இருள் நீங்காமல் வாழ்வோரை வயிற்றுக்காகப் புகழாதீர்!
ஆழச்சிந்தனையில்லாதோர், தேடல் சிந்தனையற்றோர், அறிவுத் தோண்டல் புரியாதோர், எந்த பயிர், மரம் எவ்வகை நிலத்தில், மண்ணில் விளையும் என்றறியாதவர்களாக வாழ்கின்றனர்.
நன்செய் நிலத்தில் வளரும் வாசனை மிக்க மாம்பழத்துடைய கொட்டையினை பயன்தரும் என்று பாறை நிலத்தில் விதைத்து காத்திருக்கின்றனர்.
இச்செயல், பலமில்லாத புளிய மரக்கிளையை பிடித்து ஏறுவது போன்றது. சிந்தனையில்லாதவர்கள் செய்யும் முறையற்ற செயல்கள் இவை. இந்த கருத்தை முன்வைக்கும் மூன்றாயிரம் வருடங்களுக்கு முந்தைய பாடல் இதோ.
“திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை
அருத்த மென்றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறியாதவர் காலற்றவாறே” – 202
இந்த பாடலுக்கு நேரடிப் பொருளே எழுதப்பட்டுள்ளது. மறைமுகமாகச் சித்தர் கூறும் பொருள்கள் எழுதத்துவங்கினால் விரிந்து கொண்டே போகும்.
திருத்தி – நன்செய் நிலத்தில். அருத்தம் – பயன். அறையில் – பாறையில். புளிமாங் கொம்பேறி – புளிய மரக்கிளையேறி. கருத்தறியாதவர் – சிந்தனையில்லாதவர். காலற்றவாறே – முறையற்றவாரே.
பூமிக்குள் செல்லும் ஈரம் என்றும் சேர்ந்திருக்கும். உடம்புக்குள்ளிருக்கும் உயிர் போன்றது அதுவும். இறை சூத்திரம் இது. பலம் வாய்ந்த மனம் கொண்ட மனிதராக இருந்தாலும் பொருள் தேடலுக்காக இளம் மனைவியைப் பிரிந்து சென்று வாழ்வது உண்மையான ஆன்மாவிற்கு மிகப்பெரிய கசப்பான செயலே. இக்கருத்தை முன்வைக்கும் பாடல்.
“வையகத்தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறு கொள்
மெய்யகத்தே பெரு வேம்பது வாமே” – 207
சொற்பொருள் : தேமட வாரொடும் கூடியென்-தாவும் பூமி ஈரம் என்றும் சேரும். கையகத்தேகரும் – ஆற்றல் மனம் உடம்புடையோரும். பாலை – இளம்பெண், பொருள்வழி பிரிதல், வேம்பு – கசப்பு.
பாசம், பற்றுதல், உதவுதல் கொண்டு, ஒரு கட்டிடத்தை தாங்கும் தூண் போன்று உறவாடும் இனத்தவரை தீமையின் தொந்தரவுகள் சூழ்ந்தால், தான் மரணிக்கும் முன்னதாக, பாதிப்படைந்துள்ள உறவு உயிர் மரணிக்கும் முன்பாக தக்க சமயத்தில் தீமையை அழித்து கைதூக்கிவிடவேண்டும். மனத்தெளிவும் ஊட்டணும். அத்தகையவரின் செயல் வேருக்குள் செலுத்தும் நீருக்கு ஒப்பானது. இந்த கருத்தை முன் வைக்கும் பாடல்.
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொடு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே” – 212
சொற்பொருள் : தொடர் – உறவு. ஏழு – தூண். வினையினுந்தீய – வஞ்சகத்தினும் தீமையான. கடந்தோர் – அழித்தோர். உணர்விளக்கு – மன வெளிச்சம். காலத்து – தக்க சமயத்து. தொடர்ந்து – ஒரு சேரப் பிடித்து. தூர்க்கலும் ஆமே – வேரின் நீரே.
நம்பிக்கை ஒளியை மனத்தில் கொண்டு இறைவனுக்குப் பொருத்தமாக ஒத்திருப்பவர் தெளிவுடையவர். இறைவனின் சொர்க்கலோகத்தை கைக்கொள்ளும் கொள்கையாளர். இறைப் பொருத்தம் பெறாது குற்றச் செயல்கள் புரிவோர் இறப்பிற்குப் பின் எந்த ஆதரவும், துணையுமின்றி கொடுமை நெருப்புக்குள் வீழ்ந்து அழிவார். இக்கருத்தை முன்வைக்கும் பாடல்.
“கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந்தாரே” – 266
சொற்பொருள் : கனிந்தவர் – ஒளிவிடும். கழலடி – பொருத்தம். துணிந்தவர்- தெளிவுடையவர். துறக்கமது – தேவலோகம். மலிந்தவர் – குற்றமுடையவர். மெலிந்த -கொடுமை. சினத்தினுள் – நெருப்பினுள்.
தம்முடைய வயிற்றுப் பிழைப்புக்காக அற்பத்தனமான குணம், கொள்கையுடைய செல்வந்தர் சிலரை, பலரை அவர்களது பணத்துக்காக புகழ்ந்து பேசக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் தனக்கு மரணம் என்ற ஒன்று காத்திருக்கிறது என்பதை உணர்ந்து இறைவனைப் புகழ்ந்து வாழவேண்டும். அந்த வாழ்க்கை, வேடன் விடும் அம்பு சரியான இலக்கை அடைவது போன்று இறை இலக்கை அடைய உதவும். இக்கருத்துக்குரிய பாடல்.
“செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வெனும்
புல்லறிவாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங்கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறியாமே” – 269
சொற்பொருள் : வாழ்வு – ஜீவனம். புல்லறிவாளர் – அற்பத்தனமானவர். போற்றிப் புலராமல் -இருள் நீங்காமல் வாழ்வோரைப் புகழாமல். இல்லங்கருதி – இறப்பை நினைத்து. ஏத்து -போற்று. வில்லி – வேடன். விற்குறி அம்பின் இலக்கு.
3,000ம் வருடங்கள் முன்பு வாழ்ந்த திருமூலர் சித்தரின் திருமந்திரத் தொகுப்பு இரண்டாம் தந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடல்கள். உரைகள் எதனிலிருந்தும் எடுக்கப்பட்டவையல்ல. சுயஉரை.
-ஜெ. ஜஹாங்கீர், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2014
source: http://jahangeer.in/?paged=2