பசுமை பள்ளிவாசல்கள் அமைப்போம்
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்ன என்றால் ‘புவி வெப்பமயமாதல்’ என்று உடன் சொல்லி விடலாம். அந்த அளவு இன்று உலகை இந்த பிரச்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
பசுமை பள்ளிவாசல்கள் அமைப்போம்
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்ன என்றால் ‘புவி வெப்பமயமாதல்’ என்று உடன் சொல்லி விடலாம். அந்த அளவு இன்று உலகை இந்த பிரச்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
உலகின் சில பகுதிகளில் சில நேரங்களில் குழாய்களில் தண்ணீர் ஐஸாக உறைந்து தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அளவு குளிர். ரோடுகள் எல்லாம் ஐஸ்களால் சூழப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்படும். அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு. பிலிப்பைனை தாக்கிய புயல். அதில் 6000 க்கும் மேலான மக்கள் பலி என்று சமீப காலங்களில் நடக்கும் பேரழிவுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
இந்த பேரழிவுகளுக்கு நாமும் ஒரு காரணம். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கார்பன் இந்த உலகை தூசுக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது.
இங்கிலாந்தில் உள்ள மேட் MADE (Muslim Agency for Development Education) என்ற என்ற அமைப்பு உலக வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கும் பொருட்டு பல சேவைகளை செய்து வருகிறது. பள்ளி வாசல்களை எல்லாம் பசுமைக் குடில்களாக தற்போது இவர்கள் மாற்றி வருகின்றனர். பள்ளி வாசல்கள் எங்கும் தற்போது பசுமை பூத்துக் குலுங்குகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் நமக்கு இறைவனின் வல்லமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையும் இதனையே நமக்கு சொல்கிறது.
“ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2320)
ஆஹா… என்ன அழகிய ஒரு அறிவுரை. தொழுது கொள், ஹஜ் செய், ஜகாத் கொடு என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. ஒரு மரத்தை நட்டு அதனால் உயிரினங்கள் பயனுற்றால் அதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்ற நபிகளின் வார்த்தையை அந்த இளைஞர்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். தொழுவதற்காக கை கால்களை அலம்பி சுத்தம் செய்து கொள்ளும் போது கூட தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்ற அறிவுரையையும் நபிகள் நாயகம் நமக்கு போதித்து இருக்கிறார்.
சுற்றுச் சூழலோடு அமைந்த பள்ளி வாசல்கள் என்றால் என்ன?
மான்செஸ்டரில் உள்ள நஜ்மி பள்ளி வாசல் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த பள்ளி கட்டுமானமானது ஏற்கெனவே உபயோகப்படுத்தப்ட்ட மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த பள்ளி வாசலின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் சூரிய சக்தியால் அமைக்கப்பட்டது. மேற் கூரைகள் கண்ணாடிகளால் வேயப்பட்டுள்ளது. ஒளி தேவைப்படும் போது சூரியனின் ஒளியையே பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டியுள்ளார்கள். பள்ளி வாசலை சுற்றி பசுமை நிறைந்த மரங்களை வளர்க்கின்றனர்.
இந்த அமைப்பின் உப தலைவர் கூறும் போது: ‘ஒரு வணக்கத்தலம் இயற்கையோடு கூடியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த சூழல் இருந்தாலே இறைவனை வணங்குவதற்கு நமக்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அமைப்பதற்கு நமக்கு அதிக பொருளாதார செலவும் கிடையாது.
சிங்கப்பூரில் 2012ல் இதே போன்ற ஒரு பள்ளியை நிர்மாணித்தோம். கத்தாரிலும் இதே போன்ற பள்ளிகளை அமைக்க திட்டமிருக்கிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து பள்ளியை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு திருப்பி விடுவது. பள்ளியை சுற்றி மரங்கள் செடி கொடிகளை வளர்ப்பது.
வெள்ளிக் கிழமைகளில் சொற்பொழிவுகளில் சுற்று சூழலை மாசுபடாமல் எவ்வாறு பராமரிப்பது என்பதையும் மக்களுக்கு புரிய வைப்பது. பள்ளிக்கு தொழ வருபவர்கள் கூடிய வரை நடந்தோ, சைக்கிளிலோ, அல்லது டூ வீலரோ வர அறிவுறுத்துவது. ஒரு நபருக்காக ஒரு நான்கு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது. இது போன்ற பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் அதிக ஆதரவும் இருக்கிறது”
“இந்த உலகை மாசுபடாமல் காக்கும் பொருப்பு மற்றவர்களை விட முஸ்லிம்களுக்கு அதிகம் உண்டு. அதனை இறைவனின் இல்லமாகிய பள்ளி வாசல்களிலிருந்து தொடங்குதல் மிக பொருத்தம் இல்லையா?’ என்று கேட்கிறார் இந்த அமைப்பின் தலைவர் முராத்.
– suvanappiriyan