கீழக்கரையில் அழகு மிளிரும் கலை நயத்துடன் காட்சி தரும் ‘ஓடக்கரை’ பள்ளி
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட கீழக்கரை ஒடக்கரை பள்ளியை முதலில் இடித்து விட்டு கட்டுமானம் செய்யத் தான் எத்தனித்து இருந்தார்கள்.
பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி, தொல்லியல் ஆய்வாளர் ராஜா முஹம்மது (சென்னை மீயூசியத்தின் முன்னாள் துணை தலைவர்) அவர்களின் வழிக்காட்டுதலின் பேரில் ஒரு மனதாக பழமையோடு புனரமைப்பு செய்ய தீர்மானித்தனர்.
இது நடந்தது 2006 ஆம் ஆண்டு. பின்னர் முழு வீச்சில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு முழுமை பெற்று அழகு மிளிரும் கம்பீரத்துடன் காட்சி தந்து கொண்டு இருக்கிறது.
ஒளிப்பதிவாளரும் வரலாற்று ஆர்வலருமான கோம்பை கிராமத்தை சேர்ந்த எஸ். அன்வர் தயாரித்து, இயக்கிய “யாதும்” ஆவணப் படம் சில தினங்களுக்கு முன் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் இஸ்லாமியர்களின் வேர்களை தேடும் இந்த ஆவணப் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாராகி இருக்கிறது.
தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை சார்ந்த தொழுகை, பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கட்டடக்கலை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிபூர்வமான காட்சிப்படுத்தல்கள், வரலாற்று நிபுணர்கள் தரும் தகவல்கள், செப்பேடுகள் போன்ற ஆதாரங்கள் வழங்கும் செய்திகள் ஆகியன அதில் இடம் பெற்றுள்ளன.
ஐம்பது நிமிடங்கள் ஓடும் யாதும், தமிழ் மண்ணில் இஸ்லாம் வேர் விட்ட வரலாற்றையும், இஸ்லாமியார்களின் வணிகம், கல்வி, இலக்கியம் என எல்லா கூறுகளையும் ஆவணப்படுத்தி உள்ளது. இதில் கீழக்கரை ஓடக்கரை பள்ளிவாசாலின் அழகிய கட்டிடக் கலையும் இடம் பெற்றுள்ளது.
இங்குள்ள தூண்களின் முனையில் காணப்படும் வாழைப்பூ வடிவம் இஸ்லாமிய திராவிடக் கட்டிடக் கலையின் சிறப்பை பாறை சாற்றி நிற்கின்றன. இங்கு தமிழ் மாதங்கள் பொறிக்கப்பட்டு, தமிழிலேயே தொழுகைகான நேரத்தை குறிக்கும் எண்கள் பொறிக்கப்பட்ட கால் தூண்கள் காணப்படுகிறது. அதே போன்று நடுத் தெரு ஜும்மா பள்ளியிலும் இதனை காணலாம்.
தமிழ்நாட்டின் கிழக்குக் கடலோரம் முழுக்க பயணிக்கும் அன்வர் அவர்களின் கேமரா, அதன் மூலமாக இந்தத் தமிழ் மண்ணோடு இரண்டறக் கலந்துவிட்ட முஸ்லிம் சமூகத்தின் தொன்மத்தை சொல்லிச் செல்கிறது. நறுமணப் பயிர்கள், காலம் காலமாக உலக நாடுகள் தென் இந்திய மக்களுடன் வணிக உறவுகளைக் கொண்டிருக்க காரணமாக இருந்தன. நறுமணப் பயிர்களின் பாதை கடல் வழியிலானதாக இருந்தது. அந்த வணிக உறவுகள் புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு சேர்த்தன.
கேரள கடலோரத்திற்கு கி.பி ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய ஏகத்துவ இறையியல் தத்துவம் கடல் வணிகர்கள் மூலம் வந்து சேர்ந்த வரலாறுகளை காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையிலும் பண்பாட்டிலும் இருக்கும் தனித்துவம், ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளயும் பண்பாடுகளையும் மதிப்பதற்கு எப்போதுமே தடையாக இருக்கவில்லை என்பதை காணொளி சாட்சிகளுடன் காணக் கிடைக்கிறது.
-கீழை இளையவன்