பெண்கள் பலிகடாக்களா?
ஹிஜ்ரி 20-ல் முஸ்லிம்கள் எகிப்தைக் கைப்பற்றினர். அதன் கவர்னராக இருந்த அம்ரு பின் அல் – ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அங்குள்ள கிறஸ்தவத் தலைவர்கள் வந்தனர். ஒரு முக்கியப் பிரச்னையைக் கவர்னரிடம் கூறினர்.
எகிப்தின் பொருளாதாரம் பெருமளவு நைல் நதியைச் சார்ந்துள்ளது. நதியைத் திருப்திப் படுத்துவதற்காகவும், அதன் நீர் வற்றாமலிருக்கவும் அங்குள்ள மதச் சம்பிராதாயப்படி ஒவ்வொரு வருடமும் நைல் நதிக்கு ஒரு மனிதப் பலி கொடுக்கப்படும்.
ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 அன்று இரவு ஒரு கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பர். மணப்பெண் போல் அவளை அலங்கரிப்பர். அதன்பின் அவளை அந்த நதியில் வீசி எறிந்து விடுவர். இப்படிச் செய்யவில்லையெனில், அந்த நதி வற்றிக் காய்ந்து விடும் என்று கவர்னரிடம் அந்தக் கிறிஸ்தவக் குழுவினர் கூறினர்.
கவர்னர் அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக மறுமொழி பகிர்ந்தார்கள்: “இந்த மூடப்பழக்கப் பலியை நீங்கள் விட்டு விட வேண்டும். நான் ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டேன்!”
இஸ்லாம் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் புதைகுழிக்குள் தள்ளி விடுகின்றது. அறியாமையினால் செய்யப்படும் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களையும் அகற்றி விடுகின்றது. இதையெல்லாம் நன்கறிந்த அந்த நபித்தோழரின் வாயிலிருந்து இதைத் தவிர வேறென்ன மறுமொழி வரும்?
ஏமாற்றத்தோடு அந்தக் கிறிஸ்தவர்கள் திரும்பினர். நாட்கள், வாரங்கள், மாதங்கள் கழிந்தன! நைல் நதியின் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வந்தது. ஆனாலும் அந்தப் புதிய ஆட்சியாளர்கள் மனிதர்களைப் பலியிடும் அந்தக் கொடூரப் பழக்கத்தை அனுமதிக்கவில்லை.
நைல் நதியைத் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக நம்பி வாழ்பவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிலர் பிழைப்புக்காக அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்தனர்.
கவர்னர் அம்ரு பின் அல் – ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இதனால் சற்றே கலக்கமுற்றார்கள். இதனை விவரித்து அன்றைய கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு மடல் வரைந்து அனுப்பினார்கள்.
“நீங்கள் சரியானதையே செய்துள்ளீர்கள்!” என்று கலீஃபாவிடமிருந்து பதில் வந்தது. “இஸ்லாம் அறியாமையால் செய்யப்படும் சடங்குகளை அழிக்கவே இவ்வுலகில் முகிழ்த்தது. நான் இத்துடன் ஒரு குறிப்பை அனுப்புகிறேன். அதனை நைல் நதியில் போட்டு விடவும்” என்று கலீஃபா அவர்கள் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.
நைல் நதிக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமே அந்தக் குறிப்பு. அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது: “உமரிடமிருந்து எகிப்தின் நைல் நதிக்கு. நீ உனது சொந்த முயற்சியில் ஓடிக் கொண்டிருந்தால், இப்பொழுதே நீ ஓடுவதை நிறுத்தி விடு. ஆனால் அது தனியோன், தம்பிரான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து என்றால் நாங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்வோம்: ‘யா அல்லாஹ்! நீ இந்த நதியை ஒலித்தோடச் செய்வாயாக!’’
அந்தக் கடிதத்தை அம்ரு பின் அல்-ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நைல் நதியில் போட்டார்கள்.
என்னே ஆச்சரியம்…!
அடுத்த நாளிலிருந்து நைல் நதி ஒலித்தோடத் துவங்கிற்று. இதனை வரலாற்றாசிரியர் இப்னு தஃக்ரி பெர்தீ எழுதுகிறார். (ஆதாரம்: அன்-நஸீமுஸ் ஸாஹிரா ஃபீ அஃக்பார் முலுகே மிஸ்ர வல் காஹிரா, பாகம் 1, பக். 35)
இந்த வருடப் பலிக்கு யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களோஸ! ஒருவேளை அது நாமாக இருக்குமோ..! என்று மரண பயத்தில் அணு அணுவாகத் தவித்து கொண்டிருந்த எகிப்திய கன்னிப் பெண்கள் அன்றுதான் விடுதலைப் பெருமூச்சு விட்டனர்
இஸ்லாம் அங்கே காலூன்றி அந்தப் பெண்களையெல்லாம் காப்பாற்றியது. அஞ்ஞான, அறியாமைக் கால வணக்க வழிபாடுகளைக் கொண்ட கலாச்சாரத்திலும், சமூகங்களிலும் மனிதப் பலிகள் சர்வ சாதாரணம்!
இதில் வேதனையான உண்மை என்னவென்றால் இந்தப் பலிகளின் பெரும்பாலான இலக்கு சிறுமிகளும், பெண்களும்தான்!
அவர்கள் ஆழமான நதிகளில் உயிரோடு வீசி எறியப்பட்டார்கள் – நதிகள் வற்றாமலிருப்பதற்காக!
கட்டடங்களின் அடியில் உயிரோடு புதைக்கப்பட்டார்கள் – அவைகள் உறுதியாக நிற்பதற்காக!
பாலங்களின் அடியில் உயிரோடு புதைக்கப்பட்டார்கள் – அவைகள் உறுதியாக இருப்பதற்காக!
கடவுளர்களின் முன் அறுத்துப் பலியிடப்பட்டார்கள் – சமுதாயப் பாதுகாப்புக்காக!
பிரபலமான ஒரு முஸ்லிம் பயணி இப்னு பதூதா என்பவர் மாலத் தீவுகளில் நடக்கும் அஞ்ஞான வணக்க வழிபாடுகளைப் பற்றி தனது பயணக் குறிப்பில் குறிப்பிடுகிறார்.
அந்தத் தீவின் கரையில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் ஒரு பேய் உள்ளதாக மக்கள் நம்பினர். அந்தப் பேயைச் சாந்தப்படுத்துவதற்காக ஒரு காரியத்தைச் செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் ஓர் இளம் கன்னிப் பெண் அழகிய ஆடைகள் உடுத்தபடுவாள். அந்தக் கோயிலில் இரவு முழுவதும் தன்னந்தனியாக விடப்படுவாள். மறுநாள் காலை வந்து பார்த்தால் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அலங்கோலமான நிலையில் இறந்து கிடப்பாள்.
அபுல் பறக்காத் பார்பெரி என்றொரு முஸ்லிம் பார்வையாளர் அங்கு சென்றிருந்தபொழுது இதனை அறிந்தார். அவர் தங்கியிருந்த வீட்டுடமையாளர் ஒரு முதிர்ந்த வயதுப் பெண்மணி. அவரின் இளம் மகள் அடுத்த மாதப் பலிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள்.
இதனால் கவலையுற்ற அந்த முஸ்லிம் பெரியவர் இதற்கு முடிவு கட்ட எண்ணினார். அவர் குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ். அந்தக் கன்னிப் பெண் நிற்க வேண்டிய இடத்திற்கு இவர் சென்றார். அந்தக் கோயிலில் அமர்ந்தார். அந்த இரவு முழுவதும் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் காலை எல்லோரும் வந்து பார்த்தனர். என்னே அதிசயம்..! அவர் உயிரோடு இருந்தார். நலமாக இருந்தார்.
இந்தச் செய்தி தீவு முழுவதும் பரவிற்று. அஞ்ஞான மடமையில் மூழ்கி இருந்த அந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஒரு முஸ்லிமால் அந்தத் தீவின் கன்னியர் இந்தக் கொடும் பழக்கத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
மனிதப் பலி என்னும் இந்தக் கருத்தோட்டம் பாவம், பரிகாரம் என்கிற விஷயத்தில் நடுநாயகமாக வருகிறது.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் (ஜீசஸ்) அவர்கள் மனித குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே சிலுவையில் பலி கொடுத்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். பாதிரிகள் அவர்கள் நடத்தும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு அன்பான வடிவம் கொடுத்தனர்.
சதூர்னாலியா என்ற இடத்தில் அவர்கள் கொடுத்து வந்த மனிதப் பலியை கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளாக மாற்றினர். பிரிட்டனில் கிறிஸ்தவம் அறிமுகமான பொழுது, ட்ரூயிட் இனத்தவர்கள் அஞ்ஞானச் சடங்குகளையும் அங்கு கொண்டு சென்றனர்.
பழங்கால ட்ரூயிட் இனத்தவர்கள் மோகினி, பேய், கெட்ட ஆவி போன்றவற்றின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்றிரவு அவை பூமியில் நடமாடும் என்று நம்பினர். அக்டோபர் 31 என்பது செல்டிக் (Celtic) காலண்டரின் கடைசி நாளாகும். (நாம் பின்பற்றுவது கிரிகோரியன் (Gregorian) காலண்டர்).
அன்று இரவு அவர்கள் பெரும் தீ ஒன்றை மூட்டுவர். இந்தப் பெரும் தீ எதற்கு என்றால் அந்தக் கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காகவாம்.
அதன் பிறகு, அவர்கள் ஒவ்வொரு வீட்டுக் கதவாகத் தட்டுவார்கள். ‘இந்தப் பெருந்தீக்கு தீனி போடுவோர் உண்டா?’ என்றுக் கேட்டுக்கொண்டே செல்வார்கள். தீனி என்றால் கற்கண்டு, விறகு என்று எண்ணி விட வேண்டாம். பலி கடாக்கள் – இளங்கன்னியர்கள்!
ஆம்! அந்தப் பெருந்தீயில் போட்டுப் பொசுக்குவதற்காக – மனிதப் பலி கொடுப்பதற்காக இளங்கன்னியர்களைத் தேடுவார்கள். யாரவது ஒரு வீட்டில் அந்த ட்ரூயிட் இனத்தவருக்கு ‘மனிதப் பலி’ கிடைத்து விட்டால், அந்த வீட்டின் மேல் ஒரு விளக்கை எரிய விடுவார்கள். மனிதப் பலி கொடுத்த வீடு என்று அதற்கு அர்த்தம்.
இன்று மனிதப் பலி இல்லையென்றாலும் இந்த அடையாளங்கள் நவீன மேலைநாட்டு நாகரிகத்தில் காணப்படுகின்றன. ஒரு கன்னிப் பெண்ணை ஏன் நைல் நதியில் எறிய வேண்டும்?
ஒரு பெண் தனது சமூகத்தின் பொருளாதார வளத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்ய வேண்டுமாம். இன்றைய காலச் சூழலில் இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அலுவலகங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பெண்கள் பலவந்தமாக அனுப்பபடுகின்றனர். இந்தத் ‘தொழிற்புரட்சி’ பண்டைய காலத்தில் பெண்களைப் பலி கொடுத்து வந்த அந்தச் சிந்தனையில் உருவானதுதான்.
வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகக் காட்சிப் பொருளாக பெண் வைக்கப்படுகிறாள். இந்தச் ‘சந்தைப் புரட்சி’யும் அதே பழைய சிந்தனையில் உருவானதுதான்.
அதாவது, ஒரு பெண் தனது உயிரை, அழகை, மதிப்பை, பாதுகாப்பை, உரிமையை எல்லாம் இந்தச் சமுதாயப் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தியாகம் செய்ய வேண்டும்.
‘வளர்ச்சிக்கும், வளத்திற்கும்’ உள்ள பெண் கடவுள் பெண்களை அவ்வாறு தியாகம் செய்யச் சொல்கிறதாம். இன்று பெண் தனது இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அவள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகிறாள்; அனைத்து அத்துமீறல்களுக்கும் ஆளாக்கப்படுகிறாள்.
இதனைத்தான் ‘பெண் விடுதலை’ என்று சொல்கிறார்கள். இதனைத்தான் ‘தியாகம்’ என்று சொல்கிறார்கள்.
ஒரு சமூகம் அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சிகளையும், கட்டளைகளையும் நிராகரிக்கும்போது, அவர்களே தேடிக் கொள்ளும் அழிவுப் பாதை அவர்களுக்கு எளிதாக இருக்கிறது.
நம்முடைய அத்தாட்சிகளை நிராகரித்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம். எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியாத வண்ணம் பிடிப்போம். (அல் அஃராஃப் 7 : 182)
நைல் நதி வற்றிப் போன சம்பவம் விசுவாசிகளுக்கு ஒரு சோதனை. முஸ்லிம்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறார்களோ? அல்லது அது வற்றிப் போனவுடன் ஏற்பட்ட களேபரத்தில் கதி கலங்கி தங்கள் முடிவை மாற்றிக் கொள்கிறார்களோ?
ஏன், கவர்னர் அம்ரு பின் அல் – ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே சற்று கலங்கிப் போகுமளவுக்கு நிலைமை மோசமானதேஸ கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த ஈமானிய உறுதிதானே அந்த மக்களிடையே அல்லாஹ்வின் ஒளியைப் பாய்ச்ச உதவியது! இதுதானே அவர்களை நேர்வழி பெற வைத்தது! இதுதானே அந்த அஞ்ஞானவாதிகளின் கொடூரச் சடங்குகளை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்த்தது!
ஆம்! இறை விசுவாசம் ஒன்றே இந்தக் கொடுமைகளிலிருந்து இந்த மனித குலத்தை விடுவிக்க வல்லது.
முஸ்லிம்களேஸ! நாம் எந்நிலையிலும் எச்சரிக்கையாய் இருப்போம். ஈமானிய உறுதியோடு மனம் தளராமல் இருப்போம். ஏனெனில் அந்தச் சோதனை இன்றும் தொடர்கிறது.
ஃகாலித் பெய்க்
நன்றி : விடியல் வெள்ளி மார்ச் 2000
தமிழில் : MSAH
source:: http://www.thoothuonline.com