நம்மை நாம் “முஸ்லிம்கள்” என்றே அழைத்துக் கொள்ள வேண்டும்
இப்னு ஹத்தாது
‘ஹுவ சம்மாக்குமுல் முஸ்லிமீன்’ (அல்குர்ஆன் 22: 78)
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டதாக பல குர்ஆன் தர்ஜுமாக்களிலும், தப்ஸீர்களிலும் காணக் கிடைக்கிறது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோரின் நம்பிக்கையும் இதுவேயாகும்.
ஆனால்,
”நான் அவனுக்கு (முற்றிலும் வழிபட்ட) “முஸ்லிம்”களில் (ஒருவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன். (என்று நூஹ் அலைஹிஸ்ஸலாம் கூறினார்) (அல்குர்ஆன் 10 : 72)
காலங்காலமாக அறிஞர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எழுதி வைத்திருக்கிறார்கள், மக்களிடம் நடைமுறையில் இருக்கிறது என்ற மாத்திரத்தில் அது உண்மையாகிவிடாது – மார்க்கமாகி விடாது. குர்ஆனும் உண்மை ஹதீதுகளும் அக்கூற்றை ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நாம் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள முடியும்.
நபித் தோழர்கள், தாபியீன்கள் “ஹுவ” என்று இந்த இடத்தில் (அல்குர்ஆன் 22 : 78) வரும் பதத்திற்கு என்ன பொருள் கொடுத்தார்கள் என்று பார்த்த பொழுது பலர் “ஹுவ” என்ற இந்த இடத்தில் உள்ள பதம் அல்லாஹ்வையே குறிக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, முஜாஹித், அதா, ழஹ்ஹாக், கதாதா, முகாதில் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர் இக்கருத்தையே அறிவித்துள்ளார்கள்.
“ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் மன்னிப்பு கேட்டார்கள்”, என்ற இட்டுக் கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதில் வரும், அறிவிப்பாளரான அப்துர் ரஹ்மான் இப்னு ஜைது இப்னு அஸ்லம் என்ற பலஹீனமான நபரின் சொந்தக்கருத்தே ‘ஹுவ’ என்ற பதம் இங்கு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்” என்பதாகும்.
ஆக பலஹீனமான ஒரு கருத்தே நீண்ட காலமாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்திருக்கிறது. இப்படித் தான் மார்க்க விவகாரங்களில் உண்மையான விஷயங்கள் இருக்க பலஹீனமான விஷயங்களே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஆக அல்லாஹ்வால் சூட்டப்பட்ட “முஸ்லிம்” என்ற பெயரைக் கொண்டு நம்மை அழைத்துக் கொள்வதில் நாம் பெருமைப்பட வேண்டும்.
மேலும், “அவனுக்கு யாதோர் இணையுமில்லை. இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே முஸ்லிம்களில் நான் முதன்மையானவன்”, என்று (நபியே!) சொல்வீராக! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 6 : 163)
“நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம்” என்று குர்ஆன் (2:132) உபதேசிக்கிறது.
“அல்லாஹ் அளவில் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொல்பவரை விட அழகிய வார்த்தைக் கூறுபவர் யார்?” (குர்ஆன் 41:33)
இவ்வாறு அல்லாஹ் சொல்வதன் மூலம், நபிமார்களுடைய தாவத்துடைய பணியைச் செய்பவர்களும், பிரச்சாரப் பணியுடன் நல்ல அமல்கள் செய்து “நஜாத்” பெரும் கூட்டத்தில் இருப்பவர்களும் தங்களை “முஸ்லிம்கள்” என்றே அழைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் அழகாக உபதேசம் செய்கிறான். அல்லாஹ்வின் அழகிய உபதேசத்தை ஏற்று நடந்து, அவனது திருப்பொருத்தத்தைப் பெறுவோமாக! ஆமீன்!
source: http://annajaath.com/?p=130