முதல் வாள்!
ஹாஷிம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை. மக்காவில் அவர்களுக்கிருந்த செல்வாக்கும், புனித கஅபாவில் அவர்கள் நிலைநிறுத்தியிருந்த அதிகாரமும், ஆதிக்கமும் அவர்களைத் தடுத்திருக்கலாம்.
ஆனால் தங்கள் குடும்பத்தில் ஓர் அங்கம் என்ற அடிப்படையில் எதிரிகளின் கைகளில் அண்ணலாரை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. அண்ணலாரின் காரியத்தை எங்களுக்கு விட்டுத் தரவேண்டும் என்று அபூஜஹ்லும், இன்னபிற எதிரிகளும் கோரியபொழுது அபூதாலிப் அதனை உறுதியாக நிராகரித்தார். அவர்களிடம் அவர் முகத்திலடித்தாற்போல் இவ்வாறு கூறினார்:
“முஹம்மதைச் சுற்றி ஹாஷிம் குடும்பத்தின் ஆண்கள் அனைவரும் ஒன்றாக நிற்போம். உங்கள் வெட்டுகள் முழுவதும் பட்டு விழ வேண்டி வந்தாலும் நாங்கள் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்போம்.”
அபூதாலிப் இப்படியொரு நிலைப்பாடை எடுத்திருக்கிறார் என்பதால் கொஞ்சம் தந்திரமாக நடந்து கொள்ளவில்லையென்றால் பொதுமக்கள் தனக்கெதிராகத் திரும்பி விடுவார்கள் என்று அபூஜஹ்ல் அஞ்சினான். அவனுக்கு அனுகூலமான வாய்ப்புகள் வருவதற்காகக் காத்திருந்தான்.
இருந்தாலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டபொழுதெல்லாம் பரிகாசம் செய்யவும், சிறிய அளவில் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தவும் அவன் தயங்கிடவில்லை.
ஒரு நாள் மக்கள் கூடி நின்ற ஓர் இடத்தில் அபூஜஹ்ல் அண்ணலாரைக் கண்டதும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். முஸ்லிம்களில் ஒருவரான துலைப் இப்னு உமைர் ரளியல்லாஹு அன்ஹு இதனைக் கண்டார். பொறுக்க முடியாமல் ஓடி வந்து அபூஜஹ்லை பலம் கொண்ட மட்டும் தாக்கினார். அபூஜஹ்லின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தோடியது.
இதனைக் குடும்ப உதவியாக குறைஷிகள் காணவில்லை. அவர்கள் துலைபின் மேல் பாய்ந்தனர். இதனைக் கண்ட அபூலஹப் ஓடி வந்து துலைபுக்கு உதவியாக நின்றார். துலைப் அபூலஹபின் உறவினர். அண்ணலாரை எதிர்ப்பதில் முதல் ஆளாக இருந்தார் அபூலஹப். ஆனால் தன் உறவினர் என்ற அடிப்படையில் துலைபுக்கு உதவ முன்வந்தார்.
நிலைமை சிக்கலாவதைக் கண்ட அபூஜஹ்ல் உடனே தலையிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினான். அந்தப் பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டான்.
தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்திய இப்படிப்பட்ட காட்சிகள் நிறைந்ததாக இருந்தது அண்ணலாரின் மக்கா வாழ்க்கை.
ஒரு நாள் நகரத்தின் ஒரு மூலையில் அண்ணலார் அமர்ந்திருந்தபொழுது, ஸுபைர் இப்னு அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு அவ்வழியாக வேகமாக வந்தார். சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஆரத் தழுவிய தைரியத்திற்குச் சொந்தக்காரர்.
ஸுபைரின் கையில் ஒரு வாள் இருந்தது. அண்ணலார் ஏன் அந்த வாளைக் கையில் வைத்திருக்கிறீர் என்று கேட்டார்கள்.
ஸுபைர் அந்த நிகழ்வை விவரித்தார். அவர் ஒரு நண்பகல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று தெருவில் சப்தம் கேட்டு விழித்தார். “முஹம்மதின் தொல்லை இன்றோடு தீர்ந்தது!” என்று யரோ ஒருவர் உரக்கக் கூறினார்.
இதனைக் கேட்டதும் ஸுபைர் பதறியடித்து வெளியே ஓடி வந்தார். ஆட்கள் ஆங்காங்கே கூடி பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். குறைஷிகளில் யாரோ ஒருவர் முஹம்மதைக் கொன்றுவிட்டாராம் என்று அவர்கள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தனர்.
ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஆவேசம் பொத்துக்கொண்டு வந்தது. வீதியிலிருந்து வேகமாக வீட்டுக்குள் ஓடினார். உறையிலிருந்து உருவினார் வாளை! மீண்டும் வீதிக்கு வந்து வாளைக் கையில் ஏந்தியபடியே மக்கா நோக்கி ஓடினார்.
அவரது இலக்கு குறைஷிகள்! அவர்களை எங்கு கண்டாலும் வெட்ட வேண்டும். மூச்சிரைக்க ஓடினார். ஆனால் நடுப்பகலின் உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்ததால் யாரையும் வெளியே காணவில்லை.
இதற்கிடையில்தான் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபைரைப் பார்த்து விட்டார்கள். அண்ணலார் அவரிடம் கேட்டார்கள்: “ஸுபைரே, எதிரிகளைக் கண்டிருந்தால் என்ன செய்திருப்பீர்?”
ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்: “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை எங்கு கண்டாலும் வெட்டியிருப்பேன். அவர்கள் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் சரி, எத்தனை பேரானாலும் சரி. அதுதான் எனது நோக்கமாக இருந்தது.”
ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீரத்தையும், தீரத்தையும் கண்டு பெருமானார் பிரமித்து நின்றார்கள். அவருக்கு நல்லவை நடக்க வேண்டும் என்று பெருமானார் பிரார்த்தித்தார்கள். ஸுபைரின் வாளுக்கு வெற்றியை அளிப்பாயாக என்று தங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக முதன்முதலாக உறையிலிருந்து உருவப்பட்ட வாள் ஸுபைரின் வாள்தான் என்று வரலாற்றாய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள். அல்லாஹ் ஸுபைருக்கு அந்தப் பெரும் பாக்கியத்தை அருளினான்.
source: http://www.thoothuonline.com