எல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே!
அதிகமாக பேராசைப் பட்டால் அது அழிவில்தான் முடியும். படிப்பினைக்கு ஒரு குட்டிக்கதையை பார்ப்போமா…?!
“இன்று மாலை சூரியன் மறைவதற்குள் நீங்கள் ஓடி முடிக்கும் நிலம் முழுவதும் உங்களுக்கே சொந்தம். ஆனால் சூரியன் மறைவதற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திரும்பி வந்துவிட வேண்டும்” என்று ஒருவர் அறிவித்தார்.
பேராசைக்காரன் ஒருவன் ஓடினான் ஓடினான்… கண்ணை மூடிக்கொண்டு ஓடினான். நேரம் முடியப் போவதை உணர்ந்து திரும்ப ஓடி வந்தான். சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.
சூரியன் மறைவதற்கு சில வினாடிகளே இருந்தன. இவனும் குறிப்பிட்ட இடத்தை தொடுவதற்கு கொஞ்ச தூரமே இருந்தது. இன்னும் ஒரு வினாடி தான்… மூச்சை பிடித்துக் கொண்டு ஓடினான். சூரியனும் மறைந்தது. அவன் வெற்றி பெற்று விட்டதாகவும், அவன் ஓடிய நிலம் முழுவதும் அவனுக்கே சொந்தம் என்று அறிவித்தார்கள். ஆனால் பரிதாபம், அதை கேட்க அந்த மனிதன் உயிரோடு இல்லை. மூச்சுத்திணறி இறந்து கிடந்தான். இதுதான் உலகம்.
எல்லாம் எனக்கே எனக்கே என்று அலையாதே. இதே கருத்தை திருக்குர்ஆனின் அத்தியாயம் 102 (அத்தகாதூர் சூரா) 1-8 வசனங்கள் மூலம் இறைவன் நமக்கு தெளிவு படுத்துகிறான்.
”செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 102: 1-8)