நல்ல செயல்கள் துவங்குவது எங்கிருந்து?
“இன்னமல் அஃமாலு பின்னிய்யாஹ்.” –
“செயல்களனைத்தும் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன!”
நிய்யத் என்ற எண்ணத்தைக் குறித்து வரும் நபிமொழி மிக முக்கியமானது. இஸ்லாமிய அறிவுறுத்தல்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நபிமொழியிலேயே அடங்கியுள்ளது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த நபிமொழி முக்கியமானது. மேலும் இந்த நபிமொழி அதிகமாக அனைவராலும் நினைவுகூரக் கூடியதும், கோடிட்டுக் காட்டக் கூடியதுமாக இருக்கிறது.
இந்த நபிமொழியின் அரபி மூலவாக்கியத்தையே அனைவரும் கூறும் அளவுக்கு அது பிரபலமானது. ஏன், அரபி பேசாத முஸ்லிம்கள் கூட அரபி மூலவாக்கியத்துடன் இதனைக் குறிப்பிடுகின்றனர். இந்த நபிமொழியை அறியாத ஒரு முஸ்லிம் கூட உலகில் இருக்க மாட்டார் என்றே கூறலாம்.
இந்த நபிமொழியிலேயே அரபி மூலத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கவனிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதன் உள்ளர்த்தத்தை, அது சுட்டும் நோக்கத்தை நாம் செயல்படுத்துகிறோமா? நிச்சயமாக இல்லை.
இஸ்லாமியப் பார்வையில் நமது செயல்பாடுகளை 3 வகைகளாகப் பிரிக்கலாம். நம்மில் ஒவ்வொருவரின் செயல்பாடும் இந்த 3 வகைகளில் ஏதாவது ஒன்றின் கீழ்தான் வரும். இதில் ஒவ்வொரு வகையினருக்கும் இந்த நபிமொழி ஒவ்வொரு பொருளைக் கொடுக்கும்.
முதல் வகையினர் மார்க்க வணக்கங்களை தாங்களாகவே விரும்பி முன் வந்து செய்வர். (தாங்களாகவே விரும்பித் தொழும் நஃபில் தொழுகை மாதிரி)
இரண்டாவது வகையினர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவைகளை செய்வர். உண்ணுதல், குடித்தல், உறங்குதல், சம்பாதித்தல், குடும்பத்தைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஹலாலைப் பேணுவர்.
மூன்றாவது வகையினர் இஸ்லாத்தால் தடுக்கப்பட்டவைகளைச் செய்வர்.
நிய்யத்தைக் குறித்த நபிமொழி முதல் வகையினருக்கு அப்படியே பொருந்தும். முதல் வகையினர் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக, அல்லாஹ்வை மகிழ்விப்பதற்காக தங்கள் வணக்கங்களைப் புரிவார்கள். இந்த எண்ணத்தில் ஒரு சிறு கரும் புள்ளி விழுந்தாலும் அவர்களது நோக்கங்கள் அழிந்து விடும்.
இஸ்லாத்தின் 5 தூண்கள் இந்த வணக்கங்களுக்கு நல்ல உதாரணங்களாகும். உதாரணத்திற்கு தொழுகையை எடுத்துக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் தன்னை எல்லோரும் “பக்திமானாகக்” கருத வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுதால், அவன் அந்தத் தொழுகையைப் பாழாக்கியது மட்டுமல்ல, அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத “ஷிர்க்” என்ற இணைவைப்பையும் (மன இச்சைக்கு அடிமைப்பட்டதால்) செய்து விட்டவன் ஆவான்.
இதே நிலைதான் ஹஜ், ஹிஜ்ரத், ஜிஹாத், தர்மம் போன்ற கிரியைகளிலும். திருக்குர்ஆன் இதனை ஓர் அழகிய உவமையைக் கொண்டு விளக்குகிறது.
இரண்டு மனிதர்கள் தர்மம் செய்கின்றார்கள். இரண்டு பேர்களின் தர்மங்களும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன. இரண்டு பேருமே ஏழைகளுக்கு உதவுகின்றார்கள். ஒருவர் அல்லாஹ்விடம் முழு திருப்தியை அடைவதற்காக இதனைச் செய்கின்றார். மற்றொருவர் பேரும், புகழும் அடைவதற்காக இதனைச் செய்கின்றார்.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த (தானத்)திலிருந்து யாதொரு பயனையும் அடைய மாட்டார்கள். இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 2 : 264)
அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை அரிதுயிலோ, உறக்கமே பீடிக்கா. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (அல்குர்ஆன் 2 : 255)
“ஸதக்கா” என்ற தர்மம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஸதக்கா என்பது நாம் பிறருக்குக் கொடுக்கும் தர்மம் என்பதால் அந்த மனிதர் நமக்கு நன்றி கூறலாம். நம்மைப் பெருமைப்படுத்தலாம். இந்தப் பாராட்டுதலை நாம் கொஞ்சம் கொஞ்சமாக விரும்ப ஆரம்பிக்கலாம். ஆதலால் தர்மம் கொடுக்கும் கிரியையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு பொதுக் காரியத்திற்கு பணம் சேர்ப்பதற்கு முஸ்லிம்கள் மாலை நேர விருந்தோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியோ வைக்கின்றனர். இஸ்லாத்தில் இப்பழக்கத்திற்கு இடம் இல்லை என்பது தெளிவு. தர்மத்தைக் கூட கைம்மாறோடு எதிர்பார்க்கும் ஒரு கலாச்சாரத்திடமிருந்து கடன் வாங்கியதுதான் இப்பழக்கம்.
உண்மையில் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கவும், அரசின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளவும்தான் இந்தக் கலாச்சாரத்தை உடையவர்கள் தங்கள் பணங்களை அள்ளி வீசுகின்றனர். முஸ்லிம்கள் இதனை மனதிற்கொள்ளாவிடினும், புகழுக்காகவும் செல்வாக்குக்காகவும் தர்மம் செய்யும்பொழுது அவர்களது நல்ல காரியங்கள் அனைத்தும் பாழாகி விடுகின்றன.
தேவையுடையவர்களுக்கு அல்லது நல்ல காரியங்களுக்கு ஒரு முஸ்லிம் உதவி செய்வது என்பது அல்லாஹ்வின் உவப்பைப் பெற்றுத் தரும். ஒரு முஸ்லிம் தர்மம் செய்யும்பொழுது அவனது உள்ளக் கிடக்கையிலுள்ள நேர்மையான எண்ணத்தைத்தான் அல்லாஹ் பார்க்கிரான். மாறாக, அவன் எவ்வளவு தர்மம் செய்கிறான் என்பதல்ல.
இது அவனுக்குத் தெரியும். இந்த நேர்மையான தூய்மையான எண்ணம்தான் அவனது முக்கியமான சொத்து ஆகும். வெறுமனே நல்ல எண்ணங்கள் மட்டும் நன்மையைத் தருவது இல்லை. எண்ணத்தில் தூய்மை என்பதுதான் இங்கு மிக முக்கியமானது.
இதனைத்தான் இந்தப் பிரபல நபிமொழி இப்படிக் கூறுகிறது: “இன்னமல் அஃமாலு பின்னிய்யாஹ்.”
பொருள்: “செயல்களனைத்தும் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன!”
இஸ்லாத்தில் முடிவுகள் அது கடந்து வந்த பாதையை நியாயப்படுத்த முடியாது. அதுபோல் சுயமாக சிந்தித்துக்கொண்ட நல்லெண்ணம் தவறான செயலைச் சரி செய்ய முடியாது.
நம் தொழுகையையோ, குர்பானியையோ, ஹஜ்ஜையோ சரியாகச் செய்யாமல் இருந்தால், நல்லெண்ணங்கள் மட்டும் அதனைச் சரி செய்ய முடியாது.
அல்லாஹ்வின் பார்வையில் எது நல்லதோ அதுதான் நல்ல காரியம். நாமாக எதையும் முடிவெடுத்துக் கொள்ள முடியாது.
மேலே சொன்னபடி இரண்டாவது வகையினர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களைச் செய்வார்கள். நமது எண்ணங்களை நல்லவிதமாக அமைத்துக் கொண்டால் நமது ஒவ்வொரு அசைவையும் இறைவணக்கமாக மாற்றி விடலாம்.
ஆனால் நம்மில் பலர் இதனை அறிவதில்லை. ஆதலால் நஷ்டத்திற்குள்ளாகின்றனர்.
உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்று நேர்மையாக உழைக்கிறான். அவனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமுதாய நலனுக்காகவும் அவன் உள்ளபடியே உண்மையாக உழைக்கும்பொழுது அதுவும் இறைவணக்கமாக மாறி விடுகின்றது.
ஆனால் வெளிப்படையில் பார்க்கும்பொழுது அவன் சம்பாதிக்கப் போவது மட்டும்தான் தெரியும். அவன் நல்லெண்ணங்களை உள்ளத்தில் சுமந்து நேர்மையாக உழைக்கும்போழுது அது இறைவணக்கமாக மாறுகிறது என்பது வெளிப்படையாகத் தெரியாது.
தனது ஒவ்வொரு நிமிடத்தையும் இறைவணக்கமாக மாற்றியதற்காக அவனுக்கு நிரம்ப நற்கூலிகள் காத்துக் கிடக்கின்றன.
ஆம்! எண்ணத்தில் எற்படும் ஒரு சிரிய மாற்றம் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.
ஃகாலித் பெய்க்
நன்றி : விடியல் வெள்ளி ஜூலை 2001
source: http://www.thoothuonline.com