கேஜ்ரிவாலை சந்திப்பதற்கு மோடி மறுப்பதன் காரணம் இந்த 17 கேள்விகள் தானோ…?!
குஜராத் உழலற்ற வளர்ச்சி அடைந்த மாநிலமா? என அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளால் துளைத்துள்ளார்.
கெஜ்ரிவால் எழுப்பியுள்ள கேள்விகள் கீழே:
1) மத்திய அரசு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையின் இயற்கை எரிவாயு விலையை ஒரு யூனிட்டுக்கு ரூ.16 என்று உயர்த்த உள்ளதா? நீங்கள் பிரதமர் ஆனால் அதே அளவுக்கு விலை எற்றுவீர்களோ?
2) ஒப்பந்த புள்ளிகள் கோராமல் குஜராத் அரசு சூரிய சக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 13 ரூபாய் கொடுத்து வாங்குகிறதா? மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடாகாவிலும் இதே சூரிய ஒளி மின்சாரம் ரூ.7.5 மற்றும் ரூ.5.5க்கு ஒப்பந்த புள்ளிகளின் மூலம் வாங்கும்போது, ஏன் உங்களுடைய அரசு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது?
3) குஜராத்தில் விவசாயத்தின் வளர்ச்சி 11 சதவிகிதம் என்று குறிப்பிட்டீர்கள். ஆனால், உங்களுடைய அரசாங்கத் துறைகள் தரும் குறிப்புகளின்படியே 2006-07ல் விவசாய உற்பத்தி 27,815 கோடிகள் என்றும், ஆறு ஆண்டுகள் இடைவெளியில் 2012-13ல் 25,908 கோடிகளாகவும் விவசாய உற்பத்தி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் உங்களுடைய ஆட்சிக்காலத்தில் குஜராத்தின் விவசாய வளர்ச்சி -1.18 சதவிகிதம் குறைந்திருக்கிறது. பின்னர் எப்படி 11% வளர்ச்சி என்று சொல்கிறீர்கள்?
4) கடந்த பத்தாண்டுகளில் மூன்றில் இரு பங்கு சிறுதொழில்கள் குஜராத்தில் மூடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய ஊரான மெஹ்சனாவிலேயே 187 சிறுதொழில் நிறுவனங்களில் 140 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், எதை நீங்கள் வளர்ச்சிக்கான மாதிரி என்று எதை முன்னிறுத்துகிறீர்கள்? இதுதான் உங்களின் மாதிரி என்றால், இந்தியாவின் சிறுதொழில்களை மூடி விட்டு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவனங்களிடம் இந்தியாவின் தொழில்களை ஒப்படைத்து விடுவீர்களா?
5) குஜராத்தில் லஞ்சமோ ஊழலோ இல்லை என்பது நீங்கள் அடிக்கடி பெருமையோடு சொல்லிகொள்ளும் வாசகம். நாங்கள் நேரில் மக்களைப் பார்த்து பேசிய பொழுது பல்வேறு சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் இருக்கும் அரசு அலுவலங்களில் ஊழலும், லஞ்சமும் ஆறாய் ஒடுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழேயான ரேஷன் கார்டுகள், அரசு திட்டங்கள், லைசன்ஸ்கள் என்று எதை வாங்க வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்கிறார்கள். அப்புறம் எப்படி ஊழலற்ற மாநிலம் குஜராத் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறீர்கள்?
6) நிதி மோசடிகளில் உங்கள் அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றசாட்டப்பட்டு இருக்கிறது. ஆறு கோடி குஜராத மக்களில் அமைச்சரவையில் சேர்க்க நேர்மையான ஆட்களே கிடைக்கவில்லையா?
7) உங்களுக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குமான தொடர்பினைப் பற்றி விளக்க முடியுமா?
8) குஜராத் அரசின் 1,500 ஜூனியர் லெவல் வேலைகளுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டமே இல்லையென்று ஏன் கம்பீரமாக பறைசாற்றிக்கொள்கிறீர்கள்?
9) உங்கள் அரசின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ.5,300. ஒரளவிற்கு படித்த, தன்மானமிக்க ஒருவரால் ரூ.5,300ல் வாழ முடியுமா?
10) தரமான கல்வியை தருவது ஒரு அரசின் பொறுப்பு என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கடந்த சில நாட்களில் குஜராத்தின் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நாங்கள் பயணம் போனபோது, குஜராத் அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன என்பதை கண்கூடாக கண்டோம். சில பள்ளிகளில் 600 மாணவர்களுக்கு வெறும் மூன்று ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு மோசமான கல்விச் சூழலை வைத்துக் கொண்டு, இந்தியாவை எப்படி முன்னேற்றுவீர்கள்?
11) நல்ல தரமான மருத்துவ வசதியை குடிமக்களுக்கு தருவது என்பதை ஒரு அரசின் கடமை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் இல்லையா? குஜராத் அரசின் மருத்துவ சேவைகள் முடமாகிக்கிடக்கிறது. எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து போயிருக்கிறது. பல கிராமங்களில், முதன்மை சுகாதார மையங்கள் மூடப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்றன. தாலுகா, மாவட்ட அளவில் இருக்கும் மருத்துவமனைகளில், பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது. பணியில் இருக்கும் ஆட்களும் ஒழுங்காக் சுகாதார நிலையத்துக்கு வருவதில்லை. மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லை. இந்த லட்சணத்தில் என் மாநில மருத்துவ சேவை பிரமாதம் என்று ஏன் பொய் சொல்லுகிறீர்கள்?
12) விவசாயிகள் குஜராத் முழுக்க உங்களுடைய ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் விவசாயத்துக்கு செய்யும் செலவைவிட குறைந்த விலையையே உங்களின் அரசின் அலட்சியத்தால் அவர்களின் உற்பத்தி பொருள்களுக்கு பெறுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த சில வருடங்களில் அப்படி 800 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள்?
13) நாடெங்கும் பேசுகிற இடங்களில் குஜராத்தில் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தேன் என்று அறிவித்து கொள்கிறீர்கள். எங்களுடைய ஆய்வில், குஜராத்தில் நான்கு லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்புக்கு விண்ணப்பித்து இன்னமும் இணைப்பு கிடைக்காமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இணைப்பே தராமல் மின்சாரம் போய் சேர்ந்து விட்டதாக சொல்வது எந்த வகையான சாமர்த்தியமோ?
14) உங்களுடைய ஆட்சியில் விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு மிகக்குறைவான விலையில் உங்களுக்கு சாதகமான பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தருவதில்லை. அப்படியே தந்தாலும் அது மார்க்கெட் விலையை விட குறைவாகவே இருக்கிறது. அடானி, அம்பானி நிறுவனங்களுக்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு ரூபாய்க்கு
கொடுப்பது ஏனோ? ஏன் விவசாயிகளிடம் உங்கள் அரசு இதயமே இல்லாமல் நடந்துகொள்கிறது?
15) கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப்பாசன தேவைகளுக்காக 2005ல் நர்மதா அணையின் உயரத்தினை உயர்த்தினீர்கள். எட்டு வருடங்களாகியும், கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு சொட்டுத்தண்ணீர் கூட எட்டவே இல்லை. உங்களின் அரவணைப்பில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு அந்த நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. கட்ச் மக்களிடம் ஏன் இப்படி ஒரு பாரபட்சம்?
16) பஞ்சாபில் உரையாற்றுகிறபோது சீக்கியர்களின் நிலங்களை கட்ச் பகுதியில் பிடுங்கமாட்டோம் என்று சூளுரைத்தீர்கள். உண்மையில்சீக்கியர்களின் நிலங்களை பிடுங்க கோர்ட் வாசல்படி ஏறி இருக்கிறது உங்கள் அரசு. அந்த வழக்கை திரும்பப் பெறுவீர்களா?
17) நீங்கள் தனியார் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணிக்கிறீர்கள். இதைபோல எத்தனை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உங்களிடத்தில் இருக்கின்றன? யாருக்கு சொந்தமானவை அவை? நீங்கள் தான் இவற்றுக்கு பணம் செலுத்துகிறீர்களா? அப்படி இல்லையென்றால் யார் இந்த செலவினை உங்களுக்காக ஏற்கிறார்கள்? ஏன் உங்களின் விமான போக்குவரத்து செலவுகளை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடாது?
இவ்வாறு அதில் உள்ளன.
குஜராத் சென்ற கெஜ்ரிவால் மோடியை சந்திக்கச் சென்றபோது கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : இந்நேரம்