மக்கள் மக்களாக வாழட்டும்
[ திருமணம் ஓர் அற்புதமான பந்தம். திருமணம் என்பதிலும் முழுமை இல்லை; பூரணத்துவம் இல்லை. குறைபாடுகளும் இருக்கலாம்; இருக்கின்றன. எனினும், ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் இக்கண்டுபிடிப்புக்கு நிகரான வேறொரு பந்தம் நிச்சயமாக இன்னும் தோன்றவில்லை.
ஆண் இன்னொரு பெண்ணால் மட்டுமே முழுமை பெறுகிறான்; பெண் இன்னொரு ஆனால் மட்டுமே நிறைவு பெறுகிறான். எல்லாவற்றையும் சட்டம் என்ற கோணத்தில் பார்த்துவிட்டு, தர்மத்தைப் புறக்கணிப்பது சமூக மேம்பாட்டுக்கு உதவாது…! அக்காலத்தில் உறவு முறை திருமணங்கள் தோன்றுவதற்கு ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தால் பிரச்னையை சரி செய்து உண்மையை உரத்துச் சொல்ல முடியும் என்பதே ஆகும். சமூக அங்கீகாரம் என்பது திருமண உறவு செழிக்க தோன்றியவையே…!
ஓரினசேர்க்கை எனபது ஒரு மன நோய். சரியான வயதில் உளவியல் ரீதியான மருத்துவம் தேவை. அனைவருக்குமே ஒவ்வொரு கட்டத்திலும் 12 வயதுக்கு மேல் 3 வருடத்திற்கு ஒரு முறை உளவியல் ரீதியான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திருமணதிற்கு முன்னும் பின்னும். தந்தையாகவோ தாயாகவோ நிலையை அடைந்த போதும், உளவியல் ரீதியான மருத்துவம் தேவை. ஆறறிவுக்கு கிழ் உள்ள விலங்குகள், பறவைகள் கூட தன எதிர்பாலை தான் நாடி ஈர்க்கபடுகின்றனெ.. மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த வக்கிர புத்தி………]
மக்கள் மக்களாக வாழட்டும்
சா. பன்னீர் செல்வம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் ஆணும், பெண்ணும் திருமணம் என்பதில்லாமல் சேர்ந்து வாழ்தல் சட்டப்படிக் குற்றமல்ல – என்றொரு தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியது. அண்மையில், ஓரினச் சேர்க்கையென்பது, சட்டப்படிக் குற்றம் என்னும் தீர்ப்பையும் அதே உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இரண்டு தீர்ப்புகளும் சட்ட அடிப்படையில் வழங்கப்பட்டவையன்றி, எது சரி என்னும் முறையில் வழங்கப்பட்டவையல்ல.
முதவாவது, திருமணம் என்றால் என்ன? ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தலைப் பலரறியச் சாட்சியப்படுத்துதல் என்பதன்றி வேறல்லவே? சேர்ந்து வாழ விரும்புவோர் தங்களின் இணைப்பைச் சாட்சியப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? கடன் கொடுப்பவர் – வாங்குபவர், சொத்தை விற்பவர் – வாங்குபவர் நாணயமானவர்கள் என்றால் கடன் பத்திரமும், பத்திரப்பதிவும் தேவையில்லை. இவர்களில் யாரும் நடந்ததற்கு மாறாகப் பேசி, நடந்து கொண்டால் அதனால் பாதிக்கப்படுவோரின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவே அவை அவசியமாகின்றன.
சமூகம் என்பது குடும்பங்களின் இணைப்பு. குடும்பம் என்பது ஆண் பெண் இணைப்பு. சமூகம் என்பதற்கு அரசும், சட்டங்களும் அவசியமாகிறபோது, சமூகத்தின் அடித்தளமாகிற குடும்பம் என்பதற்கு வரன்முறை தேவையில்லை என்பது முரண்பாடல்லவா? கணவன், மனைவி, குழந்தைகள் என்னும் குடும்ப முறையில்லாத சமூக நிலை என்னவாகும்? தாய் – மகன், தந்தை – மகள், அண்ணன் – தங்கை எனும் வரன்முறையின்றி உறவாடும் நிலையாக இருக்கும். விலங்குகள் அப்படித்தான் உறவாடுகின்றன. அப்படித்தான் வாழ்கின்றன. மனிதனும் அப்படியே வாழலாம் என்றால், அப்புறம் மனிதனுக்கு மட்டும் ஆடை எதற்கு?
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியுடைமையைத் தவிர்த்தல் இயலுவதாகலாம். தாய், தந்தை, உடன் பிறந்தார் என்னும் உறவு முறையைத் தவிர்த்தல் இயலாது. அதனையும் தவிர்த்தல் விலங்கு வாழ்வாகுமன்றி மனித வாழ்வாகாது. அது காட்டுமிராண்டி வாழ்வன்றி நாகரிக வாழ்வல்ல. அது வெறுக்கத் தக்கதன்றி விரும்பத்தக்கதல்ல. தற்போது சேர்ந்து வாழ்வோர், திருமணப் பதிவு என்பதை மட்டுமே தவிர்க்கிறார்கள். மற்றபடி, அனைத்து நிலைகளிலும் கணவன், மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்னும் முறையில்தான் செயற்படுகிறார்கள்; சமூகத்தில் உறவாடுகிறார்கள்; பயன்பெறுகிறார்கள்.
திருமணம் என்பதன் சமூக உறுதி வேண்டாமெனத் திட்டமிட்டு உதறுபவர்கள், அது தொடர்பான சிக்கல் எழும்போது சமூகத்தின் – சட்டத்தின் பாதுகாப்பு வேண்டுதல் என்ன நேர்மை? மணப்பதிவில்லாமல் வாழ்வோர்க்கும், திருமணம் செய்து கொண்டோர்க்குரிய சட்டப் பாதுகாப்பு வழங்குதல் சரிதான் என்றால், வாகனப்பதிவும், ஓட்டுநர் உரிமமும் இல்லாமல் வண்டியோட்டி விபத்திற்குள்ளாகுவோர்க்கு, அவர் வண்டி வாங்கியதற்கும், பல்லாண்டுகளாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார் என்பதற்கும் அக்கம் பக்கத்தார் சாட்சியங்களின் அடிப்படையில் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். வழங்கப்படுமா? வழங்கலாமென்றால், வாகனப் பதிவும், ஓட்டுநர் உரிமமும் வாங்குவோர் இளித்தவாயர்களா?
சந்தர்ப்பச் சூழ்நிலையின் நெருக்கடியால் திருமணம் – அல்லது, மணப்பதிவு செய்ய இயலாதவர்கள் அதற்கான விளக்கங்களை – சாட்சியங்களை அளித்தால் அவர்களுக்குச் சட்டப்பாதுகாப்பு வழங்கவேண்டும். மணப்பதிவைத் திட்டமிட்டு ஒதுக்குவோர்க்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கக்கூடாது. எனவே, இருசாராரையும் பிரிக்கும் வகையில் சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
கடன் பத்திரமும், பத்திரப்பதிவும் இல்லாமல் கொடுத்து வாங்குதல் வளருமானால், அது மனிதனுடைய நாணயத்தன்மையின் வளர்ச்சியல்லவா? அவ்வாறே மணப்பதிவில்லாமல் சேர்ந்து வாழ்தல் மனித நாணயத்தன்மையின் வளர்ச்சிதானே எனலாம். இந்த வாதம், சங்கங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்கள், தொழிலகங்கள் முதலானவற்றிக்கும் பொருந்துமே.
இந்த வாதத்தின்படி, அனைத்து வகையான பதிவுச் சட்டங்களும் இருக்கட்டும். ஆனால், யாரும் அவற்றைக் கடைப்பிடித்தொழுகத் தேவையில்லை. ஆனாலும் அவர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு உண்டு என்றாகும். அத்தகைய நிலையை ஏற்படுத்துதல் சமூகம் என்னும் கட்டமைப்பைக் குலைத்துச் சமூகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாகும்.
அடுத்து, ஓரினச் சேர்க்கைக்கான வாதங்களைக் கவனிப்போம். முதலாவது பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுபட என்கிறார்கள். அதற்கு இது தேவை இல்லையே? ஆணும் பெண்ணுமாகத் திருமணம் செய்து கொண்டு, அதே சமயம் கருத்தடையும் செய்து கொண்டால் போதுமே? ஓரினச் சேர்க்கை அல்லது கருத்தடை மூலம் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வோர் இந்தச் சமூகத்தில்தான் வாழ்கிறார்கள்; சமூகப் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், சமூக விருத்திக்கு உதவுதலைத் திட்டமிட்டு மறுக்கிறார்கள்.
மற்றவர்கள் பிள்ளை பெறும் தொல்லைக்கு ஆளாகிச் சமூக விருத்தி செய்ய, இவர்கள் அதன் பயனை மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள். அதாவது அடுத்தவர் துன்பத்தில் ஆதாயம் பெறுகிறார்கள். இது என்ன நியாயம்?
ஓரினச் சேர்க்கையாளர் அனைவரும் இருபால் உறவுக்குத் தகுதியற்றவர்களல்ல என்பதுதான் மெய்ப்பாடான உலகியல் பட்டறிவாகிறது. உடலியல் காரணமே உண்மையென்றால் அத்தகையோர் மருத்துவ ஆய்வுக்குட்பட்டு உரிய சான்றிதழ் அளிக்கட்டும். அல்லாத நிலையில் ஒட்டு மொத்தமாக ஓரினச் சேர்க்கையைச் சட்ட சம்மதமாக்குதல், ஒருவர் கெட்டுப் போகிற தீய பழக்கமல்ல என்பதும் நடைமுறைக்கு மாறான பொய்யுரையாகும். பாலியல் வன்முறை என்பதும், உடலியல் சார்ந்த – உடல் இச்சை சார்ந்ததன்றி வேறல்லவே?
தாவரங்களில், அயல் மகரந்தச் சேர்க்கை, தன் மகரந்தச் சேர்க்கை இரண்டும் உண்டல்லவா எனலாம். தன் மகரந்தச் சேர்க்கையாலும் காய் உண்டாகிறது. மற்ற உயிர்களுக்கும் பயன்படுகிறது. ஓரினச் சேர்க்கையால் பிள்ளையுண்டாகிறதா? சமூகத்திற்குப் பயனேதும் உண்டா?
அடுத்தவர் அந்தரங்கத்தைப் படுக்கையறைக்குள் புகுந்து பார்க்கலாமா என்கிறார்கள். படுக்கையறைக்குள் புகத் தேவையில்லை. அவர்கள் தொடர்பான பிரச்னை வரும்போது, இது, சட்டப்படிக் குற்றம் என்னும் முறையிலேயே பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். அவ்வளவுதான்.
இனி, திருமண மறுப்பு, ஓரினச் சேர்க்கை இரண்டிற்கும் பொதுவான வாதங்களைக் கவனிப்போம். முதலாவது, பதினெட்டு வயதடைந்த ஒருவர் தமது விருப்பம்போல் உண்ணவும், உடுத்தவும், வாழவும் உரிமையுள்ளவர். பாலின உறவு தனி மனித உரிமை சார்ந்தது என்கிறார்கள். இந்த வாதம் சராசரிச் சிந்தனைக்கு புறம்பானது. விலங்குகளில் ஒவ்வொன்றும் அதனதன் விருப்பம் போல் இயங்குகிறது. அங்கே சமூகம் எனும் அமைப்பில்லை.
மனிதர்களாகிய நாம் சமூகமாக இணைந்து வாழ்கிறோம். இயக்கம், அமைப்பு, சங்கம், நிறுவனம் எனப் பலருமாக இணைந்து செயற்படும்போது, தனி மனித விருப்பமும், உரிமையும் கட்டுக்குள்ளாகின்றன. சமூகம் என்பது இவையனைத்தையும் உள்ளடக்கும் பேரமைப்பு. அவரவர் விருப்பம்போல் வாழலாம் என்றால் சமூகம், அரசு, சட்டங்கள் என்பனவெல்லாம் என்னவாகும்? அவரவர் விருப்பம் என்று சொல்லி, பொது இடங்களில் ஆடையின்றித் திரியலாமா? உடலுறவு கொள்ளலாமா? அவ்வளவேன், விருப்பம்போல் வாழ்தல் தனிமனித உரிமையென்னும்போது, வாழ விருப்பமின்றிச் சாதலும் தனிமனித உரிமைதானே?
தற்கொலையைக் குற்றமாக்கும் சட்டத்திற்கு எதிராகத் தனிமனித உரிமைவாதி யாரும் குரல் கொடுக்கவில்லையே – ஏன்? ஓரினச் சேர்க்கையும், மணமறுப்பும் வயதுக்கு வந்த இருவர் பரஸ்பர ஒப்புதலுடன் தங்கள் அந்தரங்கத்தில் ஈடுபடும் செயல். அது அவர்களின் தனித்துவம் சார்ந்தது என்கிறார்கள். அதன்படி, தாயும் மகனும் தந்தையும் மகளும், சகோதரனும் சகோதரியும் பரஸ்பர ஒப்புதலுடன் மணம் செய்து கொள்ளலாமா? அதுவும் அவர்களின் தனித்துவம் எனக் கொள்ளலாமா? அப்புறம் மனிதனுக்கு மட்டும் ஆடை எதற்கு எனும் கேள்வி மீண்டும் எழுகிறது. கட்டுப்பாடு என்பதின்றிச் சமூகம் என்பதில்லை. சமூகம் என்பதின்றி, விலங்கினின்றும் வேறாகும் மனிதச் செயற்பாடு அனைத்தும் இல்லை.
பாலின உறவு தனிமனித இச்சைக்காக ஏற்பட்டதல்ல. இனவிருத்திக்கு அவசியமான, இயற்கையமைப்பு. எனவே, பாலின உறவு தனிமனித விருப்பஞ்சார்ந்ததல்ல. சமூக நலன் சார்ந்தது. எனவே, குறிப்பிட்ட கட்டுப்பாடு சரி – தவறு என்னும் வாதங்கள் விவாதத்திற்குரியன.
இந்தியாவில் தற்போது, ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை இருபத்தைந்து லட்சம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவரையும் சமூகத்திலிருந்து ஒதுக்க முடியுமா என்கிறார்கள். மணமறுப்பும், ஓரினச் சேர்க்கையும் சட்ட விரோதம் என அறிவித்தல், அவர்களுடன் யாரும் பேசக்கூடாது, பழகக்கூடாது எனும் சமூக ஒதுக்கல் அல்ல. அவர்களுக்குண்டாகும் பிரச்னைகளில் மணமறுப்பும், ஓரினச் சேர்க்கையும் சட்ட சம்மதமற்றவை என்னும் முறையில் தான் சட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
இறுதியாக, திருமண மறுப்பு, ஓரினச் சேர்க்கை இரண்டும் சமூகவொழுங்கு, மனிதத்தன்மை இரண்டையும் மறுதலிப்பதால் அவை ஏற்கத்தக்கவையல்ல. பகுத்தறிவு – நம்பிக்கை, நாத்திகம் – ஆத்திகம், பொதுவுடைமை – தனியுடைமை, பெண்ணியம் – ஆணியம் எனத் தத்துவம் எதுவாயினும் மனிதத் தன்மையை மேம்படுத்தி, மனித வாழ்வை நெறிப்படுத்துவதாக வேண்டும்.
மனிதனுள்ளிருக்கும் விலங்கியல்பை ஆமோதித்து நிலைப்படுத்தி மனித சமூகத்தைச் சீரழிப்பதாக அமைதல் தகாது. எது சரி – எது தவறு என்பதற்குச் சரியான அடிப்படையான அணுகுமுறை இதுவேயாகக் கொள்க. மக்கள் மக்களாக வாழட்டும்.
கட்டுரையாளர்: By சா. பன்னீர் செல்வம், தமிழாசிரியர் (ஓய்வு).
நன்றி: தினமணி