகழ்த்துவது என்ற விதமாகத்தான். ஆனால் லெனின் அதனை மாற்றினார். இன்று நாம் கடைபிடிக்கும் போராட்ட யுக்திகளை அறிமுகப்படுத்தினார். அது அக்காலத்திற்க்கும், அச்சமூகத்திற்கும் பொருந்தும்.
ஆனால் எந்த ஒரு யுக்தியும் காலாவதி ஆகக் கூடிய ஒன்றே. அவ்வகையில் நாம் அரசைக் கண்டித்தும், அதன் குறைகளைக் கூறியுமே காலம் கடத்துவது தேவையற்றது. அடுத்த கட்டம் தேவை. அறிவுசார் துறைகளில், அரசியல் தளங்களில், இன்ன பிற ஆளுமை இடங்களில் நுழைவதுதான். எப்படி முடியும், ஒற்றுமை இல்லாத வரையில் நாம் நமக்கான ஜீவாதார உரிமைகளை பெறவே முடியாது.
‘செங்கிஸ்கான்’ இந்தப் பெயரை கேட்டாலே ஒரு மாபெரும் வரலாறு என்ற பதம் நினைவில் வரும். அதேசமயம் ஒரு பயங்கரத்தின் உணர்வும் மேலிடும். அப்படி என்ன செய்தார் இவர்?
ஒற்றுமையற்றுக் கிடக்கும் தனது இனத்தார்களால், சீன தேசம் அவர்களைச் சுரண்டுவதையும், இல்லாத ஒற்றுமையால் தங்களுக்குள்ளே இனக்குழுக்களாக மோதிக் கொள்வதனையும் தடுக்க, தங்களுக்கென ஒரு மாபெரும் தேசத்தை, ஒன்றிணைந்த மங்கோலிய தேசத்தினை உருவாக்கியவன். ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பப் பின்னணியிலிருந்து உதித்து, அடிமை விடுதலை வேண்டியே ஒரு தேசத்தினையே கட்டமைத்தான்.
சூழல் அத்தோடு அவனை விடவில்லை, பாதுகாப்பு என்கிற அடிப்படையிலும், பிற நாடுகளின் தாக்குதல்களும் அவனை பிற தேசங்களின் மீது அட்டூழியம் செய்ய வைத்தது. இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நாயகனின் வாழ்வு எடுத்துக்காட்டுவது ஒன்றுதான். அது ஒற்றுமை. ஒன்றுபடாத தேசம் வரையில் மங்கோலியர்கள் அனுபவித்த வேதனை, அதன்பிறகு அவர்கள் பெற்ற விடுதலை என்பது ஒன்றுபட்டு நின்றதனால்தான்.
அன்று மங்கோலியர்களிடம் இருந்த இனக்குழுக்கள் போலத்தான் இன்று இசுலாமியர்கள் இயக்கங்களாய் பிரிந்து முரண்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிரி சீனர்கள் என்பது புரியும், இருப்பினும் தங்களுக்குள் உள்ள முரண்களால் தங்களுக்குள்ளே மோதிக் கொண்டனர். இதேதான் இன்று இந்தியாவில் இசுலாமியர்களுக்கும். தங்களது எதிரி யாரென்பது வெளிச்சம், அவர்களை வெல்ல என்ன செய்ய செய்ய வேண்டுமென்பதும் வெளிச்சம். ஆனால் நிலை என்ன தங்களுக்குள் ஒற்றுமை இல்லை. விளைவு தங்களுக்குள்ளே போட்டிக் கருத்துகள் வளர்த்துக் கொண்டு, மேலும் மேலும் பின்னடைவுக்குச் சென்று கொண்டுள்ளனர்.
சுருக்கமாக ஒன்றை சொல்ல முடியும், இந்துக்களிடையே உள்ள சாதிப் பாகுபாடும், சாதி வெறியும் எப்படியோ, அப்படித்தான், இசுலாமியர்களிடையே இன்று இயக்கப் பாகுபாடும், இயக்க வெறியும் உள்ளது. அங்கு ஒரு மரக்காணம், தருமபுரி என்றால், இவர்களிடத்தில் ஒரு கிளியனூர் சம்பவமும் இருக்கத்தான் செய்கிறது.
இவர்களின் இந்த ஒன்றுபடாத தன்மையால் வயிறு வளர்ப்பது ஆர்.எஸ்.எஸ். அவர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இசுலாமியர்கள் அதனை சிறப்புறச் செய்கிறார்கள். இந்த விசயத்தில் எனக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை குறைகாண விருப்பமே இல்லை. தவறு முற்று முழுதாக இசுலாமியர்களிடம்தான் உள்ளது. தேவையற்ற சின்ன சின்ன விசயங்களில் சண்டையிட்டுக் கொண்டு, தங்களுக்கான அடிப்படை உரிமைகளை இழந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 3.5% கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டிற்கு உரிமை கொண்டாடி ஒவ்வொரு இயக்கமும் தங்களது கொடிகளையும், பெயர்களையும் முன்னிறுத்திக் கொண்டன. விளைவு ஒரு இயக்கத்தார் மற்றொரு இயக்கத்தாரை பழிப்பதும், இழிப்பதும் காட்சியானது.
இப்படிப்பட்ட சூழல் உள்ள சமயத்தில்தான் இன்றுள்ள தமிழக அரசு அண்மையில் ஒரு வேலையினைச் செய்தது. அது விஸ்வரூபம் பட குறித்து எழுந்த பிரச்சனையை வைத்து தீட்டிய சதி. விஸ்வரூபத்திற்கு தமிழக அரசு இடைக்கால தடைவிதித்தது என்னவோ உண்மையில் நடிகர்.கமலஹாசனுக்கும் தனக்குமான தனிப்பட்ட விரோத நிலைப்பாடுதான். அதனை முஸ்லீம்களை பகடையாய் வைத்து பயன்படுத்திக் கொண்டது, இதற்கு மேலும் இசுலாமியர்கள் எதிர்ப்பினால் தடை விதித்தேன் என்று கூறாமல், தவ்ஹீத் ஜமாத்தினர் மட்டும் ஏழு இலட்சத்திற்க்கும் மேல் உள்ளனர் என்று தேவையற்ற ஒரு உவமைக் காரணத்தைச் சொல்லி. இசுலாமிய பிற இயக்கவாதிகளை கிள்ளிவிடும் வேளையையும், ஏற்கனவே இசுலாமியர்களோடு எல்லா வகையிலும் முரண்பட்டு, போட்டியிட்டுக் கொண்டுள்ள தவ்ஹீத் இயக்கத்தினரை மேலும் கொம்பு சீவி விடும் விதமாகவும் நடந்து கொண்டது.
இந்த தந்திரங்கள் புரியாமல் அவர்கள், காட்சி ஊடகங்களில் காலரைத் தூக்கிக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் பெருமை ஓதிக் கொண்டும் இருந்தனர். இன்றும் கூட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வருகிற ஜனவரி-28 அன்று இட ஒதுக்கீடு கேட்டு சிரை செல்லும் போராட்டத்தினை அறிவித்துள்ளனர். நல்ல விசயம்தான், வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் சரியாக ஜனவரி 28-ம் தேதி அதனை செய்ய என்ன காரணம்? புரட்சியாளர்.பழனிபாபா அவர்களின் நினைவு தினம் அன்று என்பதால்தான். பழனிபாபா இருந்த காலத்தில் அவர் கடுமையாக விமர்சித்த இசுலாமிய தலைவர்களுள் ஒருவர் பி.ஜெய்னுள் ஆபிதீன்.
அதன் எதிர்வினைதான் இன்று அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். ஒடுக்கப்படோரின் குறியீடாக, இசுலாமியர்களின் அரசியல் எழுச்சியாளராக இருக்கும் அவரின் நினைவு தினத்தில் இசுலாமிய இளைஞர்களை ஒன்று சேராது திசை மாற்றும் வேலையே இது. அவர் வேறு ஒரு நாளை தெரிவு செய்து நடத்தினால் எல்லோர்க்கும் திருப்தி, எல்லோரும் பங்கெடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் அவர் தனக்காகப் போராடவில்லை, ஒட்டுமொத்த இசுலாமியர்களுக்காகவும்தான் போராடுகிறார். ஆனால் அதில் தனது சுய வக்கிரங்களை தீர்த்துக் கொள்ள முயல்வது வருத்தத்திற்குரிய ஒன்று.
இதேபோன்று, எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, இந்திய யூனியன் முஸ்லீம் லீம் கட்சி முன்னர் தொட்டு தி.மு.க-வில் இருந்து வந்தது இந்தத் தேர்தலுக்கும் அது தனது கூட்டணியினைத் தொடர்கிறது, தவறில்லை. இந்தத் தருணத்தில் இந்திய தேசிய லீக் கட்சியானது ஒரு கோரிக்கையினை முன் வைத்து, அத்தனை இசுலாமிய இயக்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாம், ஆகவே அத்தனை கட்சிகளையும், இயக்கங்களையும் சந்தித்து வந்தது. இந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தி.மு.க-வில் சென்று இணைந்துள்ள செயல் கண்டிக்க வேண்டியது. அவர்கள் தி.மு.க-வில் இணைந்ததில் ஒன்றும் தவறில்லை. ஆனால் ஒருவர் ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருக்கும் வேளையில் அதனை அவமதிக்கும் விதமாக இருக்கிறது இந்தச் செயல்.
அதேசமயம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சித்து வரும் இந்திய தேசிய லீக் கட்சியானது, இசுலாமியர்கள் தனித்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று ஒன்றை முன்வைக்கிறது. அது நிச்சயமாக சாத்தியமற்றது. ஆர்.எஸ்.எஸ் விரும்புவது போல் நம்மை நாமே அந்நியப்படுத்திக் கொள்ளும் செயலும் கூட அது. இந்தியா போன்ற பன்மைச் சமூக அமைப்பிற்கு இது முற்றிலும் முரணானது. அதேசமயம் அப்படி ஒன்றிணைந்து நின்றாலும் மாநில அளவில் கூட சிறு இருப்பு கூட சாத்தியமில்லை, ஏனெனில் அந்த அளவிற்கு தொகுதி பிரிப்பு சதிகள் அரங்கேறியுள்ளது. இதே 1996 தேர்தலில் பழனிபாபா அவர்கள் கணித்துச் சொன்னபோது இருந்த 240 தொகுதி அப்படியே மாற்றமடையாமல் இருந்தால் வேண்டுமானால், இருப்பை பதிவு செய்ய முடிந்திருக்கும். ஆனால் இன்று அதற்குக் கூட வாய்ப்பில்லை. ஆனாலும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்வது, சிறு சிறு கூட்டமய் இல்லாமல், ஒன்றுபட்ட அணியாய் ஒன்றிணைந்து, அந்த மாபெரும் அணியோடு வேறு ஒரு மையப் பிரதான கட்சியோடு சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதுதான் அறிவுடைமை.
தமிழகத்தைப் பொருத்தவரை, அ.இ.அ.தி.மு.க உடன் இசுலாமியர்கள் சேர்வதென்பது மாபெரும் மடைமை, அபாயம். அதனால் அவர்களுக்கு அடுத்து இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம். ஆதலால் இசுலாமியர்கள் இன்று கூட்டு வைக்க வேண்டியது தி.மு.க உடன்தான். அந்த வகையில், த.மு.மு.க-வின் முடிவு வரவேற்க வேண்டிய ஒன்றுதான். முன்னரே தி.மு.க அணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளது,
தற்போது த.மு,மு.க. இதேபோன்று ஒடுக்கப்படும் சமூகமான தலித்துகளின் புறமிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானதும் தி.மு.க உடன் உள்ளது. ஆகவே இதே போன்று இன்ன பிற இசுலாமியக் கட்சிகளும் தங்களை தி.மு.க அணியில் கூட்டுச் சேர்த்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத் தேவை. அதேசமயம் இவர்கள் தங்களுக்குள் ஒரு அணியாக உருவாகி, ‘ஐக்கிய இசுலாமிய அமைப்பாக’ தி.மு.க உடன் கூட்டு சேர வேண்டும். இப்போது உள்ளது போல், த.மு.மு.க தனி. முஸ்லீம் லீக் தனி என்ற வண்ணம் இல்லாமல். ஆனால் அது சாத்தியமா? ஒன்றுபடுவார்களா?
வாய்ப்பு மிக மிக அரிது. காரணமென்ன இசுலாமிய இயக்கவாதிகளிடையே எக்கச்சக்கமான போட்டிகள், பொறாமைகள். இசுலாமியர்கள் எவ்வித பாகுபாடுகளின்றி ஒன்றுபடுவதே பள்ளிவாசல்கள்தான். ஆனால் இன்று அங்கு கூட ஒற்றுமை இல்லை. தவ்ஹீத் இயக்கத்தினருக்கு தனியெ மசூதி, சுன்னத் மரபினருக்கு தனியே ஒன்று, ஜாக் அமைப்பினருக்கு தனியே ஒன்று. இப்படி இருந்தால் எப்படி சாத்தியமாகும்?
இன்றுள்ள இசுலாமியச் சமூக இளைஞர்களிடம் உள்ள மனோபாவம் இதுதான், ‘நாம் ஒன்றுபட வேண்டும், அப்பொழுதான் நாம் உரிமைகள் பெற முடியும்’ என்ற வண்ணமாக தெளிவு பெற்றுள்ளனர். ஆனாலும் அவர்களால் ஒன்றிணைய இயலவில்லை. காரணம் தலைவர்களின் கருத்து ஒவ்வாமை. அவர்கள் தங்களுக்குள் உள்ள தலைமை இடத்தை விட்டுத் தர தயாராக இல்லை. மாற்றம் வேண்டும், ஆனால் அது தன்னால்தான் நடக்க வேண்டும் என்கிற மனோபாவம் ஒவ்வொரு தலைவரின் மனதிற்குள்ளும். பிறகு எப்படி சமூகம் எழ முடியும்?
இப்படி பல வகையான சிக்கல்கள், இந்த நிலையில் அவர்களால் ஒன்றிணைப்பு என்ற ஒன்றை உச்சரிக்கத்தான் முடியுமே தவிர, செயல்பாட்டில் இயலாத ஒன்றே. ஆனால் வெற்றியானது ஒன்று பட்டால்தான் உண்டு.
இப்படி செய்யலாம்:
o அனைத்து இசுலாமியக் கட்சிகளும் ஒரே பெயரில் தேர்தலில் மட்டும் ஒரு அணி அமைக்க வேண்டும்.
o தங்களுக்கென ஒற்றுமை அமைப்பை எக்காலமும் வரும் வண்ணம் அமைத்து, அதற்கென்று தனி இதழ் கட்டமைப்பு வேண்டும்.
o தேர்தலின் போது தங்களின் சுய, முதன்மைக் கட்சியின் கொடியிலேயே அவர்கள் இயங்கலாம், ஆனாலும் ஒன்றுபட்ட பெயரில்.
o தேர்தல் வெற்றி அடிப்படையில், பங்கீடுகளை நிர்ணயித்து, எல்லாக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும், இந்த செயலினால் இசுலாமிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பார்கள்.
o இயக்கத் தலைவர்களுக்குள் உள்ள முரண்களை நீக்க, அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். ஒரு வலுவான் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அது வெறும் பொதுத்தள உறவாய் இல்லாமல், குடும்ப உறவாய் இருந்தால் நலம். பிற்காலத்திலும் முரண்களை களைய ஒரு பாலமாய் உறவு அமையும்.
o ஏனைய ஒடுக்கப்படும் சமூக இனத்தாரோடு பொதுத்தளத்தில் ஆழமாக கைகோர்த்து செயல்பட வேண்டும்.
o இப்படியான செய்கைகளினால்தான் வெற்றி சாத்தியம். சுருக்கமாகச் சொன்னால் ‘ஒற்றுமை’ அதுதான் பலம்.
இந்த கருத்துக்களானது, வெறுமனே இசுலாமியர்களுக்கு மட்டுமானது இல்லை, இசுலாமியர்கள் போன்றே ஒடுக்கப்படும், இழிவுக்குள்ளாக்கப்படும் எல்லோருக்குமான அரசியல் விழிப்பாகும். செய்வார்களா?
– ஷஹான் நூர், கீரனூர்