சென்னை புதுக் கல்லூரி – THE NEW COLLEGE
சென்னையில் உள்ள பழமையான கல்லூரிகளில் சென்னையின் முக்கியமான கல்லூரிகளின் வரிசையில் புது கல்லூரிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு என்று அங்கு பயின்றவர்கள் கூறுகிறாகள்.
அந்த கல்லூரியே பற்றி இங்கே பார்ப்போம்
இதன் பெயரிலேயே புதுமை புகுந்து இருக்கிறது. ஆம்.. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட அப்போதும் இது புதுக் கல்லூரியாகத் தான் நிலைத்திருக்கும். சென்னையின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ஆயிரம் விளக்குப் பகுதியையும், இராயப் பேட்டை சந்திப்பையும் இணைக்கும் பீட்டர்ஸ் சாலையில், இக்கல்லூரி (MEASI) அமைப்பினரால் கடந்த 1951 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
சென்னை பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற பழமையான கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இன்றும் அரை நூற்றாண்டுகளை கடந்த கம்பீரத்தோடு இளமையோடு வீற்றிருக்கிறது.
தமிழகத்தில் கல்விக்கு ஒளியேற்றும் வகையில் உயர் நோக்கில் துவங்கப்பட்டு, வெற்றி நடை போட்டு வரும் இந்த புதுக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த 12 இளங்கலை பட்டங்கள், 14 முதுகலை பட்டங்கள், 6 முனைவர் பட்டங்கள் என்று 2007 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று சிறப்புற செயலாற்றி வருகிறது.
இது தவிர மாலை கல்லூரியும் ஆயிரக்கணக்கான மாணவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் New College Institute of Management என்கிற மேலாண்மை படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், MEASI Institute of Information Technology என்கிற கணினி தொழில் நுட்பத்திற்கான கல்வி கூடம்,
MEASI Academy of Architecture என்கிற கட்டிடக் கலை வரைபட வல்லுனர்களை உருவாக்கும் கல்விப் பாசறை போன்ற அத்தனையும் ஒரே குடையின் கீழ் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இன்றைய புதிய தலைமுறையினரை உருவாக்கியதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மிகுதியானவர்கள், புதுக்கல்லூரியிலேயே பயின்று பட்டம் பெற்று இருக்கிறார்கள் பசுமை நிறைந்த கல்லூரியின் நினைவலைகளோடு, பாடித் திரிந்த இலட்சக்கணக்கான சுதந்திரப் பறவைகளான இதன் முன்னாள் மாணவர்கள், இன்று உலகம் முழுவதும் அறிவில் வார்த்தெடுத்த, தங்கள் கால் தடங்களை பதித்து, சாதனைகள் பல படைத்து வருகிறார்கள்.
இக்கல்லூரியிலுள்ள மஸ்ஜிதின் மினாரா மதினாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியின் அதே மினாரா அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எழிலான வகுப்பறை கட்டிடங்கள், கை தேர்ந்த பேராசிரியப் பெருமக்கள், விசாலமான விளையாட்டு மைதானம், சுற்றிலும் அசைந்தாடும் நிழல் தரம் மரங்கள், கலகலப்பான கல்லூரி விடுதி, சுவை மிகுந்த கேரளத்து ‘குட்டன்’ சேட்டனின் கனிவான கவனிப்பில் சாப்பாடு என்று என்றும் பொலிவுடன் புதுக் கல்லூரி இளமை மாறாமல் காட்சியளிக்கிறது.
புதுக் கல்லூரி தன் மாணாக்கர்களுக்கு புத்தக பாடங்கள் மட்டுமின்றி, வாழ்க்கை தத்துவங்களையும், பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும், புத்தாக்கம் புனையும் யுக்திகளையும், புடம் போட்டிருக்கிறது. இன்றும் பலர் சென்னை புதுக் கல்லூரியில் பயின்று பட்டம் பெறுவதை பெருமையாகவே கருதுகின்றனர்.
நன்றி : இன்று ஒரு தகவல்