மாத்தலேன்னா மதிப்பில்லை!
2005ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியான ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளச் சொல்கிறது ரிசர்வ் வங்கி
ஜனவரி 22 -ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘2005-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியான எல்லா ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து புது நோட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணம் என்ன என்பதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த அறிவிப்பு பெருமளவு கள்ள நோட்டுகளையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்கே என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டுகளில் பாதுகாப்பு அம்சம் மிகவும் குறைவு. தற்போது அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் எல்லாம் 2005-க்கு முந்தைய நோட்டுகளின் மாடலிலேயே அச்சிடப்படுகின்றன. ஆகவே 2005-ஆம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகளின் புழக்கத்தை முழுவதும் நிறுத்துவதன் மூலம் கள்ளநோட்டுகளை எளிதாக அடையாளம் கண்டு ஒழிக்க முடியும். அதேபோல் பலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தில் அதிகபட்சம் 2005-ஆம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகள் இருக்கும். இப்போது அவை அனைத்தையும் வெளியே வரவும் வாய்ப்பிருக்கிறது.
2005-ஆம் ஆண்டுக்குப் பின்பு வந்த ரூபாய் நோட்டுகளின் பின்பக்கத்தின் கீழே மையப்பகுதியில் அந்த நோட்டு அச்சிடப்பட்ட வருடம் இருக்கும். அப்படி வருடம் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வங்கியில் கொடுத்து மாற்றிவிட வேண்டும். ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகளை எல்லா வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தக் கணக்கும் கிடையாது. இதன் காரணமாக முடங்கி இருக்கும் கறுப்புப் பணம் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 1-ல் இருந்து வங்கிக் கணக்கு இல்லாத வங்கிகளில் பத்து நோட்டுகளுக்கு(1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும்) மேல் மாற்றினால் அடையாள அட்டையும், முகவரிச் சான்றும் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கியில் கணக்கு இருக்கும் பட்சத்தில் அடையாள அட்டை தரத்தேவையில்லை.
பழைய நோட்டுக்களை அரசே வாங்குவது புதிதல்ல. வருடா வருடம் வங்கிகளில் இருந்து பழைய நோட்டுகளைப் பெற்று அழித்து வருகிறது ரிசர்வ் வங்கி. 2012-13 ஆம் ஆண்டில்கூட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் சேர்த்து சுமார் 809 கோடி (எண்ணிக்கையில்) பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது. ஆனால் இதுபோல் நேரடியாக மக்களிடம் இருந்து குறுகிய காலத்தில் பெறுவது என்பது இதற்கு முன்னால் 1978-ஆம் ஆண்டு நடந்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை அழிப்பதற்காக இதுபோல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்ட்ரல் பேங்க்கின் முன்னாள் துணைப் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது, இது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். பொதுவாகவே ஒரு வங்கியில் 10 லட்சத்திற்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்தால் அந்தத் தகவலை வருமானவரித் துறைக்கும் ரிசர்வ் வங்கிக்கும் அந்த வங்கி அனுப்பிவிடும். இதன் மூலம் கறுப்புப் பணத்தை எளிதில் பின்தொடர்ந்து கண்டுபிடிக்க முடியும். அதே சமயம் 100 கோடி மக்கள் உள்ள நாட்டில் ஒவ்வொருவருக்கும் இந்தத் தகவலைக் கொண்டு செல்வது என்பது அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை. ரூபாய் நோட்டுகளை மாற்றும் காலத்தை ரிசர்வ் வங்கி அதிகப்படுத்தினால் சாத்தியமாகலாம்” என்கிறார்.
-புதிய பரிதி, (புதிய தலைமுறை)