சொக்க வைக்கும் வாழ்க்கையின் வலக்கரம்!
புன்னகைத்துக் கொண்டே
புலர்ந்தது பொன்நாள் – தன்னை
அலங்கரித்துத் தானே
அலர்ந்தது அந்நாள்!
கண்டு வந்த கனவுகளெல்லாம்
கைகூடிய சுபவேளை
கல்யாணச் சேலையில் நீ
கற்கண்டு ஆலை
துப்பட்டி முக்காட்டில்
தூயவள் உன்முகம்
மல்லிகைப் பூவுக்குள்
ரோஜாப்பூப் புதையல்
வலக்கரம் பிடித் தென்னோடு
வாழவந்த நாள் முதல்
வாழ்க்கையும் எனக்கு
வசப்பட்ட தென் னன்பே
கல்யாண நாள்முதல்
காதலித்து வாழும்நான்
காணாத பொழுதுகளில்
பேதலித்துப் போகின்றேன்
கணினி கருவறைபோல் என்
காதலைச் சேமித்தாய்
தந்தை எனும் மென்னுயிரைப்
பதிவிறக்கம் செய்து தந்தாய்
ஆணென்று என்னை
அறிவித்தது உன் தாய்மை
தேனென்று வாழ்வை
தெரிவித்தது உன் நேர்மை
விடிகின்ற நாட்களெல்லாம்
விழிக்கின்றேன் உன் முகத்தில்
விழிகளுக்குள் எனைவைத்து
வீடு விருத்தி செய்கின்றாய்
என் பெயரை அருமையாய்
யாராரோ அழைத்தாலும்
உன் மகளின் தந்தை என
நீ விளிக்க உளம் ரசிக்கும்
தடுமாறி விழநேர்ந்தால்
தாங்கிநீ தோள்தருவாய்
இடம் மாறி வாழும்போதும்
தொடராக உடன் வருவாய்
ஆலம் விழுதுகள் தொங்க
அகிலத்தில் விருட்சமானேன்
நீர் உரிஞ்சி நிரம்பத் தரும்
வேர் அன்றோ நீ எனக்கு
கவலைகள் எத்தனையோ
கனம்கொண்டு அழுத்தினாலும்
கவனமாய்க் கரை சேர்த்த
கப்பலன்றோ நீ எனக்கு
மேக மெனும் புனைபெயரில்
மிதக்கின்றது மழை
மின்னலில்லா இடியில்லா மென்
சாரலன்றோ நீ எனக்கு
வார்த்தைகளைக் கூர் சீவி
வீழ்த்துகின்ற உலகினிலே
உயிரெடுத்து உடுத்தி வைத்த
கவசமன்றோ நீ எனக்கு
உன்னைக் கைதுசெய்து
உளச்சிறையில் அடைத்து வைத்தேன்
கைதியின் ராஜ்ஜியம்தான்
காலமெல்லாம் நடக்கிறது
உலகைப் படைத்தவனே எனக்கு
உன்னையும் கொடுத்தான்
அன்னையைத் தவிர்த்த உலகில்
உன்னை யார் அன்பில் வெல்ல?
காலங்கள் கடந்து போகும்
கனவெல்லாம் காரியமாகும்
கண்மூடும் கனம் வரை-உன்
கைகோர்த்து நான் நடப்பேன்!
-ஷப்பீர்
source: http://adirainirubar.blogspot.ae/2012/02/blog-post_15.html
அருமையான இக்கவிதையை ரசித்துப்படித்திருப்பீர்கள்…!
பொக்கிஷமாக, அருளாலன் அல்லாஹ் ஆண்வர்க்கத்துக்கு அருட்கொடையாக வழங்கியிருக்கும் பெண்ணிடம் வரதட்சணை கேட்பது கொடுமையிலும் கொடுமை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் அருளை மதிக்கத்தெரியாத மூடர்களாக பதிவேட்டில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்று ஆசை கொள்பவரா நீங்கள்?!
இக்கவிதையை ரசித்துப்படிக்கும் எவரும் வரதட்சணை வாங்கியிருந்தால், அதனை திருப்பிக் கொடுத்து விடுங்கள், அல்லாஹ் அருள் புரிவானாக. – adm.