‘இழிவான இச்சை’ சிலருக்கு வாழ்வியல் இலக்காக இருக்கும் வேளையில், அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”
‘யாதும்’ – எதுவும்!
“தனது நாட்டில் நெய்யாத ஆடைகள் அணியும்
தனது நாட்டில் அறுவடை செய்யாத உணவை உண்ணும்
தனது தோட்டத்தில் பயிரிடப்படாத திராட்சை ரசம் அருந்தும்
ஒரு நாட்டுக்காக பரிதாபப்படுங்கள். (கலீல் ஜீப்ரான் கருத்திது)
தமிழ்த் திருநாட்டின் இன்றைய சமூகம் அன்னிய ஆடையை விரும்புகிறது. அன்னிய பழங்களைச் சுவைக்கிறது. அன்னிய உணவை ருசிக்கிறது. எவரைப் பார்த்து எவர் பரிதாபப்படுவது? வினா தொடுக்க கலீல் ஜீப்ரான் இல்லை!
ஊன்று கோலை விற்று வாழும் முடவர் போன்று தம் கலாசாரத்தை விட்டும் கடந்தோடி வேற்றுத் தன்மையுடன் விளங்குவதில் பெருமை கொள்ளும் போக்கு!
தாழிடப்பட்ட உதடுகளுக்குள் கிடக்கும் சொற்கள்! தனது ஒப்புதலில்லாமல் தழுவும் தென்றலைக் கண்டு சினம் கொள்ளும் மரக்கிளைக்கு இருக்கும் இயற்கை வெறுப்பு கூட இங்கு இல்லாமல் போனது.
மாடி வீட்டை அழகாகக் கட்டி மனவீட்டை அழுக்காக்கி வைத்திருக்கும் உலகம்!
உலக உயிர்களனைத்துக்கும் உற்சாகமூட்டும் கார்முகிலாக மாற இங்கு எவர் இருக்கிறார்?
மண்சட்டியுள் வேகப் போகும் விதி அறியாது மண்புழுவைக் கவ்வத்துடிக்கும் மீனாக எட்டுகோடி மக்களின் வாழ்வு. எட்டில் ஒரு பகுதியாக வாழும் ஐம்பது இலட்சம் தமிழ் முஸ்லிம்களின் அடையாளம் குறித்த தேடல் நடத்தியிருக்கிறார் கோம்பை அன்வர்.
தனக்கேயுரிய பாணியில் காட்சிகளாக்கி உழைப்பின் நிறைவாய் ஆவணப்படப் பேழை கொண்டு வந்திருக்கிறார். தமிழ்த்தாத்தன் சிவகெங்கை மண்ணின் மைந்தன் பூங்குன்றன் சொல்லை சொத்தாகப் பெற்று “யாதும்’’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். சென்னை லயோலா கல்லூரி விஸ்காம் அரங்கத்தில் வெளியீட்டு விழா நடந்தது. பங்களிப்புச் செய்து கருத்துரைத்தோரின் பதிவுகள் கீழே.
காட்சிப் பிழை பத்திரிகையாசிரியர் சுபகுணராஜன் :
தமிழ் மண் சார்ந்த தனது அடையாளத்தை தேடும் இஸ்லாமியர் அன்வர். தமிழ் முஸ்லிம் அடையாளம் என்ற புள்ளியை வைத்துள்ளார். பல புள்ளிகளை நோக்கிப் பயணிக்க வேண்டிய பல பகுதிகள் இன்னும் இருக்கின்றன. அருகாமையிலேயே பல பகுதிகள் இன்னும் எடுக்கவேண்டியுள்ளன. மௌனமாக, சாத்வீகமாக செய்யவேண்டிய பணி. “ஐடின்டி பாலிடிக்ஸ்.” அடையாள அரசியல் உலகம் முழுவதும் இருக்கிறது.
உள்ளத்துள் தமிழ் முஸ்லிம்கள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளனர்? அடையாளத்தை பதிவு செய்யவேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளனர். நூறு மேடைகள், பிரசங்கங்கள் செய்வதை ஒரு ஆவணப்படம் செய்துவிடும். சிறப்பாகச் செய்திருக்கிறார்.
திரைப்பட நடிகர் நாசர் :
நான் என் வேரைத் தேட முற்பட்டதில்லை. வேரைத் தேடும் போது வேற்றுமைகள் களையப்படும். எந்த நோக்கத்தில் இந்த ஆவணப்படம் எடுத்தார் தெரியவில்லை. “பிரித்தாளும் சூழ்ச்சி” உலக தாரகமந்திரம். புழுக்கம் நிறைந்த அறைக்குள் காற்று வந்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வை இந்த ஆவணப்படம் அளித்திருக்கிறது. இயற்கையான மனித நேயச் சிந்தனைகளைப் போக்கி மதம், சாதியென மாற்றிக் கொள்கிறோம்.
அன்பு, மனித நேயம் மேலோங்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டுள்ளோம். அடையாளச் சிக்கலை எதிர்காலச் சந்ததி எவ்வாறு எதிர்கொள்ளும் அதற்கு மிகச் சரியான ஆவணம் இந்த படம். ஒவ்வொரு சமூகமும் தத்தமது அடையாளத்தை தேடவேண்டும். பல ஆவணப்படங்கள் பார்த்திருக்கிறேன். இதை விட எளிதாக யாரும் வரையறுத்து விட முடியாது.
50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று வந்தேன். இதைச் செய், இதைச் செய்யென எல்லா சடங்குகளும், மரபுகளும் கற்றுத்தரப்பட்டன, எனக்கு. ஐந்து நட்சத்திர விடுதி சிப்பந்தியாகப் பணி செய்தேன். சிறப்பு விருந்தினர்களைக் கவனிக்க என்னைத்தான் முன்னுக்கு அனுப்புவார்கள். என் தந்தை தங்க நகை முலாம் பூசுபவர். என் சட்டையில் குத்தியிருக்கும்
எனது பெயருக்கு முலாம் பூசி மாட்டி வருவேன். ஒரு முறை அதி முக்கிய குழு ஒன்று வந்திருந்தது. அவர்களைக் கவனிக்க அனுப்பும்போது என்னை அழைத்து சட்டையில் குத்தியிருந்த எனது பெயரை எடுத்து உள்ளே போடும்படி சொன்னார்கள். பின்னர் வந்திருந்த யூத மத முதியோர் 12 பேர்களுக்கும் பணிவிடை செய்தேன்.
29 வருடங்கள் முன் நடந்த சம்பவம். மதங்கள் வேற்றுமை கற்றுத்தரவில்லை. அரசியல்வாதிகள் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பலியாகிறோம். நமது மரபுகளை விட்டும் வெகு தூரம் வந்துவிட்டோம். இந்த ஆவணப்படத்துக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது. நன்றி மட்டுமே கூறமுடியும்.
எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார் :
இந்த ஆவணப்படத்துக்கு உரிய செலவீனத்தை சமூகம் தரவேண்டும். இந்திய சமூகம் முன் மொழிய விரும்பும் படமாக எடுத்திருக்கிறார். “டிவைனிங்ரூல் 0 டிவைனிங் மிஸ்ரூல்”. பிரித்தாளும் சூழ்ச்சி கற்றுத் தந்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்று கூறப்படுகிறது. ஆயுதமில்லாமல் கருத்தியல் ரீதியாக எப்படி பிரித்தாளுவது என்று இங்கிருந்து இங்கிலாந்துக்கு கற்றுப் போனார்கள் என்றுதான் கூறுவேன்.
கோம்பை ஊரில் முஸ்லிம்கள் தொழுகை முடித்த பிறகு தான் பெருமாள் வீதி உலா வருவதாக கூறப்பட்டது. உடம்பு சரியில்லை என்றால் மதுரை கீழச்சந்தை பக்கீரிடம் கொண்டு செல்வார் என் அன்னை. அவர் என் மீது எச்சில் துப்புவார். உமிழ்நீர் வழியே இறை வேதம் வரும். ஒரு இந்து தாய் ஏற்றுக் கொண்டார். இதுதான் சமயச் சார்பின்மை.
எளிய மக்களின் நம்பிக்கைகள். இடிபாடுகள் நிறைந்த வாழ்வுடன் போராடும் மக்கள் எந்த கட்டை கிடைத்தாலும் பிடித்து கரையேற நினைப்பார்கள். மிதக்கும் எல்லா கட்டைகளும் கரை சேர்க்காது. பயன்படுத்தி விடவும் இயலாது. சில மூழ்கி விடும். சில தனித்தே மிதக்கும். சில கரை சேர்க்கும்.
எளிய மக்கள் நம்பிக்கையினை கேலி செய்வதை என்னால் ஏற்க முடியாது. கேலி செய்வோரால் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முடியுமா? மத நம்பிக்கைகளைத் தாண்டிய இணக்கம், ஒற்றுமைப்பட்ட வரலாறு இங்கிருக்கிறது. பன்மைச் சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும். எடுத்துரைக்க வேண்டும் எடுத்துக்காட்டாக பல முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் எங்கேனும் ஓர் உயிரிழப்பு நிகழ்கிறது. மனித உடலுக்கு வெளியே ஒரு துளி இரத்தமும் உற்பத்தி செய்யவியலாதவர்கள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கின்றனர். அழிக்கின்றனர். மனித உயிர்களை மலிவாக்கி அதிகாரத்துக்கு வரத்துடிக்கின்றனர்.
“இழிவான இச்சை” சிலருக்கு வாழ்வியல் இலக்காக இருக்கிறது. அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”.
– சோதுகுடியான், முஸ்லிம் முரசு ஜனவரி 2014
source: http://jahangeer.in/?paged=2