வார்த்தைக்கு அஞ்சுவதோ? ஊத்தைக் காசுக்கு கெஞ்சுவதோ?
மனித உயிர்களை மயக்கி மலிவாக்கும்
மந்தத்தன மனிதர் அவர்கள்!
சுடர்முகம் கருத்த ஊர்கள்!
போதை மருந்தால் வயிறு வளர்ப்போர்
வார்த்தைக்கு அஞ்சலாமா?
ஊத்தைக் காசுக்கு கெஞ்சலாமா?
கள்ளக்கடத்தலின் காதலர் – பணக்
காமம் கொள்ளும் கவுசியர்! கடுங்
கயமைத்தனத்தின் தோழர்கள்!
குறும்பர் இவரது நன்கொடை, விருந்துகள்
கொள்வது இங்கு கூடுமா? கொண்ட
நட்பு இறை வழியில் சேர்க்குமா?
அடுக்கு வீடுகள், அழகு விடுதிகள், செல்வம்
அனைத்தும் காக்கும் கருதுகின்றார்!
கொக்கரிப்பு எக்களிப்புடன் ஓடுகின்றார்
கொடிய பொருள் விற்று வாழுகின்றார்!
இவர்கள் முஸ்லிம் சமூகக் கண்ணியரா?
இஸ்லாம் விரும்பும் புண்ணியரா?
இஸ்லாமே வாழ்வாய் நபிவழி நாடிடும்
இனிய தீனுக்குரியவர்கள்! ஞானம் கற்றவர்கள்!
மெய்ஞ்ஞானப் பாட்டையில் சென்றவர்கள்
இமை மூடுதலிலும் ஷரி=அத்தைக் கண்டவர்கள்
இவர் செயலுக்கு கண்மூடி நிற்கலாமா?
எமக்கெதற்கு என்று எண்ணலாமா?
வேதம் தெரிந்தவர் பாதை அறிந்தவர்
வேறெங்கோ நோக்கி நின்றார் எவர்
விதியென்று நீங்கி நின்றார்!
அண்ணல் நபி வழியினைக் கண்டவர்
ஆமையாய் அடங்கலாமா? அகம்
ஊமையாய் ஒடுங்கலாமா?
உம்மத்தின் பாதுகாவலர்! ஓரணியாகி
ஒரு குரல் கொடுப்பீர்! சமூகச்
சீர்கேட்டைத் தடுப்பீர்!
நான்கு கலீபா நற்பண்பு இயல்பினை
தன் செயலால் காட்டுவீர்! முஸ்லிமிற்கு
நற்பண்பு ஊட்டுவீர்-
– சோதுகுடியான், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2014
source: http://jahangeer.in/?paged=2