மார்க்க அறிஞரின் அளவுகோல்
கோட் சூட், முக்காடு என மற்றவர்களை விட சற்று வித்தியாசமான கோலத்தில் மார்க்கம் பேச வந்து விட்டால் சாமானியர்களின் கவன ஈர்ப்பு தமக்கு கிடைக்கும் என்கிற எண்ணத்தில் இன்று தாவாக் களத்தில் இருக்கும் அறிஞர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் கோலம் மாறியிருக்கிறது என்பதை தாண்டி, நாவில் ஆங்கிலம் விளையாடுகிறது என்பதை தாண்டி, இது போன்றவர்களின் உரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத்தக்கதாக வேறெந்த நியாயங்களும் இல்லை என்பதே விதிவிலக்குகளை தவிர்த்து, பெருவாரியான அறிஞர்கள் விஷயத்தில் உண்மையாக இருக்கின்றன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்வை மனக்கண்ணில் கொண்டு வரும் எவருமே, வைட் காலர் பிரச்சாரகர்களாய் வலம் வரும் இது போன்ற எவரையும் துச்சமாய் தான் மதித்தாக வேண்டும்.
இந்த தூய மார்க்கத்தை கியாமத் நாள் வரை பேணி நடக்கும் லட்சக்கணக்கான சமுதாயத்தவருக்கு தலைவரான நபிகளார், தம்மை எந்த சந்தர்ப்பத்திலும் தனியாக முன்னிலைப்படுத்தி காட்டியது கிடையாது.
அவர்கள் ஒரு சபையில் அமர்ந்திருக்கும் போது, அந்த சபையில் முஹம்மது என்றால் யாரென்று பிரித்தறிய முடியாத அளவிற்கு மக்களோடு மக்களாய் கலந்து வாழ்ந்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களுக்கென தனி அந்தஸ்து இல்லை, அவர்களுக்கென பிரத்தியேக இருக்கைகள் இல்லை, அவர்களுக்கென மாறுபட்ட கோலங்கள் இல்லை, ஆடை அணிகலன்களில் தனித்துவம் இல்லை.
தமக்காக எவரும் எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கும் அளவிற்கு சாமானிய மனிதராய், புழுதி பறக்கும் பாலைவனத்தில் வியர்வை சிந்தியவர் அந்த மாமனிதர்.
அனைத்தையும் விட, அந்த சிரமங்களுக்கிடையேயும், மார்க்கத்தில் இதை சொல்லலாம், இதை சொல்ல வேண்டாம் என தேர்வு செய்து அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை,
மாறாக எதை சொன்னால் தம்மீது கொலை வெறி ஏற்படுமோ அதை கூட அஞ்சாமல் சொன்னார்கள், அந்த சமூகத்தில் நிலவும் எத்தகைய தவறை, எந்த வகையில் கண்டித்தால் அம்மக்கள் வெகுண்டெழுவார்களோ அந்த தவறை அதே முறையில் தான் கண்டித்தார்கள்.
அந்த மாமனிதரின் சாமானிய வாழ்விலும் நமக்கு படிப்பினை இருக்கிறது. அந்த மனிதர் செய்து காட்டிய தாவா முறையிலும் நமக்கு பாடம் இருக்கிறது.
ஆங்கில மோகம் கொண்டும், முக்காடுகளால் கவரப்பட்டும் இளைய சமுதாயம் இன்று யார் பின்னால் செல்கிறதோ அவர்களது பொது வாழ்வை பெருமானாரின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பாருங்கள், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாட்டினை உணரலாம்.
தமக்கென தனி கோலம், தமக்கென தனி அந்தஸ்து, தமக்கென பிரத்தியேக அணிவகுப்புகள், மார்க்க பிரச்சாரங்களில் கூட தங்களது இமேஜ் பாதிக்காத அளவில் தேர்வு செய்து பிரச்சாரம் செய்கிற தன்மை என,
மார்க்கத்தை தங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யும் அறிஞர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுபவர்களாக நிச்சயம் இருக்க முடியாது. இது போன்றவர்களின் பிரச்சாரங்களில் நிச்சயம் உண்மை இருக்காது!
இந்த அளவுகோல் கொண்டு அறிஞர் பெருமக்களை உரசிப்பார்த்து இளைய சமுதாயம் தங்கள் அறிவுத்தேடலுக்கான பாதையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
source: http://nashidahmed.blogspot.in/2014/03/blog-post_4667.html