எறும்பிடம் கற்க வேண்டிய பாடங்கள்!
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி), ”எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும், அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று. (அல்குர்ஆன் 27)
இந்த வசனத்தில் எறும்புக் கூட்டத்தின் தலைமை எறும்பு கீழுள்ள எறும்புகளுக்கு, “சுலைமான் நபியின் படை வருகின்றது. நாம் அனைவரும் புதருக்குள் சென்று விடுவோம்” என்று கூறியது. உடனே அனைத்து எறும்புகளும் புதருக்குள் சென்று விட்டன.
இதில், நாம் உணரும் பாடம்தான் தலைமைத்துவம்.
ஆம்! மனிதர்களைப் போலவே எறும்புகளும் தங்களுடைய வாழ்வை முறையாக அமைத்துக் கொள்கின்றன என்பதை உணர வேண்டும். எறும்பைப் பற்றிய சிறு வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
உலகிலேயே நீதான் மிகப் பெரிய உளவாளி – சர்க்கரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து வருகின்றாய்!
உலகிலேயே நீதான் மிகப் பெரிய புத்திசாலி – அடுத்த பருவத்திற்கு உரிய உணவை முன்னதாகவே சேமிக்கின்றாய்!
உலகிலேயே நீதான் மிகப் பெரிய பலசாலி – உன்னை விட ஐம்பது மடங்கு எடையைச் சுமக்கிறாய்.
உலகிலேயே நீதான் மிகப் பெரிய துரதிஷ்டசாலி – கடித்த உடன் உனக்கு சாவு உறுதி!
எறும்புகளிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன. அதனுடைய வேலைப் பங்கீடு, நிர்வாகத் திறமை, கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை, பலம் என்று எவ்வளவோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எறும்பில் ராஜா, ராணி, பணியாளர், வீரர் என்று பல்வேறு வகைகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு வகை எறும்பும், ஒவ்வொரு காலகட்டம் வாழ்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
மனிதர்ககள் சில விஷயங்களில் தடைகளைக் கண்டு பின்வாங்குவார்கள். அதற்கு மாற்று வழி தேடாமல் தடுமாறுவார்கள். இலகுவான விஷயங்களுக்குக் கூட மனம் தளர்ந்து விடுவார்கள்.
ஆனால், எறும்புகள் மனம் தளறுவதில்லை. எதையும் முடிக்கும் ஆற்றல் கொண்டவை. இதற்கு உதாரணமாக சிறுகதை ஒன்றைப் பார்க்கலாம்.
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு நம்பிக்கை சம்பந்தமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது மாணவர்களுக்கு சிறு கதை ஒன்றை சொன்னார். ஒரு எறும்புக் கூட்டம் உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்தது. அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
இப்பொழுது எறும்புகள் என்ன செய்திருக்கும் என்று மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். ஆனால், யாருமே சரியான பதிலைச் சொல்லவில்லை.
ஆசிரியரே பதிலைச் சொன்னார். எறும்புகள் தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருளையே பள்ளத்திற்கு நடுவில் வைத்து, அதையே பாதையாக மாற்றி விட்டன என்றார். மாணவர்கள் வியப்புற்றனர்.
இதுதான் எறும்பின் குணம். எதையும் சாதுர்யமாக நிறைவேற்றும் திறமை, பின்வாங்காத மனஉறுதி என்று அதனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. எறும்பிடம் உள்ள நிர்வாகத் திறமை நம்மை வியப்பிலாழ்த்தும். அது வலுவான கட்டமைப்புடன் இயங்கக்கூடியது.
எறும்புகளின் நிர்வாகத் திறமையிலிருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் பயில வேண்டும். இந்தத் திறமையை நமக்கேற்றவாறு அமைத்துக் கொண்டால், நிறைய சாதிக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.
நெல்லை சலீம்
source: http://www.thoothuonline.com