இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
பீர் முஹம்மத் (நெல்லை ஏர்வாடி)
இன்றைய நமது சமுதாயத்தின் நிலைப் பற்றி எடுத்துக் கூறவேண்டியதில்லை. சமுதாய அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கண்ணீர் வடிக்கும் நிலைதான். தீர்வு காண்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு பிரச்சினையை தனித்தனியே எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டிருப்போரும் நம்முள் அடக்கம். எதுவுமே செய்ய முடியாது என்ற விரக்தியில் இருப்போரும் நம்முள் அடக்கம்.
சில நாட்களுக்கு முன்னர் துபையில் எனது மகனின் பள்ளி ஆண்டுவிழாவிற்கு சென்றிருந்தேன். அது ஒரு முஸ்லீம் மேனேஜ்மெண்ட்டின் கீழ் நடைபெறும் பள்ளிக்கூடம். அங்கு வந்திருந்த பேச்சாளார்களில் ஒருவர்….
“நான் அதிகம் பேச விரும்பவில்லை! ஒரு விசயத்துடன் எனது பேச்சை முடித்துவிடுகிறேன் என்று கூறி ஒரு சம்பவத்தை விவரித்தார்.
ஒரு சிறிய ஹாலில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அதில் ஆண்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருக்கின்றனர். தீடிரென கரண்ட் கட். லைட் போய்விடுகிறது இருள் சூழ்கிறது..
சிறிது நேரத்தில் ஒரு குரல் “ஆ எனது பையை காணவில்லை திருடன் திருடன்” சில நிமிடங்களில் ஒரு பெண்ணின் குரல்ஸ “அய்யோ எனது குழந்தையை காணாவில்லை” என்று, அதே நேரத்தில் மற்றொரு குழந்தையின் அழுகுரல், வெறொரு மனிதர் வெளியெ செல்ல நினைத்து எழுந்து இருட்டில் தடுக்கி விழுந்து வேதனையில் குரல் கொடுக்கிறார்….”
கேள்வி: அங்கிருக்கும் நீங்கள் எந்த பிரச்சினையை முதலில் அணுகுவீர்கள்?
கேள்வியை கேட்டுவிட்டு அவரே கூறினார் நீங்கள் எந்த பிரச்சினையையும் அணுக வேண்டாம். முதலில் கரண்ட்டை, வெளிச்சத்தை கொண்டு வர முயலுங்கள். வெளிச்சம் வந்துவிட்டால் பிரச்சினைகள் தாமாக தீர்ந்துவிடும்.
இன்று முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்கள் ஊரும் விதிவிலக்கல்ல! இதனைப் பற்றி விவாதிக்கும் போது ஒருவர் (முஃப்தி ஷர்புத்தீன்) கூறினார் இன்று நமக்கிருக்கும் பிரச்சினைகளில் எது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த காலத்தில் இல்லை? கூறப்போனால் இதனை விட பன்மடங்கு அதிகமாகவே இருந்தது. அவர்கள் கண்ட தீர்வென்ன? ஒவ்வொரு பிரச்சினைகளையும் தனித்தனியாக அணுகினார்களா? முதலில் பெண் சிசு கொலை ஒழிப்போம், பின்னர் மதுவை ஒழிப்போம், பின்னர் விபச்சாரத்தை ஒழிப்போம் என்றார்களா! இல்லை அற்புதமான இஸ்லாம் என்னும் ஒளியை கொண்டுவந்தார்கள். இருள்கள் அகன்றன. காலங்களிலெல்லாம் மிகச் சிறந்த காலத்தை ஏற்படுத்தினார்கள். மனிதர்களிலெல்லாம் புனிதர்களை உருவாக்கி காட்டினார்கள்.
(ஆனால் இங்கே அந்த மாற்றத்தை கொண்டுவந்த மாமனிதர் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது குணநலன்களில் எப்படி திகழ்ந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.)
மெளலான காஜா மொய்னுத்தீன் கூறியது போன்று இருள் இருள் என்று கூச்சல் போட்டால் இருள் நீங்காது, கூச்சலை நிறுத்திவிட்டு வெளிச்சத்தை கொண்டுவரும் முயற்சியில் இறங்குங்கள். (பித்அத் பித்அத் என்று கூச்சல் போடாதீர்கள், சுன்னத்தை நிலை நிறுத்துங்கள் பித்அத்துகள் தானாக அகன்று விடும்).
கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்காக நாம் ஏன் அலையவேண்டும்? தீர்வுக்காக நாம் வேறு எந்த சமுதாயத்தையும் அணுகவேண்டியதில்லை. உலகிற்கே தீர்வை கொடுத்தவர்கள் நாம். நாம் தான் முன்மாதிரி சமுதாயம். வெளிச்சத்தை இழந்ததால் தான் இருளில் தட்டுத் தடுமாறி கொண்டிருக்கின்றோம். இஸ்லாம் என்னும் அற்புதமான ஜோதியை திரும்பவும் நமது சமுதாயத்தில் கொண்டுவந்துவிட்டால் இருள் நீங்கி நமது சமுதாயம் மீண்டும் வழிகாட்டும் சமுதாயமாக மாறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சமுதாயத்தின் நிகழ்காலம்: வழக்கம் போல் சமுதாயத்தினை பற்றிய கவலைகள் கடல் கடந்து வாழும் ஊர்மக்களுக்குத்தான் அதிகமதிகம். ஊரில் இருப்பவர்களோ துரதிஷ்டவசமாக. இதையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலையில் அல்லது நாங்கள் செய்வதுதான் சரி என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களை இயலாதவர்களாக கருதி செயல்படுவது.
இயக்கங்களிடையே ஒற்றுமையாகட்டும், கொள்கைளிடையே ஒற்றுமையாகட்டும், ஜமாத் பிரச்சினைகளாகட்டும். (ஊர் லெவலில்தான், அதே முடியவில்லை பின்னெங்கே மாநில லெவலில்); சமுதாய தொலைநோக்கு நலனுக்காக நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் எந்த பலனையும் தரவில்லை. நாட்கள் செல்ல ஒருவருக்கொருவரிடையே இருக்கும் கசப்புகள் தான் அதிகரித்தன. இருக்கும் தலைமுறையை சரிசெய்வதென்பது விவாதத்தில், விவகாரத்தில் தான் முடியும் என்பது எங்களுக்கேற்பட்ட அனுபவம்.
சமுதாயத்தின் எதிர்காலம்: சமுதாயத்தின் எதிர்காலம் குழந்தைகளின் கையில். இன்றைய நமது குழந்தைகளின் நிலை எப்படியிருக்கின்றது.
இன்று நமது சமுதாயத்தின் தேட்டம் தீனைவிட பொருளாதாரத்தில் தான். சமுதாயம் தீனை விட்டுவிட்டு பொருளாதாரத்தை தேடிக்கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையானதல்ல, ஏனெனில் வாழ்க்கையின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டும் தான் என்ற மாற்று மதத்தினரின் வழையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றது…
ஒவ்வொரு வீட்டிலும் காலை ஆறு, ஏழு மணிக்கெ ஸ்கூலுக்குச் சென்று மாலை வீடு திரும்பி பின்னர் ட்யூசன் மற்றும் டிவி. தூக்கம் மறுநாள் இதேநிலை. குர்ஆன், தொழுகை, தீனை கற்பதற்கு “டைம் இல்லை”
இதே நிலை நீடித்தால் இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின் சூரா பாத்திஹா ஓதத் தெரிந்த முஸ்லீம்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? (குர்ஆன் சிறுக சிறுக உயர்த்தப்படும்) இமாமத் செய்வதற்கு ஆட்கள் இருப்பார்களா? இமாம்கள் இருக்கும் இந்தக் காலத்திலேயே பள்ளிவாசல்களில் தொழுகையில் நிற்பது ஒன்று இரண்டு சஃப்கள். இமாம்களே இல்லையெனில் தொழுகை நடக்குமா? பள்ளிவாசல்களின் நிலை என்ன?
ஊர் நாம் வழத்தகுதியான ஊராக இருக்கவேண்டுமானால் இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இஸ்லாம் என்னும் ஜோதியை அந்த பிஞ்சு உள்ளங்களில் ஏற்றவேண்டும். எதிர்கால சமுதாயம் ஒரு முன்மாதிரி சமுதாயமாக மாறவேண்டும். இதனை செயல்படுத்த ஐந்து பேர் கொண்ட ஒரு கமிட்டியை (மக்தப் மதரஸா கமிட்டி) ஏற்படுத்தினோம். இதனுடைய முக்கிய நோக்கம் ஊரில் மக்தப் மதரஸாக்களை (முறையான, முழுமையான பாடதிட்டங்களுடன்) ஏற்படுத்தி எதிர்கால சமுதாயத்தை செம்மைப்படுத்துவது.
பாகம்-2:
எப்படி செயல்படுத்துவது?
கமிட்டியின் செயல் பாடுகள்:.
ஊரில் எத்தனை மதராஸாக்கள் நடக்கின்றன என்ற ஒரு சர்வே. மேலும் இதனை நடத்திவருபவர்களை தொடர்புகொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறிதல்.
இதில் வரும் மாணவர்களை கொண்டு ஊரில் ஒரு மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்துதல்.
மதராஸா இல்லாத முஹல்லாவில் மக்தப் மதரஸா ஏற்படுத்துதல்.
மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்ற மதரஸாக்களை ஏற்படுத்துதல்.
1. மதராஸா சர்வே:
இது ஆச்சரியப் படவைத்தது. சிறுதும் பெரிதுமாக 15 மதரஸாக்கள். இதில் பல ஏழை பெண்மணிகளால் நடத்தப்படுபவை. மாஷாஅல்லாஹ் பலனை எதிர்பார்க்காமல் தீனுக்காக பணி செய்யும் ஏழை பெண்மணிகள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்களை அணுகி இது விசயமாக பேசியபோது அவர்களுக்கு ஆனந்த கண்ணீர் – ”இதுவரை யாரும் எங்களை கண்டு கொண்டதே இல்லையே!” ”
2. மார்க்க விழிப்புணர்வு:
மார்க்க கல்வியின் அவசியத்தை வழியுருத்தி மாணவர்களின் சிறு நாடகங்களுடன் – மெளலானா ஆவூர் இஸ்மாயில் ஹஸனி அவர்களின் சிறப்புரையோடு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் நிறைந்த மதரஸா மாணவர்களின் நாடகங்கள், இஸ்லாமிய கலை கண்காட்சி மற்றும் குர்ஆன் கிராஅத் போட்டிகளுடன் நடந்த இந்த மாநாடு நல்ல வரவேற்பையும் மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அத்தோடு ஏற்கனவே மதரஸா நடத்திவருபவர்களையும் அழைத்து கண்ணியப்படுத்தினோம்.
3. மதராஸா இல்லாத முஹல்லாவில் மக்தப் மதரஸா ஏற்படுத்துதல்:
மதரஸா மற்ற மதரஸாவைப் போன்றல்லாமல் ஒரு முறையான, முழுமையான பாடதிட்டத்துடன் இருக்கவேண்டும் என்ற நிய்யத்தில் இருந்ததால் UNWO (United Welfare Organization) என்ற அமைப்பினை தொடர்பு கொண்டோம்.
UNWO: – சத்தமில்லாமல் சமுதாய சேவைகள்
மாற்றங்கள் வேர்களைப் போல் பரவவேண்டும் அப்போதுதான் அவைகள் உறுதியாக இருக்கும், நீடித்துமிருக்கும் , ஆனால் வேர்கள் பரவுவது கண்களுக்குத் தெரிவதில்லை. மாற்றங்கள் வேர்கள் இல்லாமல் கிளைகளைப் போல் வளர்ந்தால் அவை கண்களுக்குத் தெரியும் ஆனால் நீடித்திருக்காது. மாஷாஅல்லாஹ் UNWO செயல் பாடுகள் வேர்கள் போன்றது. இவர்களது சேவைகளில் ஒன்றுதான் மக்தப் மதரஸா – முறையான முழுமையான பாடதிட்டத்துடன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான்.
பல ஊர்களில் பல சவால்களுக்கிடையே மக்த்தப் மதராஸாக்கள் ஏற்படுத்த உதவிகள் செய்த இந்த அமைப்பின் பிரதிநிதியை தொடர்பு கொண்டபோது அவரது சுறுசுறுப்பும் ஊக்கமும் எங்களையும் தொற்றிக் கொண்டது.
ஊரில் அனைத்து முஹல்லா ஜமாத் நிர்வாகிளுக்கான (ஐக்கிய ஜமாத்) கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து முஃப்தி ஷர்புத்தீன் (UNWO) அவர்களை அழைத்து மக்தப் மதராஸாவின் அவசியத்தை எடுத்துரைக்கச் செய்தோம்.
ஒரு மக்தப் மதரஸா எப்படி இருக்கவேண்டும் என்று அவர் கூறியவைகளில் சில…
சீர்திருத்தங்கள் பள்ளிவாசல்களிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். (மஸ்ஜிதுன் நபவி – உலகின் முதல் பல்கலைக்கழகம்)
மக்தப் மதரஸா கமிட்டி ஒன்று அமைக்கவேண்டும். பள்ளி நிர்வாகிகளும் அதில் இருக்கவேண்டும். இது மதரஸா நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக்காக.
மூன்று ஜும்மா பயான்கள் தொடர்ச்சியாக மற்றும் ஒரு பெண்கள் பயானில் மதரஸாவின் அவசியம் பற்றி பேசவேண்டும்.
சேர விரும்புபவர்கள் அப்ளிகேசன் பார்ம் நிறைக்க வேண்டும்.
அட்மிசன் பீஸ், யூனிபார்ம் பீஸ் மற்றும் புக்ஸ் பீஸ் உண்டு.
மாதாந்திர பீஸ். (ஏழை மாணவர்களுக்கும் இலவசமல்ல ஆனால் ஸ்பான்ஸர் முறையுண்டு)
ஒரு வகுப்பிற்கு அதிக பட்சம் 20 மாணவர்கள்.
உஸ்தாதுகளை இண்டர்வீவ் (உதாரணம் தஜ்வீத் முறை சரியாக இருக்கின்றதா?) மூலம் தேர்வு செய்தல்
உஸ்தாதுகளுக்கு மூன்று நாள் விசேச பயிற்சி.
மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும்.
மாணவர்களை அடிக்கக் கூடாது.
மாணவர்களை சாக்லேட் மற்றும் பரிசு பொருட்களுடன் ஊக்குவித்தல் etc..
கமிட்டி நிர்வாகிகளுக்கு விசேச பயிற்சி.
எப்படி கண்காணிக்க வேண்டும்.
பெற்றோர்களுடன் தொடர்பு, பெற்றோர்கள் கூட்டம் நடத்துதல்… etc…
மாணவர்கள் மதரஸாவிற்கு வரவில்லையெனில் பெற்றோர்கள் போன் மூலம் தெரியப் படுத்தவேண்டும்.
இதுபோன்று இன்னும் பல….
இதனடிப்படையில் அந்த முஹல்லாவில் ஒரு மக்தப் மதரஸா கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினோம். பல பிரச்சினைளுக்கிடையே, முஹல்லா பள்ளி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் மதரஸா திறப்பு நாளை அறிவித்தோம். அதற்கு முன்னர் ஜும்மா உரையில் மக்தப் மதராஸா வின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப் பட்டது. அத்துடன் மதரஸா அறிமுகம் பற்றிய நோட்டிஸும் விநியோகிக்கப்பட்டது. பெண்களுக்கான தனி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலும் மக்தப் மதரஸாவின் அவசியம் பற்றி பேசப்பட்டது, (இதிலெல்லாம் பேசியவர் முஃப்தி ஷர்புத்தீன்)
இறைவனின் பேரருளால் இந்தச் செய்தி முஹல்லா மக்களிடையே நன்றாக சென்றடைந்தது.
தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரியாக நடத்தப்பட்டு வரும் இந்த மாதிரியான மதரஸா காயல்பட்டிணத்தில் தான். மதரஸா ஆரம்பிப்பதற்கு முன் அங்கே சென்று நேரடியாக பார்த்ததுமட்டுமல்லாமல் உஸ்தாத் அபூபக்கர் அவர்களின் அனுபவபூர்வமான அறிவுரைகளையும் கேட்டறிந்தோம். அவர்கள் தந்த ஊக்கம் கமிட்டியின் ஆர்வத்தை தன்னம்பிக்கையும் அதிகரித்தது.
ஆனாலும் பல தயக்கங்கள்…
ஆரம்ப பீஸ்களை வைத்துப் பார்த்தால் முதலில் ஒரு குழந்தை சேர்க்கும் செலவு சுமார் ரூ 400/-. இவ்வளவு இருந்தால் யார்தான் பிள்ளைகளை அனுப்புவார்கள்?
யூனிபார்முக்கு யார் ஒத்துவருவார்கள்?
பள்ளிக்கூடம் தான் முக்கியம் தீன் இரண்டாம் பட்சம் என்ற நிலையில் இருக்கும் பெற்றோர்கள் எப்படி தங்களது பிள்ளைகளை அனுப்புவார்கள்? Etc..
ஆனால் முடிவோ யாருமே எதிர்பார்க்கவில்லைஸ.
அல்ஹம்துலில்லாஹ் மதரஸா ஆரம்பிப்பதற்கு முன் கிடைத்த அப்ளிகேசன்கள் 80, காயல் பட்டிணம் உஸ்தாத் அபூபக்கர் கூறியது நாங்கள் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு கிடைத்த மாணவர்கள் 15-20 ஆனால் உங்களுக்கு ஆரம்பத்திற்கு முன்பே 80ஸ. மாஷாஅல்லாஹ்.
இதிலிருந்து நாங்கள் விளங்கிக் கொண்டது, பொது மக்களின் தீனின் தேட்டம் குறையவில்லை ஆனால் பொறுப்பில் இருப்பவர்கள்தான் அதனை சரிவர புரிந்துகொள்ளவில்லை மற்றும் இந்த தேட்டத்தை சரியான முறையில் பயன் படுத்தவில்லை என்பதே! பள்ளி நிர்வாகிகள், பொறுப்பில் இருப்பவர்கள் கவனிக்கவேண்டிய விசயம்.
மதராஸா ஆரம்பிக்கும் நாள் அன்று அந்த பள்ளியில் சுப்ஹு தொழுகையில் சுமார் முப்பது, நாற்பது மாணவர்கள், யூனிஃபார்ம்களுடன். சாதரணமாக சுப்ஹு தொழுகையில் சில சஃப்கள் நிற்கும் அந்த பள்ளியில் இது ஒரு மகத்தான காட்சி. மதரஸாவின் முதல் வகுப்பு சுப்ஹு தொழுகைக்குப் பின்னர் என்பதால் மாணவர்கள் சுப்ஹு தொழுகைக்கே அணிவகுத்துவிட்டனர்
இந்த மாணவர்களின் சுப்ஹு தொழுகை அணிவகுப்பு மற்ற நாட்களுக்கும் தொடர்ந்தது, அது மட்டுமல்லாமல் அது ஞாயிற்றுக் கிழமையும் இருந்ததுதான் ஆச்சரியம் ஏனெனில் ஞாயிற்றுக் கிழமை மதரஸா விடுமுறை. பெற்றோர்களுக்கோ பேரானந்தம்.
இதோ அந்த யூத பெண் அமைச்சரின் வாசகம் நினைவிற்கு வருகிறது..
கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?” இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”.
“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் : “ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்றுஎன்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.”
சகோதரர்களே விரக்தியை கைவிடுவோம்! செயலில் இறங்குவோம். நற்செயல்களில் அல்லாஹ்வின் உதவிகளை கண்கூடாக காணலாம்.
4. மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்ற மதரஸாக்களை ஏற்படுத்துதல்.
இதன் பணிகள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் நடைபெறஉள்ளது. இருக்கும் மதரஸா நல்லமுறையில் நடைபெறவும், மற்ற முஹல்லாக்களிலும் இதே போன்று ஆரம்பிக்கவும், எதிர்கால சமுதாயம் ஒழுக்கமும் ஒளியும் மிக்கதாக இருக்கவும் துஆ செய்யவும்.
பீர் முஹம்மத் (நெல்லை ஏர்வாடி)