நற்குணங்கள் தடுமாறிப் போனதேன்?
M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி
இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.
”உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.” (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)
உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்”. (ஆதாரம்-புகாரி)
ஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும், என்று நபியவர்கள் நவின்றார்கள் (ஆதாரம்-புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.
ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.
இவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னுடைய இரட்சகனே! என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாக” என்று பிராத்தித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
நற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பரிசைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது” என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு மனிதன் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்து விடும்போது அம்மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை பெற்றுத் தர நான் பொறுப்பேற்கின்றேன் தன் குணங்களை சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவர்க்கத்தில் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர பொறுப்பேற்கின்றேன் (ஆதாரம்: அபுதாவூத்).
இறைவன் அளித்த அருட்கொடையான நாவை நல்வழியில் பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள் என்று இறைவனும் கூறிகிறான்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் எத்தகையவரென்றால் அவர்கள் வீணான பேச்சு செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள். இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள் இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரம் கொண்டு அதில் நிலையாக தங்கியிருப்பார்கள் (அல்குர்ஆன் 23:1-11)
மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு அசைவிலும் அவனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவனும் அவனின் தூதரும் கூறி உள்ளார்கள்.
“இறைவனை தவிர வேறு கடவுள் இல்லை அவனின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்” என்று வெறும் வாயளவில் கூறிக் கொள்வதால் மட்டும் முஸ்லிம் (இறைநம்பிக்கையாளர்) ஆகிவிட முடியாது.
இறைவனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறிய ஒவ்வொன்றையும் தன் வாழ்வில் நம்பிக்கை கொண்டு அதைச் செயல்வடிவில் கொண்டு வருவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அதனைச் செயல்படுத்தினால்தான் முஸ்லிமின் ஈமான் என்ற இறை நம்பிக்கை முழுமைபெறும்.
வெறும் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தன் மனம் போன போக்கில் செல்வபர்களை பார்த்து இறைவன் அவர்களை கால்நடைகளைக்கு ஒப்பிட்டு கூறிகிறான்.
அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள்(நற்போதனைகளை) கேட்பதில்லை. இத்தனையோர் கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை அவற்றை விடவும் வழிகேடர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்(அல்குர்ஆன் 7:179).
இவ்வுலக வாழ்வையே சதமென மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது இதுவே நம் வசனங்களை பொய்பித்தவர்க்கு உதாரணமாகும். (அல்குர்ஆன் 7:176)
உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் நற்குணங்களால் தன்னை அலங்கரித்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலை மாறி தடுமாறி போனது ஏன்?
எந்த மதத்திலும் கூறாத ஒரு நற்பண்பை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது என்று பெருமிதத்துடன் கூறும் நாம் மார்க்கம் கூறும் முறையில் வாழாததைப் பார்க்கும் போது மனம் வேதனை அடையாமல் இருக்க முடியவில்லை.
எனவே, நமது தவறுகளை களைந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நல்லொழுக்கத்தை முழுமைபடுத்த அனுப்பட்டார்களோ அந்த நல்லொழுக்கத்தின்படி நம் வாழ்கையை அமைத்து அதன்படி வாழ்ந்து நாம் அனைவரும் இறைவனின் திருப்பொருத்ததை பெற்று பெருமையில் உயர்ந்த சுவனத்தை அடைவோமாக! ஆமீன்!
source: http://gulamthasthageer.blogspot.in/2012/12/blog-post_1383.html#more