உலகின் பார்வையில் வாழும் முஸ்லிமுக்கும், அல்லாஹ்வின் பார்வையிலுள்ள முஸ்லிமுக்கும் வேறுபாடுள்ளது.
உலகில் ஒரு மனிதர் மிகச்சரியான முஸ்லிம் எனப் பெயர் பெற்றிருந்தாலும் அல்லாஹ்வின் முன்பு நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது!
தொண்டி நம்புதாளையில் பிறந்து சென்னை இராயபுரத்தில் வணிகம் புரியும் தாழை கலீல் கிப்ரான் 63 வயதுடையவர், கவிஞர். மௌலானா மௌதூதி கருத்துகளை உள்வாங்கி கவிதை புனைந்திருக்கிறார்.
‘‘அகமது மைதீ னுக்கும்
ஆமினா பீவி யார்க்கும்
மகனாகப் பிறந்தால் மட்டும்
முஸ்லிமாய் ஆகமாட்டார்’’
முஸ்லிம் பெயர் தாங்கிய, தாய், தந்தையர்க்கு பிறந்தால் மட்டும் ஒருவர் முஸ்லிமாக ஆகமுடியாது அதைத் தாண்டிய கடமையிருக்கிறது என்கிறார் கவிஞர். இவர் வரிகளை சிறகுகளாக்கி வான் நோக்கிப் பறந்தால் புதைந்திருக்கும் கருத்துகள் புதையலாய்க் கிடைக்கலாம்.
உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தாம் முஸ்லிம் தாய், தந்தைக்கு பிறந்து விட்டதால் முஸ்லிம் எனக் கருதிக் கொள்கின்றனர். பத்து சதம் முஸ்லிம், இருபது சதம் முஸ்லிம், முப்பது சதம் முஸ்லிம் என பெயர் தாங்கியுள்ள முஸ்லிம்கள் செயலில் இருந்தும் அமலில் இருந்தும் அகம்புறம் வாழ்க்கையிலிருந்து வகைப்படுத்தலாம்.
சிலர் சொல் அளவில் இஸ்லாத்தை தெரிந்திருப்பர். கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ். இதற்கு விரிவான விளக்கம் தெரியாது. ஐந்து கலிமா தெரியாத பல இலட்சம் பேர், தொழுகை விபரங்கள் தெரியாது குனிந்து நிமிரும் பல இலட்சம் பேர் இருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் தொழக்கூடிய மஸ்ஜித் வாயிலில் நின்று குர்ஆன் எத்தனை அத்தியாயம், வசனங்கள்? ‘ஹதீஸ்’ என்றால் என்ன? ‘ஹதீசேகுத்சி’ என்றால் என்ன? குர்ஆனில் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயம் தவிர மற்ற அத்தியாயங்களிலிருந்து ஏதாவது ஒரு வசனமாவது மனப்பாடமாகத் தெரியுமா? கேட்டோமெனில் கவிஞர் கூறிய வரிகளின் ஆழத்தை உணரலாம். பெயர் தாங்கியாக விருப்பவர் மட்டும் முஸ்லிமாக முடியாது என்று அவர் விதிக்கும் தகுதியின் நிபந்தனை. மிகச்சரியெனக் கருதும் நிலை ஏற்படும்.
இறைவனால் காட்டப்பட்ட வழியை விட்டு ஒதுங்கி வாழ்ந்து மற்றவற்றை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும்போது குஃப்ர் வழிகேட்டாளர் ஆகின்றனர். இந்த வழிகேடு வகை புரிவோரின் தன்மையினை முன் சொன்ன சதவிகிதத்தில் பிரித்துணரலாம்.
ஒரு மனிதர் அல்லாஹ் – தூதர் – குர்ஆன் – மறுமை ஏற்றுக் கொள்கிறார். நம்பிக்கை வைக்கவேண்டிய மறைமுக விஷயங்களையும் ஒப்புக் கொள்கிறார். நிபந்தனைகளை நிறைவேற்றுகின்றார். இத்தகையவர் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் வந்துவிடுகிறார். ஆனால் அவர் தனக்கு விருப்பமானதை மற்றவருக்கும் விரும்பாத வரை இறை உவப்பை அடையவியலாது. நன்மை அடையமுடியாது.
‘‘லன் தனாலுல் பிர்ரஹத்தா துன்பி கூ மிம்மா துஹிப்பூன். வமா துன்பி கூ மின்ஷையின் ப இன்னல்லாஹ பிஹீ அலீம்’’
”உங்களுக்கு விருப்பமானவற்றை செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையினை அடைந்திடமுடியாது.” (திருக்குர்ஆன் 3:92)
உலகின் பார்வையில் வாழும் முஸ்லிமுக்கும், அல்லாஹ்வின் பார்வையிலுள்ள முஸ்லிமுக்கும் வேறுபாடுள்ளது. உலகத்தினர் புறத்தோற்றத்தை கண்டு முடிவு செய்கின்றனர். அல்லாஹ் அகத்தை பார்க்கிறான். உலகில் ஒரு மனிதர் மிகச்சரியான முஸ்லிம் எனப் பெயர் பெற்றிருந்தாலும் அல்லாஹ்வின் முன்பு நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. நான் நல்ல முஸ்லிம் என்று உரைத்துக் கொண்டாலும் அல்லாஹ்விடம் தன்னை ஒப்படைத்து விட்டதாகக் கூறினாலும். உலக மக்கள் ஏமாந்தாலும் அல்லாஹ் ஏமாறுவதில்லை.
வணக்க முறைகள், தஸ்பீஹ் ஓதுதல், இறை தியானம் புரிதல். உண்ணுதல், பருகுதல் போன்றவைகளில் இஸ்லாத்தை கடைப்பிடித்து ஒழுகினாலும் வாழ்வின் மற்ற பக்குவங்களில் முதிர்ச்சியற்றிருக்கின்றனர். நட்பு ஏற்படுத்திக் கொள்வதில் நட்பு விலக்கிக் கொள்வதில் சுயநல அளவுகோல் கொண்டு செயல்பட்டு மன இச்சைகளுக்கு இடம் தருகின்றனர். கொடுக்கல், வாங்கல் வணிகம் அனைத்திலும் இச்செயல்பாடுகளே வெளிப்படுகின்றன.
இஸ்லாமிய நெறியை உண்மைத் தனமுடன் உவப்புடன் பின்பற்றுதலில் முஸ்லிம் வெளிப்படமுடியும். எந்த ஒரு தத்துவ நெறியும் முழுமையாகப் பின்பற்றப்பட்டு அக்கொள்கையை தமது கேரக்டராகவே மாற்றிக் கொள்ளும் போதுதான் வெற்றி கிடைக்கிறது. ஏற்றுக் கொண்ட கொள்கையை விடவும் எனது மனைவி, மக்கள், கார், பங்களா பெரிதல்ல என்று கொள்கையில் தம்மைக் கரைத்துக் கொள்பவர்களால் அத்தத்துவம் செழுமைக்குச் செல்கிறது. அந்த நிலைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்பவரே முஸ்லிம் என்ற பெயருக்குப் பொருத்தமானவர். திருக்குர்ஆன் கூறுகிறது.
‘‘யாஃஅய்யு ஹல்லஸீன ஆமனூஸ அதீ உல்லாஹ வஅதீ உர்ரஸ§ல’’
‘‘அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்! தூதரைப் பின்பற்றுபவராய்த் திகழுங்கள்.’’ (திருக்குர்ஆன் 4:59)
“நீங்கள் கீழ்ப்படிவீர்களாயின் நேர்வழி அடைவீர்கள்.” (திருக்குர்ஆன் 24:54)
கவிஞர் தன் வரிகளால் உரைக்கிறார்;
‘‘வாயகம் செயலில் தூய்மை
வந்திட வாழ்வு மின்னும்
தாயகம் ஊட்டும் பால்போல்
தலைமுறை குர்ஆன் ஆகும்.’’
– சோதுகுடியான், முஸ்லிம் முரசு டிசம்பர் 2013
source: http://jahangeer.in/?paged=5