திருமண பதிவு செய்ய இந்தியா செல்லத் தேவையில்லை!
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களின் திருமணப் பதிவு சான்றிதழைப் பெறலாம் என்ற புதிய நடைமுறையை புதுடெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பும்போது இந்தியாவிற்கு நேரில் வர இயலவில்லை என்றால் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களின் திருமணப் பதிவு சான்றிதழைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளளது.
கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு புதுமணத் தம்பதியருக்கான மனுவை விசாரித்துக் கொண்டிருக்கும்போது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரவீந்தர் சட்டா என்பவரின் மகள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டக்லஸ் கல்லூரியில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கின்றார். அவரது கணவரும் அங்கு பணி புரிந்து கொண்டிருக்கின்றார். இருவருக்கும் இந்தியா வருவதற்கு விடுமுறை கிடைக்காத நிலையில் அவர்களின் திருமணத்திற்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்மதம் அளிக்குமாறு அவரது தந்தை மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கான விசாரணையின் போது நீதிபதி இதனை ஏற்றுக்கொண்டார்.
தொழில்நுட்பம் நவீனமாக மாறியுள்ள இந்தக் காலகட்டத்தில் தொலைதூரத்தில் இருக்கும் இந்தத் தம்பதியரின் அதிகாரம் பெற்ற நீதிமன்ற வழக்கறிஞர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் இந்து திருமண சட்ட பதிவு உத்தரவாளர்களிடம் குறிப்பிட்டார். திருமணப் பதிவாளரும் இதே முறையில் அவர்களுடன் உரையாடி தன்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.
இதுமட்டுமின்றி, தூதரகங்களின் மூலம் பெறப்படும் அங்கீகாரங்களையும், கையெழுத்துகளுக்கான அடையாளங்களையும் உறுதி செய்ய வீடியோ கான்பரன்சிங் இணைந்த புதிய தொழில்நுட்பத்தை அரசாங்கம் கண்டறியலாம் என்றும் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. சட்ட விதிமுறைகள் மாறிவரும் நவீனத் தொழில்நுட்ப முறைக்கேற்ப மாறவேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.