கைக்குள் பிரபஞ்சம்
அரபு நாடுகளில் தோன்றிய ஜனநாயக இயக்கங்களுக்கு பெருந்துணை புரிந்தவை இணைய தளங்கள்தான். அவற்றை உருப்படியான வகையில் பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.
முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஒற்ரங்கசீப் தக்காணத்தில் போரிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் காலமாகிவிட்டார் என்ற செய்தி தலைநகர் தில்லிக்குப் போய்ச் சேர மூன்று மாதங்களாயின. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சாதனங்களெல்லாம் வந்து விட்ட பிறகு இப்படி செய்திகளைத் தாமதப்படுத்த முடியாது. ஒரு சம்பவம் நிகழும் போதே அதைப் பற்றிய செய்திகள் விரிவான படங்களுடன் உலகெங்கும் பரவி விடுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெறுவதன் முக்கியத்துவத்தை அரசுகளும் தொழில்துறையினரும் பங்குச்சந்தை வியாபாரிகளும் உணர்ந்தேயிருக்கிறார்கள். வானொலி, கம்பித் தந்தி, கம்பியில்லாத் தந்தி போன்ற புதுப்புனைவுகள் விரைவான செய்திப் பரிமாற்றத்துக்கு உதவுகின்றன.
டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானபோது வானொலித் தந்தி மூலம் மற்ற கப்பல்கள் செய்தியறிந்து உதவிக்கு ஓடி வந்ததால் பல நூறு மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
வார்ட் கன்னிங்ஹாம் என்பவர் உருவாக்கிய விக்கி என்ற மென்பொருள், எல்லாத் தரப்பு மக்களும் கூடி, பங்கு கொண்டு, ஒத்துழைத்து உலகளாவிய விக்கிபீடியா என்ற தகவல் களஞ்சியத்தை உருவாக்க வழி செய்திருக்கிறது. அதனாலேற்பட்டுள்ள காரிய சாத்தியங்கள் விரிவானவை; எண்ணற்றவை; மகத்தானவை.
வானில் உலவும் செயற்கைக்கோள்கள் பெருந்தொலைவில் இருந்து கொண்டு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்கிறவற்றைக் கண்காணிக்கின்றன. ஆனால் ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், விக்கிபீடியாவும் தரைத்தளத்தில் ஒவ்வொரு தெருவிலும் சந்திலும் நிகழ்கிற சம்பவங்களை ஒளிப்படங்களாகவும், உரைகளாகவும் பகிரங்கப்படுத்துகின்றன.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, என்சைக்ளோபீடியா அமெரிக்கானா போன்ற வர்த்தக ரீதியிலான தகவல் தொகுப்புகள் பெரும் நிபுணர்களாலும் வல்லுநர்களாலும் உருவாக்கப்படுகிறவை. ஒவ்வொரு தகவலும் பலமுறை சரிபார்க்கப்பட்டே அச்சாகும். அதற்கு பெரும் பொருள் செலவும் உழைப்பும் நிர்வாக அமைப்பும் தேவை.
எனவே பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் அவற்றின் பதிப்புகள் வெளிவரும். அவை சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு விலையுயர்ந்திருக்கும். ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாடுகளின் அரசியல், பொருளாதார நிலைமைகளும் பெயர்களும் கூட மாறி விடுகின்றன. இந்த நிலையில் ஒரு புதுப் பதிப்பு வெளியான அன்றே அது காலம் கடந்ததாகி விடுவது தவிர்க்க முடியாததாகிறது.
விக்கிபீடியா இந்த அம்சத்தில் சிறப்பானது. எங்கேயும், எதிலேயும் ஏற்படுகிற மாற்றங்கள் அக்கணமே பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகின்றன. உலகளாவிய வலைப் பின்னலான இணையதளம் சாமானியர்களைக்கூட படைப்பாளிகளாக மாற்றிவிட்டது.
யார் வேண்டுமானாலும் தனது கருத்துகளையும் தகவல்களையும் ஒப்பீடுகளையும், விருப்பமான கொள்கைகளையும் விமர்சனங்களையும் உலக மக்களின் முன் வைக்க முடிகிறது. படங்களாகவும் உரைகளாகவும் இசையாகவும் தமது படைப்புகளை வெளியிட வாய்ப்புக் கிடைக்கிறது.
அவற்றை எல்லாரும் இலவசமாகவும் நிபந்தனையில்லாமலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எல்லாரும் அவற்றை ரசிப்பதுடன், அவற்றை விமர்சிக்கவும், கூட்டிக் கழிக்கவும், செம்மைப்படுத்தவும், தவறுகளைத் திருத்தவும் முடியும்.
இத்தகைய பின்னூட்டங்கள் நேர்மறையானவையாக இருக்கும்போது, படைப்புகளும் படைப்புத் திறன்களும் தரத்தில் மேம்படுகின்றன. வர்த்தக நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு தமது ஆத்ம திருப்திக்காகப் படைப்பாளிகளாக மாறும் சாமானியர்களுக்கு விக்கிபீடியா பொன் விளையும் பூமியாக ஆகியுள்ளது.
தமது மேதைமையைப் பணமாக்கும் நோக்கத்துடன் அறிவுசார் உரைகளை வெளியிடும் அறிவுஜீவிகளுடன் சமமாக நின்று சாமானியர்கள் எந்த ஒரு தலைப்பிலும் நம்பகமான, நேர்மையான, நிரூபிக்கக் கூடிய தகவல்களை உலகின் முன்வைக்க முடிகிறது.
மற்றவர் படைப்புகளில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் சம்பாதித்து பிரபலமாக விழையும் பல நக்கீரர்கள் முனைந்து பாடுபடுவதால் விக்கிபீடியாவில் பதிவாகும் தகவல்கள் தவறாக இருக்குமானால், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விடுகின்றன. இந்த வகையில் மாமேதைகளும் சாமானியர்களுடன் தோளோடு தோள் நின்று விக்கிபீடியாவின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உயர்த்துகிறார்கள்.
ஒரே துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் தத்தம் கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் உலகெங்கிலுமுள்ள அத்துறை ஆய்வர்களுடன் பகிர்ந்து கொண்டு தமது ஆய்வுகளை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
கல்வியாளர்கள் அன்றைய தகவல்கள் வரை இடம்பெறுகிற வகையில் சிறப்பான பாடநூல்களைப் படைக்க முடிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் கூட விக்கிபீடியா வெளிவருவது மேல்நாட்டுச் சாத்திரங்களை நம் நாட்டாரின் பார்வையில் பட வைக்க உதவுகிறது.
செய்திப் பரிமாற்றம் என்பதில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை இமாலயச் சாதனை படைத்துள்ளன. புயல், நில நடுக்கம், ஆழிப்பேரலை போன்ற பேரிடர்களானாலும் சரி, அரசு மாற்றம், உள்நாட்டுக் கலகம், புரட்சி போன்ற அரசியல் நிகழ்வுகளானாலும் சரி உடனுக்குடன் படங்களாகவும் உரைகளாகவும் பதிவேறி விடுகின்றன.
ஓர் அலைபேசி வைத்திருப்பவர்கள்கூட தம் கண்ணில் படுகிற விபரீதங்களைப் படமெடுத்து உலகெங்கும் பரப்பி விடுகிறார்கள். அரசியல் பிரபலங்களின் அடாவடிச் செயல்கள் இவர்களிடமிருந்து தப்புவதில்லை. பேனாவிலும் பித்தான்களிலும் ஒளித்து வைக்கப்பட்ட ஒளிப்படக் கருவிகள், தாதாக்களுக்கும் ஊழல் மன்னர்களுக்கும் தூக்கத்தைப் போக்கிவிட்டன.
இவ்வாறான சாதனங்களை பொதுமக்கள் பொது நலன்களைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்த முடியும். கடற்கரை மணலையும் கருங்கற் பாறைகளையும் சூறையாடுகிறவர்களை உடனுக்குடன் காட்டிக் கொடுக்க முடியும். காவல்துறையினரின் கண்காணிப்புக் காமிராக்களைப் போல நம் ஒவ்வொருவரின் அலைபேசியும் குற்றச் செயல்களை பதிவு செய்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவலாம்.
அனுமதியின்றியும் அனுமதியை மீறியும் செயல்படும் கல் குவாரிகள், கடற்கரை மணல் திருட்டுகள், வனப் பிரதேச ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் அம்பலப்படுத்துவதுடன் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத அரசு அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும்கூட தட்டியெழுப்ப முடியும். ஊழலையும் லஞ்சத்தையும் தடுக்க முடியும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தத்தம் பகுதிகளில் இயற்கை வளம், சுற்றுச்சூழல், விவசாயம், நீர் நிலைகள், ஆறுகள், பல்லுயிர்ப் பெருக்கம், வன அழிப்பு போன்றவற்றை இடையறாது கண்காணிக்கவும் அவை பாதிக்கப்படும்போது அரசுக்கு எச்சரிக்கை விடவும் தொண்டர் அணிகளை உருவாக்கலாம்.
ஆற்றங்கரைகளில் வசிப்பவர்களில் சிலரைத் தேர்வு செய்து எளிய முறைகள் மூலம் நீரின் தூய்மையிலும் தன்மையிலும் தென்படும் மாற்றங்களைப் பதிவு செய்து, தொடர்புடைய துறையினருக்குத் தெரிவிக்கும் ஆர்வலர் குழுக்களாகப் பயிற்றுவிக்கலாம். இத்தகைய ஆற்றுநீர்க் கண்காணிப்புக் குழுக்கள் ஆஸ்திரேலியாவில் இயங்கி வருகின்றன.
தூய நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் ஊசித்தட்டான் பூச்சிகள், மாசுபட்ட நீரில் மட்டுமே வாழும் உயிரிகள் போன்றவற்றின் எண்ணிக்கை நீரின் தரத்தை மதிப்பிட உதவும். பள்ளி மாணவர்களுக்கு எளிய கருவிகளை வழங்கி சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை அளவிடும் புராஜக்ட்டுகளை மேற்கொள்கிற வகையில் கல்வித் திட்டங்களை வகுக்கலாம்.
பாரம்பரியமான விவசாய உத்திகளை அறிந்து வைத்திருக்கும் விவசாயிகள், அரிய மூலிகைகளை அடையாளம் காணவல்ல காடுவாழ் பழங்குடிகள், கை வைத்தியத்தின் மூலமே பல நோய்களைக் குணப்படுத்தவல்ல நாட்டு மருத்துவர்கள் போன்றோரைத் தேடிப் பிடித்து அவர்களுடைய அனுபவ அறிவைப் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும்.
அவற்றை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து புதுப்புனைவுகளுக்கான காப்புரிமையை நிறுவ முடியும். உலகெங்கிலுமுள்ள நிபுணர்கள் அவற்றைப் பரிசீலித்துச் சரியானவற்றை அங்கீகரிக்கவும் தவறானவற்றைப் புறந்தள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
அரசுகளின் தயவின்றி செயற்கைக்கோள்களின் மூலம் வனங்கள், நீர் நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றின் பரப்பளவிலும் தரத்திலும் தன்மையிலும் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முடியும். அதன்மூலம் சட்ட விரோதமாக நடைபெறும் வன அழிப்புகளையும் மணல் கொள்ளைகளையும் உடனுக்குடன் அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும்.
இத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பாடுபடும் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் விக்கிபீடியா, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை உலகெங்கிலுமிருந்து ஆதரவாளர்களை திரட்டித் தரும்.
அரபு நாடுகளில் தோன்றிய ஜனநாயக இயக்கங்களுக்கு பெருந்துணை புரிந்தவை இணைய தளங்கள்தான். அவற்றை உருப்படியான வகையில் பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.
By கே.என். ராமசந்திரன், -தினமணி