மாமியார் மருமகள் பிரச்சினைகள்: ஒரு சமநிலையான அலசல்
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். ஆம் பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களும் இல்லை, மனிதனும் இல்லை. ஆனால் இந்தியாவில் மனிதனால் கடைசி வரை தீர்க்கவே முடியாத இரண்டு பிரச்சினைகள் உண்டென்றால் அது கடன் பிரச்சினையும், மாமியார்-மருமகள் பிரச்சினையும்தான்.
.நீ என்னப்பா பொம்பள மாதிரி லேடிஸ் பிரச்சினை பத்திலாம் பேச ஆரம்பிச்சட்ட என்று கேட்பது புரிகிறது…ஆனால் இப்பிரச்சினையால் நடுவில் மாட்டிக்கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாய் சிக்கித்தவிப்பது நாம்தானே…. கண்டுபிடிச்சீட்டீங்களா.. (ஆமாம் அதேதான் நம்ம வூட்லயும் இதே பிரச்சினைதான்..)
அந்தக்காலத்தில் நிறைய கல்வியறிவில்லாக் காலத்தில் மட்டுமல்ல வளர்ந்துவரும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் தீர்க்கமுடியாத ஒரே பிரச்சினை இந்த மாமியார்-மருமகள் பிரச்சினைதான்.
இப்பிரச்சினைக்கெல்லாம் ஒரே காரணம் ஈகோ பிரச்சினைதான். விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருவரிடமுமே இல்லாமல் போவதுதான். ஆண்டு அனுபவித்து பல்வேறு அனுபவங்களைப் பெற்ற பெரியவர்களே விட்டுக்கொடுத்து போகாதபோது இருபது வயது மருமகளிடம் எப்படி விட்டுக்கொடுக்க எதிர்பார்க்க முடியும்?!
நான் என் மனைவியிடம் அடிக்கடி சொல்லுவேன், ”ஆயிரம் ஆம்பளங்க இருந்தாலும் அந்த இடத்துல எந்த பிரச்சினையும் வராது, ஆனா ரெண்டு பொம்பளங்க போதும் ஒரு ஊரே அழியறதுக்கு” என்று. (நல்ல மாமியார் மருமகள் யாராச்சும் இருந்தா அடியேன அடிக்காம மன்னிக்கனும்)
முக்கியமாய் பிரச்சினை வரும் ஒருசில காரணங்களை இங்கே பட்டியலிடுகிறேன். அவை எல்லா காலத்திற்கும், எல்லாருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்..
1. மாமியார் சொன்ன சாப்பாட்டை மருமகள் செய்யவில்லை.
2. வேறு யாரையோ திட்டும்போது தன்னைத்தான் திட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வது(உண்மையிலும் அப்படி நடப்பதுண்டு)..
3. தன் வீட்டார் வரும்போது மாமியார் அவர்களிடம் பேசாமல் அவமதிப்பது.
4. சரியான நேரத்திற்கு சாப்பாடு தயார் செய்யாமல் அல்லது பரிமாறாமல் இருப்பது.
5. புதிதாக முளைத்திருக்கும் பிரச்சினை- தொலைக்காட்சி பார்ப்பதில் மாமியார் மருமகளிடையே உள்ள கருத்து வேறுபாடு.
எந்தப்பக்கம் சுற்றிப்பார்த்தாலும் பிரச்சினை இதைச்சுற்றித்தான் இருக்கும்..
இருவரின் சண்டையெனும் தீயில் நடுவில் மாட்டிக்கொண்டு கருகுவது கணவன்மார்கள்தான். அந்தக்காலத்தில் ஸ்டவ் வெடித்து மருமகள்கள் மட்டும் தான் கருகினார்கள். ஆனால் இப்போ அவங்க ரொம்ப தெளிவாயிட்டாங்க. நம்மள எரியவிட்டுட்டு அவர்கள் குளிர் காய்கிறார்கள். இதனாலதான் நெறைய ஆம்பளைங்க கருப்பா இருக்காங்க போலப்பா…
இதில் கணவனாகப்பட்டவன் யார்பக்கம் பேசமுடியும்?! யாரை விடுவது, யாரை விட்டுக்கொடுப்பது?! முதியோர் இல்லங்கள் தோன்றுவதை நான் சத்தியமாய் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அவை தோன்ற என்ன காரணம் என்று ஒருதலைப்பட்சமாய் யோசிக்காமால் இருபக்கமும் யோசித்துப்பாருங்கள். பெற்ற தாயை தெருவில் விடும் அளவுக்கு உலகில் எல்லோருமே மனசாட்சி இல்லாத மனிதர்களா?
இங்கிருந்தால்தான் எப்பொழுதும் பிரச்சினையாய் இருக்கிறது. அவர்கள் அங்காவது நல்லபடியாய் இருக்கட்டும் என்று கூட அந்த தாயின் மகன் நினைத்திருக்கலாம் அல்லவா? அவனும் என்னதான் செய்வான்?!
நீ சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதானே கூறுகிறீர்கள்!பெற்றதாய் தந்தையர் முக்கியம்தான். எனக்கு என் தாய்தந்தையர்தான் முக்கியம், நீ தேவையில்லை என்று ஒவ்வொரு கணவன்மாரும் கூறத்தொடங்கிவிட்டால் அப்புறம் இந்தியாவில் ஒருநாளைக்கு ஒருலட்சம் விவாகரத்துக்கள் அரங்கேறும்…
மாமியார்கள் தன் மருமகளை மறு மகளாய்ப் பார்க்கும் காலம் வரும் வரை இப்பிரச்சினை ஓயாது. மருமகள்களும் மாமியாரை மற்றொரு தாயாய் பார்க்கும் வரை இப்பிரச்சினை மாறாது.
ஆயிரம் முதியோர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் அத்தனை பிள்ளைகளுமே சுயநலக்காரர்கள், மனசாட்சியே இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. (ஐயோ சத்தியமா நான் அப்படிலாம் எதுவும் பண்ணலீங்க. என்னை தப்பா நெனைக்காதீங்க..) ஆனால் மாமியார்-மருமகள் பிரச்சினைய ஒருநாள்ள பேசிமுடிக்க முடியாதுப்பா…எனக்கு இப்பவே கண்ணக்கட்டுது… ஆளவிடுங்க
-கலியபெருமாள்