கணிப்பு மாற கவலைப்படுங்கள்!
மௌலானா வஹிதுத்தீன் கான்
[ சுயத்தன்மை பாணி இஸ்லாமியக் குழுக்கள் செய்யும் தவறுகள், வளர்த்துள்ள பிரச்சினைகள் ஒவ்வொரு நாட்டிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக சில முஸ்லிம்கள் மற்ற மதத்தவர் முன்பு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வெட்கப்படுகின்றனர். மற்ற சமூகத்தினருடன் கூட்டாகப் பணி செய்யும் இடங்களில் தன்னை முஸ்லிம் எனக் காட்டிக் கொள்ள அச்சம் கொள்கின்றனர். மறைத்தல் புரிகின்றனர். இன்னும் சிலரிடம் சுயவெறுப்பு ஏற்பட்டு இஸ்லாத்தின் மீதான ஆர்வம் அகன்றுவிடுகிறது. இதற்குத் தீர்வு முஸ்லிம்கள் செயலில் இருக்கிறது.]
முஸ்லிம் தங்களது தொன்று தொட்ட வழக்கச் செயல்கள் மூலம் மற்றவர் முன்பு காட்டும் விதம், சிலர் வெளிப்படுத்தும் முரட்டுத்தனம் இஸ்லாம் குறித்த எதிர் சிந்தனையை முஸ்லிமற்றவர் மனத்துள் விதைத்து விடுகிறது. இஸ்லாத்தை தவறாகக் கணிக்கின்றனர்.
முஸ்லிம்களுடைய செயல்கள் இஸ்லாம் சார்ந்தவையல்ல. முஸ்லிம் கலாச்சாரமது. இஸ்லாம் கூறியதை கடைப்பிடித்து வாழ்ந்து முஸ்லிம்கள் அதனை வெளிப்படுத்தினால் எதிராளி கணிப்பு எதிர் மறையாக மாறாது. இஸ்லாம் சம உரிமை குறித்து கூறியிருக்கிறதே தவிர, ஒரு புற மேலாதிக்கம் மட்டும் கூறவில்லை.
இஸ்லாம் ஆன்மா சார்ந்த மதம். வடிவம் சார்ந்த மதமல்ல. இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு அமைதியையே கற்றுக் கொடுக்கிறது. சில முஸ்லிம்கள் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்; “மற்ற சமூகத்தவர்கள் இஸ்லாத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் இறைவனுக்கு, உண்மைக்கும் புறம்பானவர்கள்” இக்கூற்று தவறு.
ஒருவர் தான் முஸ்லிமாகப் பிறந்ததனால் மட்டும் நல்லவர் எனக் கூறிவிட இயலாது. முஸ்லிமல்லாதவராகப் பிறந்ததனால் ஒருவர் உண்மைக்கு மாறானவரும் அல்ல. இஸ்லாம் என்பது ‘கண்டு அடைதல்’. இதனை முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் இருவரில் எவரும் கண்டடையவியலும். பரம்பரை உரிமை கொண்டாடக் கூடியதல்ல எவர் ஒருவருக்கும் இஸ்லாம்.
உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வன்முறை அமைப்புகள் ‘இஸ்லாமிய ஜிஹாத்’ என்னும் பெயரில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். மற்ற சமூகத்தவர் மத்தியில் இவர்கள் போக்கு இஸ்லாம் வன்முறை மதம் என்ற பிம்பத்தை, தோற்றத்தை உருவாக்குகின்றது. இதிலிருந்து விடுபவதற்குரிய தீர்வு?
அரசாங்கம் அல்லாது தனித்து செயல்படும் மற்றவர்களுக்கு ஆயுதங்கள் தரக்கூடாது. அவ்வாறானவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.
இஸ்லாத்தின்படி அரசு மட்டுமே ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உள்ளது. அரசு அல்லாமல் இயங்குவோருக்கு ஆயுதங்கள் வைத்திருக்க உரிமையில்லை. இந்த விஷயத்தில் முஸ்லிம் அரசாங்கங்கள் உறுதி ஏற்றுக் கொள்ளவேண்டும். இராணுவம் தவிர மற்றோர் கரங்களுக்கு ஆயுதங்கள் செல்லாத வழிமுறையை கட்டாயம் நிலைநாட்ட வேண்டும்.
சிலர் கூறுகின்றனர் இஸ்லாத்தின் பெயரில் செய்யும் தீவிரவாதப் போக்குகளுக்குக் காரணம் அரசியல், பொருளாதாரம் என்று. உண்மையான காரணம் அதுவல்ல. இஸ்லாத்தை தவறாகப் புரிந்திருக்கின்றனர். அப்புரிதலின் விளைவாய் அரசியல்வாதிகள் ஆயுதங்கள் வழங்குகின்றனர். முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஆயுதம் தரும் எண்ணத்தை கைவிடவேண்டும். அனைத்து உலமாக்களும் இதற்குரிய ‘பத்வா’ வழங்க வேண்டும்.
தீவிரவாதம் இஸ்லாமியச் சட்டத்திற்குப் புறம்பானது. முஸ்லிம் அறிவு ஜீவிகள் இது குறித்து பேசவேண்டும். அனைத்து தீவிரப் போக்குகளையும் கைவிட்டு வெளிப்படையாகப் பேசவும், எழுதவும் வேண்டும். ஏதாவது கூறினால் நம்மை தாக்குவார்களோ பயம் அமைதி கொள்ள வைக்கிறது.
“ஓ” நம்பிக்கையாளர்களே நாம் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம்’’ (அல்குர்ஆன் 24:31)
குர்ஆனுடைய இந்த ஆயத்தை மனத்தில் கொண்டு முஸ்லிம் சமூகம் ஒன்று கூடி தீவிரவாதத்தை எதிர்க்கவேண்டும். முஸ்லிம் மீடியாக்களும் பங்கேற்க வேண்டும். மற்ற சமூகத்தில் நடக்கும் அட்டூழியங்களைத் தொடர்ச்சியாக அதிகப்படுத்திக் காட்டுவதால் மற்றவர்களுக்கு முஸ்லிம்கள் மீது எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் அதிகரிக்கிறது. முஸ்லிம் மீடியாக்கள் உடன் இதனை நிறுத்த வேண்டும். எதிர்மறைச் செய்திகள் கூறி எரிச்சல் படுத்துவதை விடவும், நேர்மறைச் செய்திகள் கூறலாம்.
மேற்கோளுக்கு ஒரு தகவல். இராக் மீது அமெரிக்கா குண்டு வீசியது. அனைவரும் சேர்ந்து எதிர்த்தோம். அதே அமெரிக்கா நவீன தொலைத் தொடர்பைக் கண்டு பிடித்துத் தந்தது. அது குறித்து முஸ்லிம் சமூகம் பாராட்டவில்லை. நவீனத் தொலை தொடர்பால், மேற்கத்திய நவீனத் தொழில்நுட்பத்தால் முஸ்லிம் சமூகம் அதிகப் பயனை அடைந்திருக்கிறது. நன்றி கூறவில்லை.
முஸ்லிம் பொது ஜனம் அரசியல் மோதல் பிரச்னைகளில், போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது. தமது தொழில், பணி, கல்வி, வாழ்க்கைத்தரம் உயர்த்துதல் குறித்து மட்டுமே சிந்திக்கவேண்டும். அரசியல் முன் நின்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவ்வாறு இயங்கினால் தீவிரவாத முத்திரை குத்துகின்றனர். இஸ்லாம் மட்டுமே தீவிரவாதம் புரிகிறது என்று கூறப்பட்டதன் காரணமாக ஒரு சில முஸ்லிம்கள் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சுயத்தன்மை பாணி இஸ்லாமியக் குழுக்கள் செய்யும் தவறுகள், வளர்த்துள்ள பிரச்சினைகள் ஒவ்வொரு நாட்டிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக சில முஸ்லிம்கள் மற்ற மதத்தவர் முன்பு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வெட்கப்படுகின்றனர். மற்ற சமூகத்தினருடன் கூட்டாகப் பணி செய்யும் இடங்களில் தன்னை முஸ்லிம் எனக் காட்டிக் கொள்ள அச்சம் கொள்கின்றனர். மறைத்தல் புரிகின்றனர். இன்னும் சிலரிடம் சுயவெறுப்பு ஏற்பட்டு இஸ்லாத்தின் மீதான ஆர்வம் அகன்றுவிடுகிறது. இதற்குத் தீர்வு முஸ்லிம்கள் செயலில் இருக்கிறது.
இஸ்லாம் பெயரில் நிகழும் தீவிரவாதங்களை மற்றவர்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டி இஸ்லாம் வேறு! முஸ்லிம் வேறு! மற்ற மக்கள் உணரும் பணியைச் செய்ய வேண்டும். இஸ்லாத்தை எடுத்துரைக்க வந்தோமே தவிர தீவிரவாதம் புரிய வரவில்லை. மற்ற மக்களிடம் எடுத்துரைக்க மறுத்து அமைதி காத்தல் தீவிரவாதப் போக்கை நிலைப்படுத்த ஏதுவாக அமைந்துவிடும்.
அரசியல் கோட்பாட்டுப் பொருளாக இயங்குவது தான் தீவிரவாத இஸ்லாம். இதனை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கவேண்டும். புரிதலுக்கான பயணப் பணியே மற்றவர் மனத்திலுள்ள முஸ்லிம் மீதான தவறான எண்ணத்தை அழிக்கும்.
– தமிழாக்கம் : ஏ.ஜெ. நாகூர் மீரான், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2014
source: http://jahangeer.in/