புதுப்பிக்கப்படாத திருமணங்கள்!
வாழ்க்கையின் முதல் 20 – 25 வருடம் வரைதான் பெற்றோர்…பிறகு குப்பை கொட்டுவது என்னவோ கட்டிய மனைவியிடமோ அல்லது பெண்ணாய் இருந்தால் கணவனிடமோதான். ஆனால் பொருளாதாரத்தை துரத்தி, துரத்தியே தாரத்தை தூர விரட்டும் ப்ரொக்ராமிங் இப்போது பெரும்பாலானாவர்களிடம் பை-டிஃபால்ட் ஆக இன்ஸ்டால் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன்.
எல்லோருக்கும் தனது துணையுடன் ஒரு நெருக்கம் கல்யாண காலத்தில் ஏற்படும். அது தொடராமல் போவதற்கான காரணம் , மற்றும் நாம் பெருமை அடித்துக்கொள்ளும் சமுக நீதி , மனைவியை புரிந்து கொள்வது , அல்லது மனைவிக்குபிடித்த விசயங்களை சபையில் பேசினால் அது ‘பெண்டாட்டி தாசன்’ என்ற பெயருக்கு பயந்தே ஏறக்குறைய கட்டிய மனைவியை ஒரு “கெளரவ வேலைக்காரி’ மாதிரி நடத்தும் விசயத்தை எனது எழுத்துக்கும் வாசகர்களின் கருத்துக்கும் விட்டு விடுகிறேன்.
50′ 60′ வருடங்களின் காலகட்டத்தில் வீட்டில் 3 வேலை உணவுக்கே சொந்த நாட்டில் ஸ்யூரிட்டி இல்லை என்ற சூழ்நிலையிலும், ‘அவன் போரான்… நீ எதுக்கு வெட்டியா இருக்கே’ என்ற திட்டுக்கும் பயந்து பல பேர் வெளிநாடு புறப்பட்டனர்.
கப்பலில் வரும் வழியெல்லாம் வாந்தி, தலை சுத்தல் எதுவும் பெரிதாக தெரியாத அந்த தியாகிகள் நினைத்தது என்னவோ ‘காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்” என்ற நம்பிக்கைதான்.
இளமை… கல்யாண காலம், முதன் முதலில் கல்யாணத்துக்கு பிறகு வந்து இறங்கும் போது ‘பொட்டி பிரிக்கும் வைபவம்” இதில் சொந்தங்கள் பொருள்களுக்கு ஆலாய் பறக்கும் சூழ்நிலை இதில் எதிலுமே சம்பாதிக்கும் கூட்டம் ‘எதையும்” கற்றுக்கொள்ளவில்லை. சின்ன குழந்தைகள் பொருள்களுக்கு ஆசைப்பட்டால் பரவாயில்லை..வயதானபெண்களும் மாடர்ன் புடவைக்கும் , கூலிங் கிளாஸ் கண்ணாடிக்கும் ஆசைப்படும் கொடுமை.
இந்த விசயங்கள் ஏதோ அந்த காலத்தில் மலேசியா / சிங்கப்பூர் போன் ஆட்களை பற்றி எழுதியிருக்காப்லெ… என்று ஒற்றை வரியில் சொல்லி விட வேண்டாம் மக்களே!!
இப்போது துபாய் / சவூதி மற்றும் அமெரிக்கா , யூ.கே , ஆஸ்திரேலியா மற்றும் கோபால் பல்பொடி போன அத்தனை நாடுகளில் வசிக்கும் ஆட்களுக்கும் மற்றும் இந்தியாவிலேயே இருக்கும் ஆட்களுக்கும் பொருந்தும்.
ஏனெனில் ஸ்கிரிப்ட் ஒன்றுதான் அதை ஏற்றுக்கொண்டு வாழும் பாத்திரங்கள்தான் வேறு. ஒரு ஞாயமான மனித ஆசையில் பெரும்பாலும் மண்ணைத்தூவுவது ஈகோ பிடித்த இன்னொரு மனுசி / மனுசன் தானே தவிர எந்த ஒரு கொடூர மிருகமும் அல்ல.
முதலில் இந்த பிரச்சினைகள் அதிகமாகி வெடிக்காமல் எப்போதும் முள்மீது உட்கார்ந்திருப்பதற்கு காரணம் சில முதுகெலும்பு இல்லாத ‘Mummy Boy’ [அம்மா பையன்] களால்தான்.
ஒருவன் திருமணம் செய்து விட்டால் அவனது கட்டில் வரை சென்று அறிவுரை வழங்கும் பெரியவர்களால்தான் சந்தோசமாக இருக்க வேண்டிய திருமண வாழ்க்கை ‘சிங்கி’அடிக்க ஆரம்பிக்கிறது.
சம்பாதிக்க கணவன் வெளிநாடு போய்விட்டு வரும்போது ‘நீ ஊரில் இல்லாத போது உன் மனைவி என்னை மதிக்கவில்லையில் ஆரம்பித்து அந்த பெண்ணின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அடிமை மாதிரி மன்னிப்பு கேட்க வைக்கும் கலாச்சாரம் இப்போது நாம் வாய் கிழிய பேசும் ஹையர் செக்கன்டரியில் 98 % 99 % எனும் நவீன காலத்தில்தான்.
பரீட்சைகள் எதுவும் வாழ்க்கையை கற்றுத்தரவில்லை.
வாழ்க்கையை கற்றுத்தரும் பெரியவர்களும் ‘ஈகோ” பிடித்த மனிதர்களாய் இருந்து விட்டால் இளைய சமுதாயம் ஒரு நோய் தாக்கிய மாதிரி. ‘ நான் வந்து இறங்கியவுடன் என்னை பார்க்க வரவில்லை, ஆஸ்பத்திரிக்கு ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் வந்து பார்க்கவில்லை, ” என்று பிதற்ற ஆரம்பித்து விடுகிறது.
இப்படி குற்றம் குறைகள் பார்க்கும் அத்தனை விசயமும் திருமணத்தில் இருந்த அன்யோன்ய உணர்வு புதுப்பிக்கப்படாததால் திருமணமே புதுப்பிக்கப்படவில்லை என்பது என் கருத்து.
புதுப்பிக்கப்பட எத்தனையோ விசயங்கள் இருந்தும் வெளியூர் போகும்போது வேன் பிடித்து தெருவில் உள்ள பாதி சொந்தத்தை அழைத்துப்போய் வெளியூர் போனாலும் என் சாப்பாட்டு சிஸ்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் ஆட்களை சமாளித்து, வெளியூரிலும் பெண்களை சமைக்க வைத்து [குடும்பத்தை அழைத்துச்செல்லவில்லை….தன்னுடன் சமையல் செய்பவர்களைத்தான் அழைத்துப்போய் இருக்கிறார்கள்].
தனியாக பேச கூட வாய்ப்பில்லாத தாம்பத்யம் எந்த ஒரு அன்பை தந்துவிடும் என எனக்குத்தெரியவில்லை. இப்போது ட்ரன்ட் மாறினாலும் புதிதாக கல்யணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினர் ஒரு நல்ல ஹாலிடே ரிசார்ட் போய்வருகிற மாதிரி இந்திய சூழ்நிலைகள் பாதுகாப்பு இல்லாமல் போய் வெகுகாலம் ஆகிவிட்டது.
ஹனிமூன் போறவங்க இப்போது இன்னும் சில தம்பதியினரையும் அழைத்துப்போகும் அவலம்…..பாதுகாப்புகள் இல்லாத சூழ்நிலைதான்.
சொந்த நாட்டிலேயே இப்படி பயந்து மூவ் பன்னுவது இந்திய குடிமகன்கள் மட்டும் தானா?…இல்லை ‘குடி’மகன் களால்தான் இந்த சூழ்நிலையா? .
இப்போது ஏற்பட்டிருக்கும் வசதிகள் அன்பை அதிகரிக்குமா என்றால் கேள்விக்குறிதான். நான் ஸ்கைப்பில் பேசுகிறேன், டாங்கோவில் பேசுகிறேன் என்றாலும் கூடவே வெட்டியான விசயங்களுக்கும் கவனம் சிதறும். யாரோ ஒரு நடிகை எங்கே தொலைந்தால் என்று எழுதும் ஆர்டிக்கிளுக்கு குறைந்தது 15 பேர் வேலை மெனக்கெட்டு கமென்ட் எழுதுகிறார்கள். மத ரீதியாக திட்டிக்கொள்ளும் ஆட்களும் இணையத்தில் அதிகரித்து விட்டார்கள். தெருவில் நாய் நின்று குரைத்தால் நாமும் ஏன் குரைக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமலா கீபோர்டில் நம் கை இருக்கிறது??? தினன் தினம் இதை எல்லாம் மீறி பதில் எழுதி மிஞ்சிய நேரத்தில் கட்டிய மனைவி மீது அன்பு செலுத்த நேரத்தை தேடினால் எப்படி நேரம் கிடைக்கும்?.
இன்னொரு புதிய நோய்….குறைந்த வருவாயில் இருக்கும்போது நன்றாக தெரிந்த மனைவி, வசதி வாய்ப்புகள் கிடைத்த பிறகு இன்டெலெகச்சுவல் குறைந்து “அவ்லோ பெரிய ப்யூட்டி ஒன்னும் இல்லே” என்று சொல்லும், கம்பேர் பன்னும் புத்தி. வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டரா பார்த்துக்கொண்டே போனால் அதற்கு முடிவே இருக்காது.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல….பெண்களும் கம்பேர் செய்ய ஆரம்பிப்பதால் இப்போதைய சூழ்நிலையில் நிறைய “உடைந்துபோன திருமணங்கள்’ பெருகிவிட்டது. கணவனை சரியாகப்புரிந்து கொள்ளாத பெண்கள் தான் மிகவும் சரியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு கணவனின் மரியாதை குறையும் அளவுக்கு பேசும்போது நீண்ட காலம் வாழ வேண்டிய தம்பதிகள் சில சமயங்களில் கசப்பான அனுபவத்துடன் பிரியவும் வேண்டியிருக்கிறது.
கணவனின் பொருளாதார சூழ்நிலைகள் சரியாகும் வரை பொருமை காக்காத பெண்கள் சமயங்களில் சபையில் வைத்தே கணவனுக்கு இன்வஸ்ட்மென்ட் அனலிஸ்ட் மாதிரி பாடம் எடுக்கும்போது “ஜக்கி” யாவது கணவன் மட்டுமல்ல…கேட்டுக்கொண்டிருக்கும் நாமும்தான்.
இதற்கெல்லாம் காரணம் சம்பாதிக்கும் ஆண்கள் மனைவி மீது செலுத்தும் அன்பில் குறை வைப்பதாக கூட இருக்கலாம்.
நான் அவதானித்த சில விசயங்கள்:
* கல்யாணம் கட்டிக்கொடுத்த பிறகு பெரியவர்களின் தலையீடு எல்லாவற்றிலும் இருந்தால் அந்த கல்யாணம் வெகுதூரம் செல்லாது. அது கடமைக்காக நடந்த நிகழ்வுதான்.
* பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு தொடர்ந்து செய்யப்படும் உதவி அந்த குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் கெடுதி. இது உணவுக்காக / மருத்துவத்துக்காக செய்யப்பட்டால் பரவாயில்லை.
* தாய்க்கு கொடுக்கும் மரியாதையால் கட்டிய மனைவியை துச்சமாக மதிக்கும் செயல் , கர்ம விதியின்படி மகளின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.
* வெளியூருக்கு குடும்பத்துடன் போய் டி.வி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருப்பதற்கு பதில் வீட்டிலேயே இருந்துவிடலாம்.
* நம் ஊர் பகுதியில் இருக்கும் ‘பெண் கொடுத்து பெண் எடுக்கும்’ சூழலில் நடக்கும் விவாகரத்துகள் தேவையில்லாத ஈகோ விலும் , “திடீர்” சகோதரப்பாசத்திலும் நடப்பதை தவிர்க்க சரியான மெக்கானிசம் தேவை.
* அடிக்கடி அன்பு செலுத்த வாய்ப்பில்லாமலும் , வாய்ப்புகள் இருந்தும் காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொள்வதிலும் காட்டும் ஆர்வத்தின் முக்கியத்தை விட அன்பும் அன்யோன்யமும் முக்கியம்.
* பிரச்சினைகளில் முடிவெடுக்காத கணவன் அம்மாவிடம் / தந்தையிடம் கேட்டு சொல்கிறேன் என்றாலே அவனுக்கு முடிவெடுக்க / பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரியாத “வெட்டிபீஸ்” என்று நாம் முடிவுக்கு வந்து விடலாம்.
குடும்பத்துக்குள் நடக்கும் விசயம் ராய்ட்டர் நியூஸ் மாதிரி பரவிக் கொண்டிருந்தால்…. சில ஜோடிகளின் திருமணம்ஸ due for renewal.
ZAKIR HUSSAIN
source: http://adirainirubar.blogspot.in/2013/11/blog-post_12.html