ஒரே கையெழுத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுவிடுவதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை!
அன்புள்ள முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு,
பெண்கள் தெருவில் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதை இந்த வாரம் வெளியாகியிருக்கும் கொலைச் செய்தி உணர்த்துகிறது. உயர்கல்வி பெற்ற பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி சென்னையில் அதி நவீன தொழில்நுட்பப் பூங்கா(!)வில், தன் கணிணி அலுவலகத்திலிருந்து பஸ் நிலையத்துக்கு பத்திரமாக நடந்து செல்ல முடியாமல் போக்கிரிகளால் சீண்டப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாகிக் கொடூரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார். சீண்டல், கொலை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் மது.
தமிழ்நாட்டில் மதுக் கடைகள் இருக்கும் எந்தப் பகுதியிலும் பள்ளிச் சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை தைரியமாக நடமாடவே முடியாது. அருவெறுப்போடும், பயத்தோடும், மனதைக் கல்லாக்கிக் கொண்டும்தான் ஒவ்வொரு பள்ளிச் சிறுமியும் தினமும், காலையிலேயே டாஸ்மாக் கடை முன்னால் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்கும் தமிழர்களை தாண்டிச் செல்கிறார்கள். அப்படிக் கிடப்பவர்களில் சில சமயம் அந்தப் பள்ளிச் சிறுமி. தன் ஆசிரியரையோ வகுப்பு சகமாணவனையோ கூட பார்க்க நேரும் வாய்ப்பும் அவலமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மதுவிலக்கு சட்டத்தின் கீழேயே அரசே மது விற்கும் ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடுதான். மலிவு விலையில் உணவகத்துக்கு அம்மா உணவகம், குடிநீருக்கு அம்மா குடி நீர், இனி அம்மா திரையரங்கம், என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழும் உங்கள் விஸ்வாசிகளுக்குக் கூட, உங்கள் அரசு மிக அதிக எண்ணிக்கையில் நடத்தும் ஒரே தொழிலான மதுக்கடைகளுக்கு அம்மா ஒய்ன்ஸ் என்று பெயர் சூட்டத் தயக்கமாகவே இருக்கிறது.
தன் பிள்ளைக்கு மது ஊற்றிக் கொடுத்து அவன் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்து குடும்பச் செலவுக்கு பயன்படுத்தும் எந்தத் தாயையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. அதனால்தான் என்னால் உங்களை அம்மா என்று அழைக்கவே இயலாது. ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமானம் மட்டும் உங்கள் அரசுக்கு இதிலிருந்து வரவேண்டுமானால், தினசரி எத்தனை தமிழர்கள் தவறாமல் மது குடிக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? சுமார் ஒரு கோடி பேர்!
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 65 ஆயிரம் சாலை விபத்துகள். இதில் 12 ஆயிரம் சாவுகள். இப்படி மாதாமாதம் ஆயிரம் பேர் கொல்லப்படும் விபத்துகளில் 70 சதவிகிதம் விபத்துகள் மதுவினால் ஏற்படுபவை. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியது, ஏன் பெருகியது என்பதை நீங்கள் பெருமையோடு சென்னையில் உருவாக்கியிருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்களிடம் தயவுசெய்து கேளுங்கள்.
மக்களவை தேர்தலுக்காக நீங்கள் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும், இந்த வாரம் அந்நிய தொழில் முதலீடாக ஐந்தாயிரம் கோடி ரூபாய்களுக்கு தொழிற்சாலைகள் தொடங்கப்படவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறீர்களே. இந்த வேலைகளுக்கான இளைஞர்கள் எங்கே எந்த நிலையில் இருக்கிறார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் ஐ.டி.ஐகள் எல்லாம் மூடப்பட்டுவருகின்றன. சேருவார் இல்லை. பிட்டர், வெல்டர், பிளம்பர், எலெக்றீஷியன், மேசன், கார்ப்பெண்டர் போன்ற தொழிலாளிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் மதுதான். குடிக்க ஆரம்பிக்கும் வயது 11 ஆகிவிட்டது. உங்கள் அரசின் கஜானாவை நிரப்பும் ஒரு கோடி குடியர்களில் டீன் ஏஜ் இளைஞர்கள் ஏறத்தாழ சரிபாதி.
தமிழக இளைஞர்களையெல்லாம் குடிகாரர்களாக ஆக்கிய பெருமை, உங்களுக்கு மட்டுமே உரியது என்று நிச்சயம் நான் சொல்லமாட்டேன். அதைத் தொடங்கி வைத்தவர் உங்களுக்குப் பிரியமான அரசியல் எதிரி கலைஞர் கருணாநிதிதான். 1972ல் அவர் மதுவிலக்கை நீக்கியதில் முதல் பலி அவர் மகனேதான். உங்கள் வயதுதான் அவருக்கும். அப்போது 24 வயது இளைஞராகவும், பின்னாளில் சிறந்த பாடகராகவும் வரும் ஆற்றலுடனும் இருந்த முத்துவின் வாழ்க்கை மதுப் பழக்கத்தால்தான் சீர்குலைந்தது. கலைஞர் கருணாநிதி அரசியலில் தொடங்கிவைக்கும் ஒவ்வொரு தவறையும் முறைகேட்டையும். பல மடங்கு பிரும்மாண்டமானதாக செய்யும் ஆற்றலும் உறுதியும் உடையவர் நீங்கள். வெறும் 3000 நூலகங்களே இருக்கும் தமிழகத்தில், 7500 மதுக்கடைகளை அரசின் மூலமே திறந்து. வீட்டுக்கொரு முத்துவை உருவாக்கியிருக்கிறீர்கள்.
எங்கிருந்து அவர்களுக்கு பணம் வருகிறது ? இந்தச் சுமையையெல்லாம் தமிழகப் பெண்கள்தான் சுமக்கிறார்கள். குடும்பச் செலவையும் கவனித்துக் கொண்டு, கள்ளானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் என்று சகித்துக் கொண்டு அன்றாட சித்ரவதை வாழ்க்கையை வாழும் இந்தப் பெண்களை தயவுசெய்து ஒரு முறை இந்த மகளிர் தினத்தில் சிந்தித்துப் பாருங்கள்.
டெல்லி ஆட்சியில் உங்கள் கட்சி அமர்ந்தால், உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நாவைப் பொது வாக்கெடுப்பு நடத்தச் செய்து தனி ஈழம்பெற்றுத் தருவேன் என்று தேர்தல் அறிக்கையில், வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டும் நீங்கள், தயவுசெய்து கூரை ஏறிக் கோழி பிடித்தால் போதும். உங்கள் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர் வாக்கெடுப்பு நடக்கும்போது நடக்கட்டும். உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட தமிழகத்தில், மக்களிடையே மதுக் கடை வேண்டுமா வேண்டாமா என்று ஒரு பொது வாக்கெடுப்பை உடனடியாக நடத்த நீங்கள் தயாரா?
அப்படி நடத்தினால், நூற்றுக்கு 99 சதவிகித பெண்களும் நூற்றுக்கு 90 சதவிகித ஆண்களும் நிச்சயம் மதுக்கடைகள் வேண்டாம் என்றே சொல்வார்கள். குடிப்பவர்களில் கூடப் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்வார்கள். எளிதாகக் கிடைப்பதால் குடிப் பழக்கத்துக்குள் நுழைவோரே அதிகம். எளிதாகக் கிடைப்பதால் விட்டுவிடமுடியாமல் பழக்கத்தில் சிக்கித் தவிப்போரே கணிசம். அத்தனை பேரையும் நீங்கள் மனது வைத்தால் மீட்கமுடியும்.
உங்கள் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ முறை நீங்கள். முதலில் எடுத்த முடிவுக்கு நேர் எதிராக இன்னொரு முடிவை எடுத்த வரலாறு உண்டு. ஒரே கையெழுத்தில் ஒரு லட்சம் அரசு ஊழியரை வேலை நீக்கம்செய்த நீங்கள், இன்னொரு கையெழுத்தில் அத்தனை பேரையும் திரும்ப எடுத்தீர்கள். கோவில்களில் விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்து உடனே திரும்பப் பெற்றீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில் தனி ஈழத்தையும் புலிகளையும் கடுமையாக எதிர்த்த நீங்கள், இன்று ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு கோருகிறீர்கள். ராஜீவ் கொலைவழக்கின் தண்டனைக் கைதி நளினியை, பரோலில் விடக் கூடக் கடுமையாக மறுத்து வந்த உங்கள் அரசு, அடுத்த சில மாதங்களிலேயே நேர் எதிர் நிலை எடுத்து, அவரையும் மற்றவர்களையும் விடுதலையே செய்ய முன்வந்திருக்கிறது.
நீங்கள் ஒவ்வொருமுறையும் நிலைப்பாட்டை மாற்றியது எல்லாமே, தேர்தல் அரசியலுக்காக; ஓட்டுக்காக என்று நான் உட்பட உங்கள் விமர்சகர்கள் கருதினாலும்,பரவாயில்லை – பொய்மையும் வாய்மையிடத்தே, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின், என்றே கருதுகிறோம். ஒன்றை எந்த நோக்கத்துக்காக நீங்கள் செய்தாலும், அந்த செயல் பொது நன்மைக்கு உதவுமென்றால் ஏற்போம்.
அந்த வரிசையில் இப்போது உங்களுக்கு ஓட்டு அரசியலில், உங்கள் எதிரிகளை நூற்றுக்கு நூறு முறியடித்து மக்களவை தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று, டெல்லி ஆட்சியை வசப்படுத்த ஒரு யோசனையை முன்வைக்கிறேன்.
இந்த மார்ச் 31டன் இந்த நிதியாண்டு முடிகிறது. ஒரே கையெழுத்தில் நீங்கள் இந்த நிதியாண்டுடன் டாஸ்மாக் மதுக்கடைகளை அனைத்தையும் மூடி உத்தரவிட்டு, பூரண மதுவிலக்கை ஏற்படுத்திவிடலாம். அதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை. கள்ளச் சாராயம், விஷச் சாராய சாவுகள் பெருகும் என்ற பூச்சாண்டியை, சில அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் மது ஆலை அதிபர்களும் கிளப்புவார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த சுமார் 30 வருடங்களில் அப்படி கள்ளச் சாராயத்தால் செத்தவர்கள் எண்ணிக்கை மொத்தமாகவே பத்தாயிரம் பேர் கூட கிடையாது. ஆனால் மதுவால் சாலை விபத்தில் சாவோர் ஆண்டு தோறும் சுமார் எட்டாயிரம் பேர். நோயால் சிதைவோர் பல லட்சம் பேர். அவர்களால் சீரழியும் குடும்பங்கள் லட்சக்கணக்கானவை.
நீங்கள் மதுக் கடைகளை மூட உத்தரவிட்டால், எந்த டாஸ் மாக் ஊழியரையும் வீட்டுக்கு அனுப்பத் தேவையில்லை. அத்தனை கடைகளையும் பார்களையும், அம்மா உணவகங்களாகவோ, மருந்தகங்களாகவோ, குடிநீர் கடைகளாகவோ மாற்றிவிடலாம். மக்களுக்கும் லாபம். ஊழியர்களுக்கும் இழப்பில்லை.உங்களுக்கோ மிகப் பெரும் ஆதரவு, எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைக்கும். குறித்துவைத்துக் கொள்ளுங்கள். மீதி அத்தனை விஷயங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தின் 50 சதவிகித வாக்காளர்களான எல்லா பெண்களும் உங்கள் அணிக்கே வாக்களிப்பார்கள். தமிழக அரசியல் வரலாற்றில், அ.இ.அ.தி.மு.க வரலாற்றில் இதுவரை பெற்றிராத வாக்கு சதவிகிதங்களுடன் டெல்லிக்குச் செல்வீர்கள். ஒவ்வொரு ஏழைத் தமிழ்ப் பெண்ணும் நிம்மதியாக இரவு உறங்கச் செல்வாள்.
தமிழகப் பெண்களுக்கெல்லாம் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாக, மார்ச் 8 மகளிர் தினத்தன்று இந்த அறிவிப்பை உங்களிடம் எதிர்பார்க்கலாமா? மறுபடியும் தரைக்கு வந்து தெருவில் மக்களோடு மக்களாக நடந்து சென்று ஒரு மகளிர் பேரணி நடத்தி இதை அறிவிப்பீர்களா?
இது வரை என் எந்தக் கடிதத்துக்கும் பதிலளிக்காத நீங்கள் இதற்கேனும் ஒரு பதிலை உங்கள் செயல்மூலம் அளிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
ஞாநி
குடியால் பாதிக்கப்பட்ட
உறவினர்கள், நண்பர்கள் நிறைந்த ஒரு தமிழன்.
(கல்கி மார்ச் 1, 2014)
நன்றி : ஞாநி