சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவனத்தை அடையலாம் என எண்ணுகிறீர்களா?
[ திருவல்லிக்கேணியில் நடந்த பெண்கள் பயானில் சுரைய்யா ஆலிமா உரையில் இருந்து…]
அல்லாஹ் இந்த உலக வாழ்கையைச் சோதனைக் களமாக ஆக்கியிருக்கின்றான். இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச்செய்வான்.
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில் தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான்.
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214) என அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் பெண்களாகிய நாம் தான் துன்பங்களின் போது பொறுமையிழந்து, இஸ்லாமிய வரம்புகளை மீறி அடித்துக் கொண்டு அழுதல், ஒப்பாரி வைத்தல், இறை நிராகரிப்பு வார்த்தைகளை சொல்லி அழுதல் என நடந்து கொள்கிறோம்!
பெற்ற மகன் இறந்த போது கூட வெளியூரிலிந்து வந்த கண்வரிடத்தில் சொல்லி அவரிடத்தில் இல்லற உறவெல்லாம் முடிந்து இரவில் பொறுமையாக ’இரவலை திருப்பிக் கேட்டால் கொடுப்பது தானே சிறந்தது’ எனக் கூறி இறைவன் கொடுத்தன் அவன் எடுத்துக் கொண்டான் என புரிய வைத்த உம்மு சுலைம் [ரலி] அவர்களின் வாழ்வில் நமக்கு படிப்பினை உள்ளது …….
நேற்று 6.3.14 அன்று திருவல்லிக்கேணியில் நடந்த பெண்கள் பயானில் நடந்த எனது மனைவி சுரைய்யா ஆலிமா உரையில் இருந்து…
-Sengis Khan